Tuesday 26 June 2018

ஆபத்தாகும் கல்லீரல் நோய்

ஆபத்தாகும் கல்லீரல் நோய்: அரசு கவனம் செலுத்துமா? தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கு.கணேசன் உ லக சுகாதார நிறுவனம் 2030-க்குள் ‘ஹெபடைடிஸ்’ (Hepatitis) எனும் கல்லீரல் நோயை உலக அளவில் ஒழித்துவிட வேண்டும் என்னும் முனைப்புடன் செயல்படுகிறது. ‘எளிதில் தடுத்துவிட முடியும்; ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியும்’ என்னும் நிலையில் உள்ள இந்நோயை, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் வளரவிட்டு வேடிக்கைபார்ப்பதாகக் குற்றம்சாட்டுகிறது, அந்நிறுவனம். இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ‘ஹெபடைடிஸ்-சி’ எனும் கல்லீரல் நோய் பாதிப்பு இருக்கிறது. இது, இங்குள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட ஆறு மடங்கு அதிகம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டுதோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் கல்லீரல் நோயால் இறக்கின்றனர். தொற்றுநோய் வரிசையில் காசநோய்க்கு அடுத்தபடியாக அதிகம் உயிர்ப் பலி கேட்கும் நோயாக இது வளர்ந்துவருகிறது. வருடத்துக்கு வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் உலக சுகாதார நிறுவனம், ‘காலத்தோடு இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் சுருக்க நோய் போன்ற கொடுமையான நோய்கள் இதன் பின்விளைவாக வருவதும் அதிகரித்துவிடும். அதன் விளைவால், இளமையில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அப்போது நாட்டின் பொது சுகாதாரத்துக்கு மட்டுமன்றி, பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்’ என்று எச்சரித்துள்ளது. உயிர்க்கொல்லி நோய்கள் கல்லீரல் அழற்சி ஆவதை ‘ஹெபடைடிஸ்’ என் கிறோம். பாக்டீரியா/வைரஸ் தொற்று, மது அருந்துவது, தேவையில்லாமல் மாத்திரை, மருந்துகளைச் சாப்பிடு வது போன்றவற்றால் கல்லீரல் அழற்சி ஆகிறது. இவற்றில் ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, ஈ எனும் வைரஸ் தொற்றுகளால் கல்லீரல் பாதிப்படைவதுதான் அதிகம். ஹெபடைடிஸ்-பி மற்றும் சி வைரஸ்களால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்குரிய சான்று. ஹெபடைடிஸ்-ஏ மற்றும் ஈ வைரஸ் தொற்றுகள் சுகாதாரமற்ற குடிநீரின் மூலமும் அசுத்தமான உணவு வழியாகவும் நமக்கு நோயைத் தருகின்றன. இவற்றால் மனித உயிருக்கு அவ்வளவாக ஆபத்தில்லை. ஆனால், ஹெபடைடிஸ்-பி, சி மற்றும் டி வைரஸ் தொற்றுகள் ஆபத்து மிகுந்தவை. இவை பரிசோதிக்கப்படாத ரத்தம் மூலமும், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்கள் வழியாகவும் அடுத்தவர்களுக்குப் பரவுகின்றன. கர்ப்பிணிக்கு / பாலூட்டும் தாய்க்கு இந்த நோய்கள் இருந்தால் குழந்தைக்கும் ஏற்படும். பாதுகாப்பற்ற/தகாத உடலுறவு மூலம் இவை மற்றவர் களுக்குப் பரவுகின்றன. இந்த நோய்களின் பொதுவான அறிகுறி மஞ்சள் காமாலை. பசி குறைவது, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அதீத களைப்பு, எலும்புகளில் கடுமையான வலி போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இவை எல்லாமே சில வாரங்களில் மறைந்து விடும். ஆனால், நோய் உள்ளுக்குள் மறைந்திருக்கும். தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமலேயே இந்த நோயாளிகள் மற்றவர்களுக்கும் பரப்புவார்கள். நாட்கள் ஆக ஆக இவர்களுக்குக் கல்லீரல் சுருங்கிப் புற்றுநோய் வரும். ஆகவேதான் இவற்றை ‘உயிர்க்கொல்லி நோய்கள்’ என்கிறோம். தடுக்க வழியுண்டா? சுத்தமான குடிநீரை அருந்துவது, சுகாதாரம் மிகுந்த உணவைச் சாப்பிடுவது ஆகியவற்றின் வழியாக ஹெபடைடிஸ்-ஏ மற்றும் ஈ வைரஸ் தொற்றுகளை எளிதில் தடுத்துவிடலாம். மேலும், ஹெபடைடிஸ்-ஏ, ஹெபடைடிஸ்-பி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கத் தடுப்பூசிகளும் உள்ளன. ஹெபடைடிஸ்-சி நோய்க்குத் தடுப்பூசி இல்லை என்றாலும், அதைப் பூரணமாகக் குணப்படுத்துவதற்கு நவீன மருத்துவத்தில் நல்ல மருந்துகள் வந்துள்ளன. ஆனால், சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சுமார் 95 % ஹெபடைடிஸ் நோயாளிகள் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமல் சிகிச்சைக்கே வராமல் இருக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்களிடம் இந்த நோய்கள் குறித்தும் தடுப்புவழிகள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும், நம் சுகாதார அமைப்புகள் அதிக கவனமாக இயங்கவில்லை என்பதையும்தான் இது வெளிப்படுத்துகிறது. அரசு என்ன செய்யலாம்? இன்றைய நிலையில் கல்லீரல் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசியத் திட்டங்கள் வலுவாக இல்லை என்பது நிதர்சனம். குழந்தைகள்கூடப் பாதிக்கப்படுகிறார்கள் எனும் நிலையில், இந்த நோய்க்கு எதிராக முனைப்புடன் போராட இந்தியா தயாராக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். இதற்கு முதல் படியாக, கல்லீரல் நோய்க்கான ‘முன்னறிதல் பரிசோதனை வசதி’களை (ஸ்க்ரீனிங் டெஸ்ட்) எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுக்க வழிசெய்வதும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதும், ஏற்கெனவே சிகிச்சையில் உள்ளவர்கள் அதைத் தொடர்ந்து எடுக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதும் மிக முக்கியம். மேலும், இந்த நோயுள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைத்து, வயிறு மற்றும் குடல்நோய் சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தால், நோய் முழுவதுமாகக் குணமாகும். அடுத்து, ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் மூலம் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, ஹெபடைடிஸ் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இவற்றுக்குள்ள தடுப்பூசிகளை எல்லோருக்கும் இலவசமாகப் போடுவது ஆகியவையும் இன்றைய அவசரத் தேவைகள். மக்களுக்குச் சுத்த மான குடிநீர் கிடைக்க வழிசெய்ய வேண்டியது மக்களாட்சி செய்யும் ஓர் அரசின் தார்மீகக் கடமை. ரத்தம் மற்றும் அதன் தொடர்பான பொருட்களை நோயாளி களுக்கு வழங்குவதில் எவ்வித முறைகேடுகளும் நேராமல் இருக்க ரத்த வங்கிகளை முறையான இடைவெளிகளில் சோதிப்பதும், நாட்டில் போலி மருத்துவர்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். இறுதியாக ஒன்று, ஹெபடைடிஸ்-சி நோய்க்கான மாத்திரை விலை மிகமிக அதிகம். இதனாலேயே பல நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதில்லை. இந்த நோயுள்ளவர்கள் அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டுமானால், இந்த மருந்தின் விலையைக் கட்டுப்படுத்துவதும், அரசு மருத்துவமனைகளில் எப்போதும் இது தாராளமாகக் கிடைக்க வழிசெய்வதும் அவசியம். இத்தனை வழி களையும் திறந்து வைத்தால்தான், 2030-க்குள் ‘ஹெபடைடிஸ்’ நோயை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க முடியும்; உலக சுகாதார நிறுவனத்தின் கனவும் நனவாகும். அதற்குத் தேவையான செயல் திட்டங்களைத் தேசிய அளவில் புதிதாகக் கொண்டுவந்து, போதுமான நிதியை ஒதுக்கி, அரசு இயந்திரங்கள் முனைப்புடன் செயல்பட மத்திய அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். மனது வைக்குமா மத்திய அரசு? - கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday 24 June 2018

மூக்கு அழகும் முக்கியம்!

உடல் அழகை மேம்படுத்துவதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. ஒருசிலர் மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் படர்ந்திருக்கும். அழுக்குகள் சேர்ந்தும் அவதிக்குள்ளாக்கும். அது முக அழகுக்கு பங்கம் விளைவிக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் சற்று ஆறியதும் அதனை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும். அகன்ற போர்வையை தலையில் மூடி முகத்தில் நீராவி படியும்படி ஆவி பிடிக்க வேண்டும். நீராவியால் சருமத்திற்கு எரிச்சலோ, காயமோ ஏற்பட்டு விடக் கூடாது. 10-15 நிமிடங்கள் தொடர்ந்து நீராவியை மூக்கு பகுதியில் நுகர்ந்துவிட்டு டவலால் துடைக்க வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் மூக்குப் பகுதி சுத்தமாக இருக்கும். மூக்கில் படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் குழைத்து மூக்கில் பசை போல் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும். மூக்கு பகுதியில் உள்ள அழுக்குகள் அகன்றுவிடும். கரும்புள்ளிகளும் மறையத் தொடங்கும். பேக்கிங் சோடாவுடன் வினிகரும் சேர்த்து பயன்படுத்தலாம். மூக்கில் ஆங்காங்கே தென்படும் கருப்பு நிற புள்ளிகளை போக்குவதற்கு ஓட்ஸையும் உபயோகிக்கலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸுடன் மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை மூக்கின் மேல் பூசி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். ஓட்ஸுடன் தக்காளி, தேனையும் பயன்படுத்தலாம். 4 தக்காளி பழங்களை ஜூஸாக்கி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு ஓட்ஸ் கலந்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். வாரம் ஒரு முறை செய்து வந்தால் போதும். மூக்கு பொலிவுடன் காட்சியளிக்கும். முட்டையின் வெள்ளைக்கருவை மூக்கில் விரல்களால் அழுத்தி தடவ வேண்டும். அது உலர்ந்ததும் மீண்டும் ஒருமுறை வெள்ளைக்கருைவ பூச வேண்டும். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். இரண்டு வாரம் தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகளுக்கு தீர்வு காணலாம்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Saturday 23 June 2018

‘தலை’ காக்கும் பொடு‘தலை!’

‘தலை’ காக்கும் பொடு‘தலை!’ டாக்டர் வி. விக்ரம் குமார் வேதி களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கத்துக்கு முன்பு, வயல் வரப்புகளில் நிறைய சிறுசிறு மூலிகைகள் நிரம்பியிருந்தன. தற்போது அவற்றில் பெரும்பாலானவை காணாமல் போய்விட்டன. வேதிப்பொருட்களின் வீரியத்தைத் தாண்டி சில மூலிகைகள் வளர்ந்தாலும், அவற்றைக் களைச் செடிகள் என்று மக்கள் பிடுங்கி எறிந்துவிடுகின்றனர். அவ்வாறு பலராலும் தவறாகக் கருதப்படக்கூடிய மூலிகைதான் ‘பொடுதலை’. நோய்க்கான தீர்வைத் தனது பெயரிலேயே பொதிந்து வைத்திருக்கும் மூலிகை இது. தலையில் அரிப்புடன், வெள்ளை நிறப் பொக்கு உதிரும் பொடுகுத் தொல்லைக்கான அற்புதமான மருந்து பொடுதலை தாவரத்தில் இருக்கிறது. பெயர்க் காரணம்: பொடுகுத் தொந்தரவுக்கு இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பயன்படுவதால், ‘பொடுதலை’ எனும் பெயர் உருவானது. பொடுதிலை, பூற்சாதம், பூஞ்சாதம் ஆகிய வேறு பெயர்களும் பொடுதலைக்கு உண்டு. நீர் நிறைந்த பகுதிகளிலும் மழைக்காலத்திலும் தாராளமாக வளர்ந்து கிடக்கும் தரைபடர் பூண்டு வகை பொடுதலை. அடையாளம்: தண்டு முழுவதும் சிறிய ரோம வளரிகள் காணப்படும். விளிம்புகளில் வெட்டுகள் கொண்ட சிறிய இலைகளை உடையது. காயானது திப்பிலிபோல இருந்தாலும், அளவில் சிறியதாக இருக்கும். கணுப்பகுதியில் வேர் உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். கருஞ்சிவப்புடன் வெண்ணிறம் கலந்த அழகான மலர்களை உடையது. ‘வெர்பினாசியே’ (Verbenaceae) குடும்பத்தைச் சார்ந்த பொடுதலையின் தாவரவியல் பெயர் ‘ஃபைலா நோடிஃபுளோரா’ (Phyla nodiflora). டிரைடெர்பினாய்ட்ஸ் (Triterpenoids), நோடிஃபுளோரிடின் (Nodifloridin), லிப்பிஃபுளோரின் (Lippiflorin), ரூடின் (Rutin) போன்ற வேதிப்பொருட்களும் இருக்கின்றன. உணவாக: மூல நோய்க்கு இதன் இலையை நெய்யில் வதக்கி, உளுத்தம் பருப்பு சேர்த்துத் துவையலாகச் சாப்பிடலாம். மலமும் சிரமமின்றி வெளியேறும். இதன் இலைகளோடு சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட, சிறுநீர் எரிச்சல் குறையும். பழைய அரிசியுடன், இதன் காயைச் சேர்த்து ஒரு கொதி மட்டும் வேகவைத்து, பின் வெந்த அரிசியைக் காயவைத்து நொய்யாக்கி, வயிறு மந்தத்துடன் அவதிப்படும் குழந்தைகளுக்குக் கஞ்சியாக்கிக் கொடுக்க பலன் கிடைக்கும். பொடுதலை இலைகளுடன் புதினா, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துத் துவையல்போலச் செய்து, சோற்றுடன் பிசைந்து சாப்பிட சுவாசக் கோளாறுகள் மறையும். மருந்தாக: தோலில் ஏற்படும் கருநிறத் திட்டுகளை (Hyper pigmentation) குறைப்பதற்குப் பொடுதலை பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மெலனின் உற்பத்தியைத் தேவையான அளவுக்கு பொடுதலை முறைப்படுத்தும், பதற்றத்தைச் சாந்தப்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பது (Anxiolytic), கொசுப்புழுக்களை அழிக்கும் தன்மை போன்ற திறன்களும் பொடுதலைக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டு மருந்தாக: வறுத்த ஓமத்துடன் பொடுதலையைச் சேர்த்தரைத்து, நீர்விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, ஒரு சங்கு அளவு கொடுக்க, குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல், வயிற்றுவலி ஆகியவை கட்டுப்படும். பொடுதலைக் காயோடு மஞ்சள் சேர்த்து மையாக அரைத்து, அடிப்பட்ட புண்கள், கட்டிகள் மீது தடவலாம். சிறு கட்டிகளுக்கு, பொடுதலையைச் சிறிது நீர்விட்டு மசித்துக் கட்டலாம். பொடுதலையின் காய், இலையை இடித்துச் சாறு பிழிந்து, சம அளவு நல்லெண்ணெய் கூட்டி, சிறிது மிளகுத் தூள் சேர்த்து வெயிலில் வைத்து நன்றாக சுண்டச் செய்து, சாறு முழுவதும் வற்றியபின் எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். பொடுகுத் தொந்தரவு இருப்பவர்கள் இந்தத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்துவர பொடுகு, தடமின்றி மறையும். மேலும் முழுத் தாவரத்திலிருந்து சாறு எடுத்துபின், நல்லெண்ணெய் கூட்டி அடுப்பில் வைத்துக் காய்ச்சி, இறுதியில் மிளகுத் தூள் சேர்த்தும் கூந்தல் தைலமாகப் பயன்படுத்தலாம். பூஞ்சைத் தொற்றுக்களை எதிர்க்கும் ஆற்றல் பொடுதலைக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘தலை’க்கு வந்த நோயை விரட்டுவதால், மூலிகைக் குழுவுக்கு ‘தலை’மையேற்கும் பொறுப்பை பொடு‘தலை’க்கு வழங்கியுள்ளது இயற்கை எனச் சொல்லலாம்!

கல்விச்சோலை - kalvisolai health tips

யோகாவில் கரையும் சர்க்கரை!

யோகாவில் கரையும் சர்க்கரை! மருத்துவர் கு. சிவராமன் இந்தியாவில் பிறந்து இன்று உலகெங்கும் கோலோச்சிக்கொண்டிருக்கிறது, யோகா! சர்வதேச அளவில் யோகா, தியானம் போன்றவை கவனம் பெற்றதற்கு மகரிஷி மகேஷ் யோகி, பி.கே.எஸ். அய்யங்கார் போன்ற யோக ஆசான்கள் முக்கியக் காரணம். இவர்கள் தொடங்கி, உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகாவைக் கொண்டு சேர்த்தவர்கள் ஆன்மிகத்தின் வழி ஆரோக்கியம் பேசியவர்கள்தான். தமிழகத்தின் தென் எல்லையிலிருந்து ஹரித்வாருக்குச் சென்ற பத்தமடை சிவானந்த சுவாமிகள்தான், அதுவரை ஞான வழித்தேடலில் சென்றோருக்கு மட்டுமே இருந்த யோகக் கலையை, சாமானியனின் நலத்துக்காக வடிவமைத்தும் பரிந்துரைத்தும் செய்த ஆன்மிகக் குருக்களுள் முக்கியமானவர் எனலாம். எமனை விரட்டும் ஓகம் யோகா என்றவுடன் பதஞ்சலி முனிவரின் பங்களிப்பு இன்று அதிகம் பேசப்படுகிறது. அவர் மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த மூத்த 18 சித்தர்களுள் ஒருவரான திருமூலரும் ‘ஓகக் கலை’யை மிக நுட்பமாகப் பேசியிருக்கிறார். ‘காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்குக் கூற்றை உதைக்கும் குரியதுவாமே’ என பூரகம் - இரேசகம்- கும்பகத்தைக் கணக்கிட்டுப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்தால், எமனை உதைத்து விரட்டலாம் எனப் பொருள் கொண்ட திருமூலரின் ஓகப் புரிதல்கள், சித்த மருத்துவத் தத்துவங்களோடு நெடுங்காலம் நம்மோடு இருந்து வருபவை. ஓகம், காயகல்பம் எனும் சித்த மருத்துவத் துறையின் மிக முக்கியமான பயிற்சியும்கூட. கட்டுப்படும் நீரிழிவு யோகாவைக் கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இயலுமா என்றால், ‘ஆம்’ என்கின்றன பல ஆய்வு முடிவுகள். எந்த அளவில் உள்ள நீரிழிவு நோயாளிக்கு? நீரிழிவு நோயின் மற்ற சிக்கல்களுக்கு எப்படிப் பயனளிக்கும்? நீரிழிவு வராது தடுக்க உதவுமா? நீரிழிவு நோயரின் மன உளைச்சலைத் தவிர்க்குமா? எல்லா நீரிழிவு நோயரையும் வருத்தும் சோர்வை நீக்குமா எனப் பல தளங்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ‘ஜர்னல் ஆஃப் டயாபட்டீஸ் ரிசர்ச்’ எனும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ இதழில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் யோகாவின் பங்கு குறித்த கட்டுரை சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளில் மிக முக்கியமானது (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4691612/). இக்கட்டுரை உலகெங்கும் யோகாவில் நடைபெற்ற ஆய்வுகள் பலவற்றையும் தொகுத்து, அந்த ஆய்வுக் கட்டுரைகளின் போக்கு, நம்பகத்தன்மை, அவை எல்லாவற்றின் ஒருமித்த முடிவுகள் என்ன என அலசி ஆய்ந்து சொல்கிறது. வர்ஜீனியா பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் தேசிய மாற்று மருத்துவமுறை கவுன்சிலும் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவாக, ‘யோகா பண்ணுங்கப்பா… சர்க்கரையும் கட்டுப்படும். சர்க்கரையால் பின்னாளில் சிறுநீரக, இதய சங்கடங்கள் வருவதும் கணிசமாய்த் தடுக்கப்படும்’ என அறிவித்துள்ளது. 2,170 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை எல்லாம் அலசி ஆராய்ந்துதான், யோகாவின் பயன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பட்டியல் பார்த்துப் பயிற்சி யோகா, கணையத்தில் தொய்வடைந்த பீட்டா செல்களைத் தூண்டுவதையும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸைச் சீராக்குவதையும் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கூடவே மிக முக்கியமாக டீலாமரேஸ் (telomerase) என்ஸைமில் ஆட்சி செலுத்துவது மூலமாக டீலாமர் (telomere) நீளத்தை அதிகரித்து, வயோதிக மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதையும் உறுதிப்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள். சரி எந்த யோகாவைச் செய்வது? மூச்சுப் பயிற்சி எப்போது? ஆசனம் எப்போது? இப்படிப் பல கேள்விகள் நீரிழிவு நோயாளிகளுக்கு எழலாம். அதற்கு விடைதரும் விதமாக, பெங்களூரூவில் உள்ள யோகா பல்கலைக்கழகமும், மத்திய ஆயுஷ் துறையும் இணைந்து தினசரி செய்ய வேண்டும் என்று, கீழ்க்கண்டவாறு ஒரு மணி நேரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளன (பார்க்க பெட்டிச் செய்தி). இந்தப் பட்டியல் நோயரின் உடல்வாகு, நோய் வகையைப் பொறுத்து தேர்ந்த சித்த, யோக மருத்துவர் ஆலோசனைப்படி மாற்றியமைத்துச் செய்யலாம். வாட்ஸ் ஆப், கூகுள் குருக்களிடம் பயில்வது நல்லதல்ல. மரபு கொடுத்த பொக்கிஷம் நீரிழிவு நோய் கட்டுக்குள் வர மனத்தை ஆற்றுப்படுவதும் பரப்பரப்பில்லாத வாழ்க்கை முறையும் மிக மிக அவசியம். இவ்விரண்டுக்கும் மனதையும் உடலையும் ஒருமிக்க வைக்கும் பயிற்சியான யோகா மிக முக்கியமானது. மூளையின் சிம்பதடிக், பாராசிம்பதடிக் நரம்பு மண்டலத்தில் யோகாவும் மூச்சுப் பயிற்சியும் நடத்தும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, மூளை ஆசுவாசப்படுவதை அதன்மூலம் மன அழுத்த ஹார்மோன்கள் சீர்படுவதையெல்லாம் ஆராய்ந்து அறிந்து சொல்லிவிட்டனர். முறையான உணவுடனும் சரியான மருத்துவத்துடனும் எடுக்கப்படும் யோகா பயிற்சியானது நீரிழிவை முழுமையாகக் கட்டுப்படுத்த, நீரிழிவால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அச்சுறுத்தும் பின்விளைவுகளைத் தடுக்க, நம் மரபு கொடுத்த பொக்கிஷம்!

கல்விச்சோலை - kalvisolai health tips

அதிக சத்துள்ளது வேர்க்கடலை

நிலக்கடலை, மணிலா கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிக அளவு இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. மேலும் உடம்புக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகமாக உள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எவ்விதப் பயமுமின்றி அளவாகச் சாப்பிடலாம். வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத் திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப் படுத்தும் தன்மை உள்ளது. வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி-3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானவை. இந்த சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக இருப்பதோடு, ரத்த அழுத்தமும் குறையும். வேர்க்கடலையிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருட்கள், தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும். வேர்க்கடலையை பச்சையாகச் சாப்பிடுவதைவிட, அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் இதை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையை தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில் தான் அதிக அளவு சத்துகள் உள்ளன. வேர்க்கடலையில் செய்யப்படும் கடலை மிட்டாயும் நல்ல சத்துணவு என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விச்சோலை - kalvisolai health tips

Thursday 21 June 2018

மூலநோய்க்கு மருந்தாகும் முருங்கைக்காய்!

முருங்கை மரம், ‘கற்பகத்தரு’ என்று அழைக்கப்படுகிறது. அதன் எல்லாப் பாகங்களும் மனிதர்களுக்கு மருந்தாக, உணவாகப் பயன்படக்கூடியவை. குறிப்பாக முருங்கைக்காய். * முருங்கைக்காயில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன. * பெண்கள், வாரம் ஒருமுறை முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் அடிவயிற்றுவலி, மேகநோய், ரத்தச்சோகை சரியாகும். * மலச்சிக்கலைக் குணமாக்கும் ஆற்றல் முருங்கைக்காய்க்கு உண்டு. உடல் சூட்டைக் குறைக்கும். மூலநோய் உள்ளவர்கள், முருங்கைக்காயை நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். * முருங்கைக்காயில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு, பல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். * சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். பித்தப்பை சீராகச் செயல்பட உதவும். * விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் முருங்கைக்காய்க்கு உண்டு. * ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். மழைக்காலங்களில் வரக்கூடிய சளித்தொல்லை, காய்ச்சலில் இருந்து காக்கும். * சளி, ஆஸ்துமா, இழுப்பு மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாகச் செயல்படும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

சரியாகச் சுவாசிக்கிறீர்களா?

`புத்துணர்ச்சி பெற உயிர்க்காற்று அவசியம் என்பது தெரிந்த ஒன்றே. ஆனால், நாம் எல்லோருமே சரியாகத்தான் சுவாசிக்கிறோமா என்று ஒருமுறை பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மில் பலர் எதிர்மாறாகவே சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது'' என்கிறார் யோகா இயற்கை மருத்துவர் மணவாளன். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், சுவாசம் தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் மணவாளன் செய்திருந்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் பலர் சரியாகச் சுவாசிப்பதில்லை என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. அது குறித்து அவருடன் பேசினோம்... இயற்கையாகக் காற்றில் காணப்படுவது ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு. இது பாலூட்டிகளின் மூக்குத் துவாரங்களில் தொடங்கி மெதுவாக மூச்சுக்குழாய் வழியாக உடலில் மார்புப் பகுதியில் உள்ள நுரையீரலைச் சென்றடையும். இதைத்தான் மூச்சு அல்லது சுவாசம் என்கிறோம். நுரையீரலைச் சென்றடைந்ததும், முழுமையாக நுரையீரல் விரிவடைந்து பிராண வாயு உடலின் உள்ளே செலுத்தப்படும். இந்த மூச்சுவிடுதல் அல்லது சுவாசித்தல் என்பது ஒருவித லயத்துடன் மீண்டும் மீண்டும் நடக்கும் ஒரு தொடர் செயல்பாடு. இந்தப் பூவுலகில் இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம் மூச்சு அல்லது உயிர்மூச்சு. உள்ளிழுப்பதை `உள்மூச்சு’ என்றும் வெளியேவிடுவதை `வெளிமூச்சு’ என்றும் சொல்வார்கள். இந்தச் செயல்பாட்டின்போது ரத்தத்தில் கலக்கும் சுவாசமானது தேவையற்ற கரியமிலவாயுவை வெளியே தள்ளும் பணியைச் செய்யும். இது மிகச் சாதாரணமாக நடக்கும் ஓர் இயற்கை நிகழ்வு. ஆனால், இந்தச் செயல்பாடு எல்லோருக்கும் ஒழுங்காக நடக்கிறதா என்பதில்தான் பிரச்னையே. அதாவது நாம் எல்லோரும் ஒழுங்காகச் சுவாசிக்கிறோமா என்பதே கேள்வி. பிறந்த குழந்தையை உற்றுப் பாருங்கள். அந்தக் குழந்தை சுவாசிக்கும் முறையே மிகச் சரியானது. ஆம், இயற்கையே குழந்தைக்கு சுவாசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த சுவாச முறையைத்தான் நாம் நம் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும். ஆனால், காலப்போக்கில் நம்மில் பலர் அதற்கு நேர்மாறாக சுவாசிக்கப் பழகிவிடுகிறோம். எங்களது மாணவர்கள் வயதானவர்களிடம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்தது. அதாவது 60 சதவிகிதம் பேர் சரியாகச் சுவாசிப்பதில்லை. உடலுக்குத் தேவையான பிராண வாயு குறையும்போது பெருமூச்சுவிடும்படி உடல் நம்மைத் தூண்டுகிறது. ஆழ்ந்த சுவாசம், சுவாசம்பெருமூச்சுவிடுதலின்போது நாம் நம்மையும் அறியாமல் ஒழுங்காகச் சுவாசிக்கிறோம். மற்ற நேரங்களில் வழக்கம்போல் மாற்றியே சுவாசிக்கிறோம். மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளே இழுத்ததும், அது நுரையீரலைச் சென்றடையும். அப்போது நுரையீரல் கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் மட்டுமல்லாமல் ஒரு பலூனைப்போல விரிவடையும். அப்படி விரிவடைந்தால்தான் சுவாசித்தல் முழுமை பெறும். மேலும், அப்போது வயிற்றையும் மார்பையும் பிரிக்கும் பகுதியான உதரவிதானம் (Diaphragm) கீழ்நோக்கிச் செல்ல வேண்டும். உதரவிதானம் கீழ்நோக்கிச் செல்லும்போது வயிற்றுப்பகுதி முன்னோக்கி அதாவது, வெளித்தள்ளப்பட வேண்டும். சுவாசத்தை வெளியே விடும்போது உதரவிதானம் மேல்நோக்கி எழும்; இதனால் வயிறு உள்நோக்கி இழுத்துக் கொள்ளப்படும். இப்படித்தான் சுவாசத்தின் செயல்பாடு நடக்கும். இதுதான் இயற்கையின் விதி, அறிவியல் என்றுகூடச் சொல்லலாம். குழந்தை பிறந்தவுடன் இந்தச் செயல்பாடு மிகச் சரியாகவே நடக்கும். ஆனால், வாழ்க்கைமுறை மாற்றத்தால் இயற்கைக்குப் புறம்பானச் செயல்பாடுகள் நடக்கின்றன. அதில் இந்த சுவாசச் செயல்பாட்டிலும் மாற்றம் நிகழ்கிறது. இந்த மாற்றம் எல்லோரிடமும் நிகழ்ந்துவிடுவதில்லை என்றாலும் 60 சதவிகிதம்பேர் இயற்கைக்கு மாறாகவே சுவாசித்து வருகிறோம். இயற்கைக்கு மாறான இந்த சுவாசச் செயல்பாட்டால் போதுமான அளவு பிராண வாயு கிடைப்பதில்லை. இதனால் நாளடைவில் உடல் சோர்வு, மன உளைச்சல் ஏற்படும். மேலும் தேவையான பிராணவாயு கிடைக்காமல்போவதால் செரிமானக்கோளாறில் தொடங்கி நோய்கள் அணிவகுக்கத் தொடங்கிவிடும். ஆனால், நாம் யாரும் இது பற்றி யோசிப்பதில்லை, இது யாருக்கும் தெரியவதுமில்லை. மூச்சுத்திணறல் அல்லது சுவாசத்தில் பிரச்னை ஏற்பட்ட பிறகே அது பற்றி சிந்திக்கிறோம். எனவே, முதலில் நாம் சரியாகத்தான் சுவாசிக்கிறோமா என்று நமக்கு நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு அதை நாமே சரிசெய்துகொள்ள முடியும் என்றால் சரி செய்துகொள்ளலாம். முடியாதபட்சத்தில் தகுதி வாய்ந்த யோகா இயற்கை மருத்துவரிடம் சென்று முறையாக மூச்சுவிட கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் சரியாகச் செய்தால் உடல், மன ஆரோக்கியம் கிடைக்கும்'' என்றார் மணவாளன். எப்படி சுவாசிப்பது என்பது மட்டுமல்லாமல், யோகாவின் அடிப்படை மூச்சுப்பயிற்சிகள், பிராணயாமம் உள்ளிட்ட பயிற்சிகள் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. இவை முறையாகப் பயிற்சி பெற்றவர்களால் கற்றுத் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விச்சோலை - kalvisolai health tips

ரொம்ப நேரம் உட்காராதீங்க

நம்மில் பலர் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள். காலை முதல் மாலை வரை குறைந்தது எட்டு மணி நேரம் அமர்ந்தபடி வேலை செய்ய நேர்கிறது. இப்படி அதிகநேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு. * தொடர்ந்து உட்கார்ந்திருப்பதை முடிந்தளவு தவிர்க்கலாம். உதாரணமாக, வேலைகளுக்கிடையே அவ்வப்போது எழுந்து நடக்கலாம் அல்லது படிகளில் ஏறி இறங்கலாம். உடன் வேலை செய்பவர்களுக்கு மெசேஜ் அனுப்புவதற்குப் பதில் நேரில் சென்று தகவல் சொல்லலாம். * முன் பக்கமாக வளைந்தோ அல்லது 90 டிகிரியில் நேராகவோ உட்கார்வதைவிட 135 டிகிரி அளவில் சாய்ந்து உட்காருங்கள். இது முதுகில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும். * ஒரே மாதிரயான நிலையில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதால், கழுத்து, தோள்பட்டைப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் அழுத்தப்படுகின்றன. இதனால் ரத்த ஓட்டம் குறைந்து சோர்வு ஏற்படும். * நாம் ஓரிடத்தில் உட்கார்ந்ததும் நம் கால் தசைகளின் மின் செயல்பாடு நின்றுவிடும். அதாவது, ஒரு நிமிடத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலோரி எரிக்கப்படும் அளவு குறைந்துவிடும். கொழுப்பைக் குறைக்க உதவும் நொதிகளும் (என்சைம்) 90 சதவிகிதம் குறைந்துவிடும். இருக்கையில் உட்கார்ந்த இரண்டு மணி நேரத்தில் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவு 20 சதவிகிதம் குறைகிறது. 24 மணி நேரம் கழித்து இன்சுலின் சுரப்பின் அளவு 24 சதவிகிதம் குறைந்து சர்க்கரை நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியிலும் கழுத்துப் பகுதியிலும் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது. * நாம் கண்விழித்திருக்கும் நேரங்களில், ஒருநாளைக்கு 9 மணி நேரம் 20 நிமிடங்கள் அதிக உடல்உழைப்பு இல்லாத வேலைகளைச் செய்யலாம். 6 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை குறைந்த உடல்உழைப்புள்ள வேலைகளைச் செய்யலாம். ஆனால் 45 நிமிடங்கள் தீவிர உடல்உழைப்பு தேவை.

கல்விச்சோலை - kalvisolai health tips

அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை

உயிரணுக்களுக்கு நவீன கால எமன்! பெரும்பாலான ஆண்கள் மணிக்கணக்கில் லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்துகிறார்கள். இதனால் விந்துப்பை இருக்கும் பகுதி சூடாகி உயிரணுக்களின் உற்பத்தி குறையும். அதேபோல, இறுக்கமாக ஜீன்ஸ் பேன்ட் அணிவதும் விந்துப்பையைச் சூடாக்கும். அதிகநேரம் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவது, சூடான பகுதியில் நின்று வேலைசெய்வது, தினமும் வெந்நீரில் குளிப்பது போன்றவையும் விந்துப்பையைச் சூடாக்கும். இதனால் விந்து உற்பத்தி பாதிக்கப்படக்கூடும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? - 10 கட்டளைகள்

1. நோய்த்தொற்றைத் தடுப்போம்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ‘உடனே சென்று பார்க்காமல்விட்டால் தவறாக நினைத்துக் கொள்வார்கள்’ என்று நினைத்துக் கூட்டம்கூட்டமாக மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது. ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அல்லது இரண்டுபேர் போனால் போதும். 13 வயதுக்குக் கீழ், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவமனை செல்வதைத் தவிர்க்கலாம். ஏனென்றால் இந்த வயதினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோயாளியை விசாரிக்கப் போகும் இடத்தில் இவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், சளி போன்ற பிரச்னை இருப்பவர்களும் தவிர்க்க வேண்டும். அட்டெண்டர், நோயாளி, நர்ஸ் ஆகியோருக்கும் நமது உடல்நலக் குறைவால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவமனை செல்லும்போது ஆல்கஹால் சேர்க்கப்பட்ட `ஹேண்ட் ரப்’ கொடுப்பார்கள். அதைக்கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். நோயாளியைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போதும் `ஹேண்ட ரப்’ பயன்படுத்த வேண்டும். சோப்பைக் கொண்டு கைகளைக் கழுவுவதால் 95 சதவிகிதக் கிருமிகள் அழிகின்றன. தீக்காயமடைந்தவர்கள், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்களைப் பார்க்கும்போது ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். நலம் விசாரிக்கச் செல்லும் இடத்தில் நம்மால் நோயாளிக்கு எந்தத் தொந்தரவும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

2. பூச்செண்டு வேண்டாம்!
உடல்நலமில்லாதவர்களைப் பார்க்கச் செல்லும்போது பூச்செண்டு கொடுப்பது நல்லதல்ல. பூச்செண்டில் இருக்கும் சிறு பூச்சிகள் நோயாளிக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். பூஞ்சைகள் நோய்த்தொற்றை உண்டாக்கலாம். சிலர் உணவு சமைத்து எடுத்துச் செல்வார்கள். கிட்னிமாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் உப்பு, காரம், இனிப்பு குறைத்துப் பத்தியச் சாப்பாடு கொடுப்பார்கள். வீட்டில் சமைத்து எடுத்துச் செல்லும் உணவில் உப்பும் காரமும் அதிகமிருக்கும். அந்த உணவை நோயாளி சாப்பிடுவதால் அவர் குணமடையும் காலம் தள்ளிப்போகும். எனவே, வீட்டிலிருந்து கொண்டு செல்லும் உணவை நோயாளிக்குக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

3. உற்சாகமூட்டுங்கள்!
உடல்நலமில்லாதவர் முன் ஜோக் அடிப்பது, அவர்களைப் பார்க்க வைத்தபடித்  தின்பண்டங்களைச் சாப்பிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கலாம். இதய நோயால் பாதிக்கப்பட்டோரிடம் சோகச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது எதிர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தும். அரசியல் பேசுவது, எங்கோ நடந்த பேரிழப்புகள் பற்றிப் பேசுவதையும் தவிர்க்கலாம். தன்னம்பிக்கை தரும்விதமாகப் பேச வேண்டும். நாங்கள் உங்களுக்குத் துணை நிற்போம் என்று நம்பிக்கை அளிக்க வேண்டும். விரைவில் குணமாகிவிடும் என்று உற்சாகம் தரவேண்டும். அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்த வேண்டும்.

4. தனிமை முக்கியம்!
எல்லா மருத்துவமனைகளிலும் நோயாளிக்குத் தனி அறை கிடைக்காது. செமி பிரைவேட் அறைகளில் நான்கு நோயாளிகள் ஓர் அறையைப் பகிர்ந்திருப்பார்கள். ஒவ்வொருவருக்குமான நோயின் தன்மை, வலி, தூங்கும்நேரம் வெவ்வேறாக இருக்கும். இத்தகைய சூழலில் பார்வையாளர்கள் மெதுவாகப் பேச வேண்டும். சத்தமாகப் பேசுவதையும் அரட்டை அடிப்பதையும் தவிர்க்க வேண்டும். அவர்களது வலி, வேதனையை மனதில்கொண்டு நடக்க வேண்டும்.

5. தலையணை, பெட்ஷீட் - கவனம்!
ஒரு சில மருத்துவமனைகளில் அட்டெண்டருக்கும் சேர்த்துத் தலையணை, பெட்ஷீட் கொடுப்பார்கள். பல மருத்துவமனைகளில் இந்த வசதியெல்லாம் கிடையாது. எனவே அவர்கள் வீட்டிலிருந்தே பெட்ஷீட், தலையணை எடுத்துச்செல்ல வேண்டும். இதனால் வீட்டிலுள்ள கிருமிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இது நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. மருத்துவமனை அதிகபட்ச நோய்க்கிருமிகள் வாழும் இடம். மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் பெட்ஷீட், தலையணை மற்றும் நோயாளிக்கான உடை ஆகியவை `ஆட்டோகிளேவ்’ முறையில் தூய்மை செய்யப்படும். இதன்மூலம் அவற்றிலுள்ள கிருமிகள் அழிக்கப்படும். ஆனால் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்துச்செல்லும் பெட்ஷீட், தலையணை ஆகியவற்றுடன் கிருமிகளையும் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இவற்றைத் தவிர்க்க மருத்துவமனையில் பயன்படுத்தியவற்றை வீட்டுக்குக் கொண்டு செல்வதைத் தவிர்ப்பது நலம்.

6. `கூகுள்’ வேண்டாம்!
`கூகுள்’ என்பது ஒரு கணினித் தகவல் தளம். அதில், நோய் பற்றியும் அதற்கான மருத்துவம் குறித்தும் ஆராய்ச்சி செய்பவர்களை அதிகளவில் பார்க்கிறோம். மேலும் அவர்கள் மருத்துவமனை வருவதற்குமுன் கூகுள் உதவியுடன் தனக்கு என்ன மருந்து கொடுக்கவேண்டும் என்று ஒரு பட்டியலே போடுகின்றனர். ஆனால் மருத்துவம் என்பது அப்படியல்ல. ஒருவரது உணவே மற்றவருக்கு விஷமாக மாற வாய்ப்புள்ளது. ஆகவே கூகுள் சொல்லும் விஷயங்கள் எல்லோருக்கும் பொருந்தாது. விளைவின் அடிப்படையிலேயே ஒருவருக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மருந்தினால் ஏற்படும் பக்கவிளைவைவிட அவரின் உயிரைக் காப்பாற்றுவதே முக்கியம். புற்றுநோய்க்கான கீமோதெரபி மருத்துவம் செய்யும்போது தலைமுடி கொட்டும். முடியைப் பாதுகாப்பதைவிட உயிரைப் பாதுகாப்பதே முக்கியம். இத்தகைய சூழலில் கூகுளில் தேடுவது தேவையற்ற பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தும். உங்கள் உடலில் உண்டாகும் பாதிப்புகளின் அடிப்படையில் மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை பெறுவதே தெளிவை ஏற்படுத்தும்.

7. பிணக்கு வேண்டாம்!
மருத்துவமனையில் இருக்கும் அட்டெண்டர், நர்ஸ் அல்லது டாக்டரிடம் ஏதாவது கேள்வி கேட்பதற்குமுன்பு நிறைய யோசிக்க வேண்டும். `நோயாளி வாந்தி எடுக்கும்போது ரத்தம் ரத்தமா வருது’ என்பதுபோன்ற விஷயங்களை நோயாளியின்முன்பு சொல்லக்கூடாது. அது பாதிக்கப்பட்டவருக்குத் தேவையில்லாத பயத்தை உண்டாக்கும். மருத்துவமனையில் நர்ஸ், டாக்டர், உதவி மருத்துவர் போன்றோர் ஒரேநாளில் பல நோயாளிகளைக் கவனிக்க வேண்டியிருக்கும். அதனால், சிலநேரங்களில் அவர்கள் எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வர். அவற்றைப் பெரிதாக்கி அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளத் தேவையில்லை. மேலும் அவர்கள் நோயாளியை ஒழுங்காகக் கவனிப்பதில்லை என்று புலம்பக்கூடாது; இது அவர்களது மனஅமைதியைக் கெடுக்கும், மற்றவர்களையும் பாதிக்கும். மருத்துவர்களிடம் தேவையான கேள்விகளை யோசித்துக் கேட்க வேண்டும். அந்தக் கேள்வி யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது. முக்கியமாக நோயாளிக்குப் பீதியை ஏற்படுத்தக்கூடாது.

8. மீத உணவு வேண்டாம்!
சில தருணங்களில் அட்டெண்டராக வருபவர்கள் நோயாளிக்குக் கொடுக்கும் உணவைச் சாப்பிடுவார்கள். ஒரு சில இடங்களில் நோயாளி மீதம் வைத்த உணவையும் அட்டெண்டர் சாப்பிடுவார். இது நல்லதல்ல. வயிறு மற்றும் கிட்னி தொடர்பான பிரச்னைக்கான சிகிச்சை எடுக்கும்போது இன்புட், அவுட்புட் சார்ட் எடுப்பார்கள். அதை வைத்து நோய் எந்தளவு குணமாகியுள்ளது என்பதை மதிப்பிடுவார்கள். ‘நோயாளி ஒருநாளில் திட உணவாகவும் திரவ உணவாகவும் எவ்வளவு இன்புட் எடுத்துள்ளார். அதிலிருந்து சிறுநீர், மலம் எவ்வளவு வெளியேறியுள்ளது, பசியின் தன்மை, செரிமானத் தன்மை எப்படி உள்ளது’ என்றெல்லாம் கணக்கிடுவார்கள். அட்டெண்டர், நோயாளியின் உணவைச் சாப்பிட்டால் நோயின் தன்மையைக் கணக்கிட முடியாது. அதனால், நோயாளியின் உணவையோ, நோயாளி மீதம் வைத்த உணவையோ கண்டிப்பாக யாரும் சாப்பிடக் கூடாது.

9. நேரம் முக்கியம்!
அவசரமான சூழலில் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அங்கு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சுவாசம், இதயத்துடிப்பு, ரத்தச் சர்க்கரை அளவு ஆகியவை கண்காணிக்கப்படும். மருந்து கொடுக்கவும் பரிசோதனைக்காகவும் அவர் பலமுறை எழுப்பப்படலாம். இதற்கிடையே நோயாளிக்கு ஓய்வும் தேவைப்படும். ஒரு சிலர் `வெளியூரில் நீண்ட தொலைவிலிருந்து வருகிறோம். உடனே நோயாளியைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்’ என்று மருத்துவமனை ஊழியர்களிடம் வாதாடுவார்கள். இது நோயாளிக்கு எந்தப் பலனையும் தராது. மாறாக அவர்களுக்குத் தொந்தரவையே உண்டாக்கும். பார்வையாளர் நேரத்தில் மட்டுமே நோயாளியைச் சந்திப்பது சரியாக இருக்கும்.

10. அட்டெண்டருக்கு அடிப்படைத் தகுதி அவசியம்!
நோயாளிகள் மருத்துவமனையில் இருக்கும்போது அவர்கள் உடல்நிலை குறித்து மருத்துவர் விசாரிப்பார். அப்போது நோயாளிக்கு முன்பாக, அட்டெண்டர் அதிகம் பேசுவார்.அது நல்லதல்ல. அறுவை சிகிச்சை செய்தால் நோயாளிக்கு முதலில் வலி நிவாரணி மாத்திரைகள் கொடுப்பார்கள். நோயாளியால் தாங்கிக்கொள்ளும் அளவு வலி இருக்கும்போது அந்த மாத்திரைகளைத் தவிர்ப்பார்கள். வலிநிவாரணி மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் நோயாளிக்கு நல்லதல்ல. ஆனால் மருத்துவரிடம் பேசும் அட்டெண்டர், `வலியால் இரவெல்லாம் தூங்கலை; ரொம்ப அவதிப்படுறாங்க...” எனச் சொல்வார். அது நல்லதல்ல என்பதால் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.நோயாளிக்கு அட்டெண்டராகச் செல்பவர்கள் நோயாளியின்மீது அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சகிப்புத்தன்மை வேண்டும். நோயாளிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நோயாளியைக் கவனிக்கும்போது சரியான தூக்கம் இருக்காது. நோயாளி முறையாக மருந்து, உணவு எடுத்துக்கொள்ள உதவும் மனநிலையிலும் அவர்கள் இருக்க வேண்டியது அவசியம்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday 17 June 2018

எண்ணெய் தரும் எண்ணற்ற அழகு!

எண்ணெய் தரும் எண்ணற்ற அழகு! விளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. * இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். சரும சுருக்கங்கள் நீங்கி புதுப் பொலிவு கிடைக்கும். * முகப்பருவால் அவதிப்படுபவர்கள் காட்டன் துணியில் விளக்கெண்ணெய்யை முக்கி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பு இவ்வாறு தேய்த்துவிட்டு காலையில் எழுந்ததும் கழுவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முகப்பருவை மட்டும் போக்காமல் சருமத்தில் படியும் அழுக்குகள், இறந்த செல்களும் நீங்கிவிடும். சருமமும் மென்மையாக மிளிரும். * சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணியாக செயல்படும். முகத்தில் விளக்கெண்ணெய்யை அழுத்தமாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் போதும். * சருமத்தில் எப்போதும் ஈரப் பதத்தை தக்க வைத்துக்கொள்ள விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். சரும வறட்சி உள்ள பகுதிகளில் விளக்கெண்ணெய்யை மென்மையாக தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். * பிரசவத்தின்போது வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் விளக்கெண்ணெய்யை பயன் படுத்தலாம். அதில் கொழுப்பு அமிலம் அதிகம் கலந்திருக்கிறது. அது தசைப்பகுதியை நெகிழ்வடைய செய்ய உதவும். பிரசவமான சில நாட்களிலேயே வயிற்றில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். * முகத்தில் சிவப்பு தழும்புகள் படர்ந்து அவதிப்படுபவர்களுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணம் தரும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சரும செல்களும் வளர்ச்சி அடையும். முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Saturday 16 June 2018

சுற்றுச்சூழல் காக்கும் உடற்பயிற்சி!

சுற்றுச்சூழல் காக்கும் உடற்பயிற்சி! முகமது ஹுசைன் நிஜமாகத்தான்! தேநீர் இடைவேளையை சுவீடன்தான் உலகுக்கு அறிமுப்படுத்தியது. அதன்பின் ஆறு மணிநேர வேலை முறையை அறிமுகப்படுத்தி, வாழ்வையும் வேலையையும் சமன் செய்யும் கலையை அந்நாடே கற்றுக்கொடுத்தது. இப்போது மனதுக்கும் உடலுக்கும் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை விளைவிக்கும் ஒரு உடற்பயிற்சி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சுவீடன். அதன் பெயர் ‘பிளாக்கிங்’ (Plogging)! ‘வாக்கிங்’ தெரியும், ‘ஜாக்கிங்’ தெரியும். அதென்ன ‘பிளாக்கிங்?’. ‘ஜாக்கிங்’ என்ற சொல்லும் ‘பிளாக்கா அப்’ என்ற சுவீடன் சொல்லும் இணைந்து உருவான சொல்தான் ‘பிளாக்கிங்’. ‘பிளாக்கா அப்’ என்றால் ‘எடு’ என்று அர்த்தம். ‘எடுத்துக்கொண்டு ஓடு’ என்பதுதான் இந்தப் புதிய சொல்லின் அர்த்தம். ‘எடுத்துக்கொண்டு ஓடுவது’ என்றவுடன் நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு ஓடுவது என்று நினைக்க வேண்டாம். நமக்கும் இந்தப் பூமிக்கும் தேவையற்றதை எடுத்துக்கொண்டு ஓடுவது என்று இதற்கு அர்த்தம். குனிஞ்சு குனிஞ்சு ஓடுங்க வழக்கமாக ஓடுவது போன்றதுதான் இந்தப் பயிற்சியும். ஆனால், ஓடும்போது குப்பைகளைக் குனிந்து பொறுக்கி எடுத்துக்கொண்டே ஓட வேண்டும். ஓடுவது நல்ல உடற்பயிற்சிதான். அதுவும் அவ்வப்போது குனிந்து ஓடும், இந்த உடற்பயிற்சியைப் பற்றிக் கேட்கவா வேண்டும். இந்தப் பயிற்சி உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என சுவீடன் நாட்டைச் சேர்ந்த ‘லைஃப் சம்’ எனும் செயலி நிறுவனம் தெரிவிக்கிறது. அது பிளாக்கிங் மூலம் எரிக்கப்படும் கலோரிகளை அளவிடும் வகையில் தனது ‘லைஃப் சம்’ செயலியை மாற்றி வடிவமைத்துள்ளது. அந்தச் செயலியின் தரவுகளின்படி, 30 நிமிட பிளாக்கிங் சராசரியாக 288 கலோரிகளை எரிக்கிறது. அதாவது 30 நிமிடம் தொடர்ந்து ஓடினால் எந்த அளவு கலோரிகளை உடம்பு எரிக்குமோ அதே அளவுக்கு கலோரிகளை பிளாக்கிங்கும் எரிக்கிறது. ஓடுவது, தனிமனிதனின் உடல்நலத்துக்கு மட்டும்தான் நன்மை பயக்கும். ஆனால் பிளாக்கிங் தனிமனிதனுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கிறது. காலத்துக்கு ஏற்ற உடற்பயிற்சி உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே நோய் என்றாகி விட்டது. சுத்தமான காற்று இன்று கனவிலும் சாத்தியமற்ற ஒன்று. இளம் வயதிலேயே பலர் நீரிழிவு நோயால் அவதியுறும் நிலை இன்று உள்ளது. உயர் ரத்த அழுத்தமும் ரத்தக் கொழுப்பும் இன்று பெரும்பாலானவர்களுக்குக் காணப்படுகிறது. உடல் பருமனால் இன்று குழந்தைகள்கூட அவதியுறுகிறார்கள். இதற்கான தீர்வை முன்வைத்துப் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெறுகிறது. மக்களின் தலைமீது எண்ணற்ற மருந்துகள் திணிக்கப்படுகின்றன. ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு மருந்துகள் மட்டும் போதாதே. அதனால்தான் சமீபகாலமாக உடற்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. தெருவெங்கும் முளைத்திருக்கும் ‘ஜிம்’கள் இதற்குச் சான்று. அது மட்டுமல்லாமல், இன்று பூங்காக்களிலும் சாலையிலும் வயது வித்தியாசமின்றி பலர் ஜாக்கிங்கோ வாக்கிங்கோ செல்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த உடற்பயிற்சி ஆண்களுக்கு மட்டுமே உரியதாக நம் நாட்டில் இருந்தது. இன்று அந்த நிலை மாறிவிட்டது. பெண்களுக்கான பிரத்யேக ஜிம்கள் இன்று நிறைய உள்ளன. அத்துடன் ஆண்களுக்கான ஜிம்களிலும் உடற்பயிற்சி செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுத்தம் தரும் சுகாதாரம் குடும்பத்துடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் போக்கும் இன்று அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், குடும்பத்தோடு பிளாக்கிங் செய்யலாம். உடற்பயிற்சி செய்தது போலவும் ஆயிற்று, சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்தது போலவும் ஆகும். யோசித்துப் பாருங்கள். பூமி தன்னை அசுத்தம் செய்து கொள்வதில்லை. நமது பொறுப்பற்ற கண்டுபிடிப்புகளின் எச்சங்களின் மூலம் பூமியையும் இயற்கையையும் நாமே அசுத்தமாக்குகிறோம். அசுத்தம் செய்வது நாம் எனும்போது, அதைச் சுத்தம் செய்வதும் நாமாகத்தானே இருக்க வேண்டும். எப்படி முந்தைய தலைமுறையிடமிருந்து நாம் இந்தப் பூமியை சுத்தமாகப் பெற்றோமோ, அதே போன்று நமது அடுத்த தலைமுறையினரிடம் பூமியை ஒப்படைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு ஸ்வீடன் நமக்குப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நாமும் அதில் பயணிக்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai health tips

வைரம் பாயச் செய்யும் பிரண்டை

வைரம் பாயச் செய்யும் பிரண்டை | டாக்டர் வி. விக்ரம் குமார் | ‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும். பற்றுக்கம்பிகளின் உதவியோடு தொற்றித் தொற்றி உயரமாக வளர்ந்துகொண்டே போகும். சதைப் பற்றுள்ள இந்த மூலிகை, எலும்புகளுக்கு உற்ற தோழன். அது என்ன?’ - இந்த மூலிகை விடுகதைக்கான பதில் ‘பிரண்டை!’. கிராம வேலிகளில் காட்சியளித்த பிரண்டை, இப்போது அனைத்து காய்கறிச் சந்தைகளின் வாயிலிலும் நமது நலம் காக்க காத்துக் கிடக்கிறது. பெயர்க் காரணம்: வைரத்தைப் போல எலும்புகளுக்கு வலிமை அளிப்பதால் பிரண்டைக்கு ‘வஜ்ஜிரவல்லி’ என்றொரு பெயரும் உண்டு (வஜ்ஜிரம் – வைரம்). பொதுவாக நான்கு கோணங்களை உடைய சதுரப் பிரண்டை அனைத்து இடங்களிலும் காணப்படும். ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு. அடையாளம்: பற்றுக் கம்பிகளின் உதவியுடன் கொடியேறும் வகையைச் சார்ந்தது. சதைப்பற்றுள்ள தண்டுகள், பசுமையாகக் காட்சி தரும். வகைக்கு ஏற்ப பல்வேறு கோணங்களை உடைய தண்டுகளை உடையது. இதய வடிவ இலைகளோடு, சிவந்த நிறத்தில் உருண்டையான சிறுசிறு பழங்களைக் கொண்டிருக்கும். ‘சிஸ்ஸஸ் குவாட்ராங்குலாரிஸ்’ (Cissus quadrangularis) எனும் தாவரவியல் பெயர்கொண்ட பிரண்டை, ‘விடாஸியே’ (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்தது. கால்சியம், சைடோஸ்டீரால் (Sitosterol), இரிடாய்ட்ஸ் (Iridoids), குவர்சிடின் (Quercitin), கரோட்டின் (Carotene), குவாட்ராங்குலாரின் – ஏ (Quadrangularin – A) போன்றவை இதிலிருக்கும் தாவர வேதிப்பொருட்கள். உணவாக: பசியெடுக்காமல் தினமும் அவதிப்படுபவர்கள் பிரண்டைத் துவையலைச் சாப்பிடலாம். இளம் பிரண்டைத் தண்டிலிருக்கும் நாரை நீக்கிவிட்டு, நெய் விட்டு வதக்கி உப்பு, புளி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து துவையல்போலச் செய்து, நல்லெண்ணெய் சிறிது கலந்து சாப்பிட, செரிமானத் திறன் அதிகரித்து நல்ல பசி உண்டாகும். தண்டு மட்டுமன்றி, இலைகளைப் பயன்படுத்தியும் துவையல் செய்யலாம். முதிர்ந்த வயதில் தோன்றும் சுவையின்மை நோய்க்கும் பிரண்டைத் துவையல் பலன் கொடுக்கும். நெய் விட்டு அரைத்து வதக்கிய பிரண்டையைச் சிறுநெல்லி அளவு சாப்பிட்டுவர, மூல நோயில் உண்டாகும் ஆசனவாய் எரிச்சல், வலி, ரத்தம் வடிதல் விரைவாக மறையும். குடலில் இருக்கும் பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது. பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் உடல் சோர்வுக்கும் பிரண்டையை உணவில் சேர்த்து வரலாம். மருந்தாக: பிரண்டையின் சத்துக்கள், ரத்தத்தில் அளவுக்கு மீறி உலாவும் கொழுப்பு வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுவதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடற்பருமன், அது சார்ந்த பிரச்சினைகளுக்கு பிரண்டையின் செயல்பாடுகள் பலன் அளிக்குமா என்பது குறித்தும் நிறைய ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உடலில் உண்டாகும் வீக்கங்களைப் போக்கும் தன்மை பிரண்டைக்கு இருக்கிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு உண்டாகும் வலி, வீக்கத்தை இது விரைவாகக் குறைக்கும். முறிந்த எலும்புகள் ஒன்றுகூடும் செயல்பாடுகளை பிரண்டை துரிதப்படுத்துகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் ‘பிரண்டை உப்பு’ எனும் சித்த மருந்து, குடல் சார்ந்த நோய்களுக்குச் சிறந்த மருந்து. வீட்டு மருந்தாக: பிரண்டைத் தண்டுகளை நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து, வடகமாகக் குளிர் காலத்தில் பயன்படுத்தி வர, கப நோய்கள் அவ்வளவு எளிதாக அணுகாது என்கிறது ‘தேரையர் காப்பியம்’ நூல். உடல் சோர்வு ஏற்பட்டாலே சுண்ணச் சத்துக் குறைபாடு என்று நினைத்து, தாமாகச் சென்று மருந்தகங்களில் கிடைக்கும் ‘கால்சியம்’ குளிகைகளை வாங்கிச் சுவைக்கும் போக்கு ஆபத்தானது. ரத்தத்தில் சுண்ணச் சத்தின் அளவை முறைப்படுத்த, உணவில் அவ்வப்போது பிரண்டையைச் சேர்த்து வருவதோடு, சிறிது சூரிய ஒளியும் போதும். பிரண்டையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் ‘எலும்பு அடர்த்திக் குறைவு’ நோயின் (Osteoporosis) வருகையைத் தள்ளிப்போடலாம். பற்களின் பலத்தையும் பிரண்டை அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம். சிறுதுண்டு பிரண்டையின் மீது உப்புத் தடவி, நெருப்பில் காட்டி லேசாகப் பொரித்து, அதை நீரில் ஊறவைக்க வேண்டும். குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்று உப்புசத்துக்கு, இந்த நீரைச் சிறிதளவு கொடுக்க உடனடி நிவாரணம் கிடைக்கும். சுளுக்கு, தசைப்பிடிப்பு உள்ள பகுதிகளில், பிரண்டையை அரைத்து, உப்பும் புளியும் சேர்த்து தண்ணீரில் இட்டுக் காய்ச்சி மிதமான சூட்டில் பற்றுபோடலாம். உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதற்காக, பிரண்டையின் இலைகள், தண்டுகளை முக்கிய மருந்தாக கேமரூன் நாட்டில் பயன்படுத்துகின்றனர். பிரண்டையின் தண்டு, இலைகளை உலரவைத்துப் பொடி செய்து, மிளகும் சுக்கும் சேர்த்து சாதப் பொடியாகப் பயன்படுத்த, செரிமானத்தை முறைப்படுத்தும். ‘ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை…’ எனும் அகநானூற்றுப் பாடல், பிரண்டை பற்றிப் பதிவிடுகிறது. நெடுங்காலமாக நம்முடைய உணவு முறையில் முக்கியப் பங்கு வகித்த பிரண்டை, பல்வேறு சடங்குகளிலும் விழாக்களிலும் இடம்பிடித்திருக்கிறது. கணுப்பகுதியுடன் கூடிய பிரண்டைத் தண்டை மண்ணுக்குள் புதைத்து வைக்க, விரைவாக நமது ‘தோளைத் தாண்டி வளரும் பிள்ளையாக’ அது உருவெடுக்கும். கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

கல்விச்சோலை - kalvisolai health tips

கழுத்து வலி போக்கும் கால்சியம்!

கழுத்து வலி போக்கும் கால்சியம்! | டாக்டர் கு. கணேசன் | மத்திய வயதுள்ளவர்களுக்கும் அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கும் கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம், கழுத்தெலும்பு தேய்மானம். ‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Cervical Spondylitis) என்பது இதன் மருத்துவப் பெயர். முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்துபோவது அல்லது விலகிவிடுவது போன்ற காரணங்களாலும் கழுத்துவலி வருவது உண்டு. பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத் தொடங்கும். இதற்கு ஜவ்வுகளில் நீர்ச்சத்து குறைவதும், எலும்புகளில் கால்சியம் சத்து குறைவதும் முக்கியக் காரணங்கள். இதனால், எலும்புகள் மெலிந்து, வலுவிழந்துவிடும். இவ்வாறு வலுவிழந்த எலும்புகள் வழக்கமான தசைகளின் அழுத்தம் காரணமாக, விரைவிலேயே தேய்ந்துவிடும். ஜவ்வு விலகியிருந்தால், அது கைகளுக்கு வரும் நரம்புகளை அழுத்தும். அப்போது கழுத்தில் மட்டுமல்லாமல் கைகளுக்கும் வலி பரவும். சில நேரம் வயதானவர்களுக்கு கழுத்தெலும்பில் எலும்பு முடிச்சுகள் (Osteophytes) வளரும். இதனாலும் கழுத்து வலி வரக்கூடும். இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்துவலியை ஏற்படுத்துகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்துவலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்குக் கழுத்துத் தசைகள் சீக்கிரத்தில் இறுகிவிடும். இதுவும் 50 வயதில் நிகழும். புகைபிடிக்கும் பழக்கம் இருந்தாலோ உடற்பருமன் இருந்தாலோ கழுத்துவலி சீக்கிரத்தில் வந்துவிடும். கழுத்துவலிக்கு இன்னொரு காரணம் இது: வயதாக ஆக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் விரைவில் சோர்ந்து போகும். அப்போது கழுத்தை அந்தத் தசைகளால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடாகக் கழுத்துவலி வரும். அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்குப் பாதை போடும். அறிகுறிகள் இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவதுபோல் வலிக்கும். விரல்கள்வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும்போது கழுத்துவலியுடன் தலைசுற்றலும் ஏற்படும். நடப்பதற்குச் சிரமமாக இருக்கும். உங்கள் அப்பாவுக்கு உள்ள நிலைமை இதுதான் எனத் தெரிகிறது. என்ன பரிசோதனை? கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம். என்ன சிகிச்சை? ஆரம்பநிலையில் உள்ள கழுத்துவலியைச் சாதாரண வலி மாத்திரைகளால் குணப்படுத்திவிடலாம். பிரச்சினை நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, கழுத்துக்கு ‘ட்ராக்ஷன்’ போட்டுக்கொள்வது, பிசியோதெரபி ஆகியவை உரிய பலன் தரும். சிலருக்குக் கழுத்தெலும்பில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். என்ன உணவு? புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மிகுந்த பால், பால் பொருட்கள், மீன், முட்டை, இறைச்சி, காய்கறி, பழங்களை உட்கொள்ள வேண்டும். கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, பீட்ரூட், அவரை, துவரை, பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் கால்சியம் மிகுந்துள்ளது. இந்த உணவு வகைகளில் ஒன்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தடுப்பது எப்படி? எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள். பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்தவரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள். பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு உறங்குங்கள். ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம். கணினியில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை, கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்கவேண்டும் என்றிருந்தால் கழுத்துவலி உறுதி. கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகப் படிக்கும்போதும் கணினியைப் பார்க்கும்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும். தலையைக் குனிந்துகொண்டே அதிக நேரம் வேலை செய்யக் கூடாது. உதாரணம் - தையல் வேலை செய்கிறவர்கள். மிருதுவான, சிறிய தலையணையைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படிப் படுத்துக்கொண்டால் கழுத்தும் தலையும் வசதியாக இருக்கிறதோ, அப்படிப் படுத்து உறங்குங்கள். அளவுக்கு அதிகமான சுமையைத் தூக்காதீர்கள். உடல் பருமன் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நடத்தல், நீந்துதுல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளில் ஒன்றை தினமும் கடைப்பிடியுங்கள். கழுத்துத் தசைகளுக்கு வலுவூட்டும் தசைப்பயிற்சிகளை அல்லது யோகாசனப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதும் நல்லது. மோசமான சாலைகளில், ஸ்பீடு பிரேக்கர்களில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

கல்விச்சோலை - kalvisolai health tips

‘உப்பு’ கரிக்கும் உண்மை!

இனிப்பு தேசத்தில், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இனிப்பில் மட்டுமல்ல. உப்பிலும்தான். காபிக்குச் சர்க்கரை வேணாம் என்று சொல்லிவிட்டு, ‘ஊறுகாய் இல்லாமல் மோர் சாதம் எப்படி?’ என வாதிடுவோருக்குத்தான் இந்த வாரக் கட்டுரை. தினையும் பனையும் மாதிரி உப்பின் வரலாறும் நீண்ட ஒன்று. உணவுக்கான ஓட்டத்தையும் காலத்தையும் உலகில் சற்றே ஒதுக்கி வைத்த பெருமை உப்பின் பதப்படுத்தும் ஆற்றலில்தான் உருவாயிற்று. நாகரிகங்கள் உருவாகி செல்வங்கள் ஒருபக்கமாய்ச் சேர்ந்ததற்கும் உப்புக்குமான தொடர்பு கெட்டியானது. நாம் இன்றைக்குச் ‘சம்பளம்’ என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தும் ‘Salary’ எனும் வார்த்தை, ‘Salt’ எனும் சொல்லில் இருந்துதான் பிறந்தது. இவ்வளவு மகத்துவமான உப்பை, அறுசுவையின் அத்தியாவசியச் சுவையை நீரிழிவுக்காரர்கள் கொஞ்சம் யோசித்துப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உப்பு உடலுக்குள் செய்யும் பணி ரொம்ப முக்கியமானது. இதயம் சுருங்கி விரிய, ரத்த நாடி, நாளம் தன் பலத்தோடு ரத்த ஓட்டத்தைச் சீராக இயக்க என உப்பு செய்யும் பணி அலாதியானது. ஆனால் அதே நேரம், ஒரு சிட்டிகை உப்பு கூடுதலாகச் சேர்ந்துவிட்டால், துணைக்குக் கூடவே நீரையும் சேர்த்துக்கொள்வதால், ரத்தக் கொதிப்பைக் கூட்டிவிடும் ஆபத்து உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு, மூன்று மாத சராசரி அளவு ஆகியவற்றைப் பார்க்கும் அதேவேளையில், நிற்கும்போது, படுக்கும்போது, உட்காரும்போது ரத்தக் கொதிப்பு அளவு எவ்வளவு என்பதும் மிக மிக முக்கியமானது. சித்த மருத்துவத்தில் பித்த நாடியின் ஓட்டத்தைச் சர்க்கரை நோய்க்குக் கொஞ்சம் உற்றுப் பார்ப்பது போலத்தான், நவீனப் புரிதல் ரத்த அழுத்தத்தை இனிப்பர்களுக்கு உற்றுப் பார்க்கிறது. சித்த மருத்துவப் புரிதல்படி, ஆரம்ப கட்ட இனிப்பு நோயருக்கு, முதலில் பித்த நாடி வலுவிலும் அளவிலும் இயல்பைவிடச் சற்றுக் கூடியிடிருக்கும். பசிக்கிற நேரத்தில் பேய்ப் பசியாய் மாறுவது இந்தப் பித்த ஆதிக்கக் குணத்தால்தான். பசிக்கும்போது, கோபமும் எரிச்சலும் உங்களுக்குப் பற்றிக்கொண்டு வருகிறதா? பரிமாறத் தாமதமாகும்போது பசி தாங்க முடியாமல், நடுவிரல் தானாக ஒரு ஆட்டம் ஆடி நிற்கிறதா? ஆம் என்றால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது GTT எனும் ரத்த சோதனையோ, நாடி சோதனையோதான். இரண்டும், உங்களுக்கு ஆரம்ப கட்ட நீரிழிவு நோய் வருகிறதா அல்லது ரத்தக் கொதிப்பு ஏறுகிறதா என்பதைத் தெரிவிக்கும். நாடியில் பித்தமும் ரத்தத்தில் சர்க்கரையும் சேர்ந்து ஏறி நின்று கலாய்க்க ஆரம்பித்துவிட்டது என்றால், இனிப்போடு சேர்ந்து உஷாராக இருக்க வேண்டிய பொருள் உப்புதான். நாம் ஒரு விஷயத்தை மிக முக்கியமாக உணர்ந்துகொள்ள வேண்டும். என்றைக்கு நமக்கு ரத்த சர்க்கரை அளவு உயர்ந்திருக்கிறது என்பதை உணர்கிறோமோ அப்போதே சிறுநீரகம் சற்றே பழுதாக, தொய்வாகத் தொடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். பல கோடி ஃபில்டர்கள் இருப்பதால் அந்தச் சிறுநீரகத் தொய்வின் தொடக்கம் எந்தச் சோதனையிலும் தெரிவதில்லை. காதோர நரைமுடி முதுமையை அறிவிக்காததுபோல, அமைதியாய் இருக்கும். ஆதலால், நாம் வெள்ளைச் சர்க்கரையைச் சற்றே விலக்கி இருக்க எத்தனிக்கும்போது, இந்த வெள்ளை உப்பையும் கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மெல்ல மெல்ல இதயம் விரிவடையும்போது வரும் அழுத்தம் (Diastolic blood pressure) உயரத் தொடங்கும். அப்பாவும் அம்மாவும் ரத்தக் கொதிப்பர்கள் என்றால், பிள்ளைக்கு அந்தச் சொத்து பங்கு போடாமல், பாந்தமாய் வந்து சேர்ந்துவிடுவது வாடிக்கை. ரத்தச் சர்க்கரையும் ரத்தக் கொதிப்பும் ஒன்றாய்ச் சேரும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் மிக மிக அவசியமாகிறது. சிறுநீரக ஃபில்டர்கள் பழுதாவது இங்கேதான் அதிகம். ஒவ்வொரு முறை சர்க்கரையைச் சோதிக்கும்போது, கை நாடியைப் பிடித்துப் பித்தத்தைப் பரிசோதிக்கும்போது, கூடவே அந்த ‘ஸ்பிக்மோமனோமீட்டர்’ (Sphygmomanometer) வைத்து ரத்தக் கொதிப்பையும் ஒரு எட்டுப் பார்ப்பது நல்லது. உப்பை அதிகமாகப் பயன்படுத்துவது ரத்த அழுத்ததைத் தூக்கிவிடும் என்பதை மறக்கக் கூடாது. 5-7 கிராம் உப்பை நாம் தினசரி சேர்க்கிறோம். அது அவசியமல்லாதது. உப்புச் சுவை அநேகமாய் எல்லாக் காய்கறிகளிலும் உள்ளது. ‘நான் இந்துப்பு, பாறையுப்பு, கறுப்பு உப்புதான் பயன்படுத்துகிறேன். இந்த அயோடைஸ்டு சோடியம் குளோரைடு உப்பு பயன்படுத்துவதில்லை’, என்று சொல்வோருக்கு ஒரு செய்தி. அவை அனைத்திலும்கூட, நல்ல பல நுண்ணியச் சத்துக்களோடு, சோடியம் குளோரைடும் உண்டு. மரபு உப்பென்றாலும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

ஆயுள் கூட்டும் அவரை

ஆபத்தான பாக்டீரியா வகைகள் எங்கே அதிகம் வசிக்கின்றன?

சமையலறை ஸ்பாஞ்சுகளிலும் விளையாட்டுக் கருவிகளிலும் ஜிம்மில் உள்ள தரைவிரிப்புகளிலும் பாக்டீரியா வகைகள் விரும்பி வசிக்கும். தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோல், கணினி கீபோர்டு ஆகியவற்றைத் தனது நவீனக் குடியிருப்புகளாக பாக்டீரியா மாற்றிக்கொண்டுவிடும்.

வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டில் அமர்வதால் நோய் வருமா?

மற்ற பரப்புகளைவிட டாய்லெட் சீட்டில் உட்கார்வதால், நோய் வரும் சாத்தியம் மிகவும் குறைவுதான்.

கண்ணீரில் எத்தனை வகை?

‘பேசல் டியர்’ எனும் ‘அடிப்படையான கண்ணீர்’, கண்களை உலராமல் ஈரமாக வைத்திருக்கிறது. இமை நீர் என்னும் ‘தூண்டல் கண்ணீர்’ வெங்காயம், புகை போன்றவற்றிலிருந்து கண்ணைக் காக்கிறது. ‘உணர்வுநிலைக் கண்ணீர்’ என்பது நாம் துயரத்திலிருக்கும் போதோ மகிழ்ச்சியிலிருக்கும் போதோ வருவது. கண்ணீர், மனிதர்களுக்கு மட்டுமே தனித்துவமானது. வேறு எந்த உயிரினமும் கண்ணீர்விட்டு அழுவதில்லை.

நீண்ட ஆயுளுக்கு எந்த உணவு உதவும்?

அவரை உணவு அதிக ஆயுளைக் கொடுப்பதாக உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. சோயா பீன்ஸ் சாப்பிடும் ஜப்பானியர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் பட்டாணி சாப்பிட்டால் அதிக காலம் வாழமுடியும் என்று நம்புகிறார்கள். மத்தியத் தரைக்கடல் நாட்டவர்கள் துவரம் பருப்பு, காராமணி, கொண்டைக்கடலையைச் சாப்பிட்டு நீண்டகாலம் உயிர் வாழ்கின்றனர்.

புற்றுநோயைக் குணப்படுத்த, தடுக்க இயற்கையாக ஏதாவது வழிமுறை இருக்கிறதா?

புற்றுநோய் கிருமிகளை இஞ்சி கொல்வதாக மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகளைவிட இஞ்சி கூடுதல் பலனளிப்பதாகச் சொல்லப்படுகிறது.

கல்விச்சோலை - kalvisolai health tips

நோய்களுக்கு யோகா சிகிச்சை

நோய்களுக்கு யோகா சிகிச்சை
நோய்களுக்கு யோகா சிகிச்சை 

கல்விச்சோலை - kalvisolai health tips