Saturday 22 December 2018

மனச்சிதைவைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு

மனச்சிதைவு நோயைக் குணப்படுத்த ரஷிய ஆய்வாளர்கள் புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். மனநலப் பாதிப்புகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், ரஷியாவில் உள்ள பாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி பெற்றுள்ளனர். டிஏஏஆர்1 என இப்போதைக்கு குறியீட்டுப் பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்தை ஆய்வுக்கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்திப் பரிசோதித்தனர். அதற்கு எதிர்வினையாக எலிகளின் மூளைப்பகுதியில் உள்ள நரம்பியல் பகுதியில் சில மாற்றங்கள் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து வெளியிடுவதன் மூலம் மனச்சிதைவு, வெறிநோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக இந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஏலியா சுக்னோவ் தெரிவித்திருக்கிறார்.

கல்விச்சோலை - kalvisolai health tips

ரத்தம் உறையாமை நோய்

உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போது உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிரை பறிக்கும் பிரச்சினை. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய் ஆகும்.

உடலுக்குள் ரத்த குழாய்க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் உறையாமலே இருக்கும் பிரச்சினை தான் ஹீமோபீலியா. பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்த நோய், பரம்பரை சம்பந்தப்பட்டது.

பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்த நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்த நோய் உள்ளவர் கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்த நோய் உள்ளவர்கள் வலி நிவாரண மருந்துகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். இது ஆண்கள் உடலில் xy குரோமோசோம் களாகவும், பெண்கள் உடலில் xx குரோமோசோம்களாகவும் இருக்கும். x குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே இந்த நோய்க்கு முதன்மை காரணம். ஒரு x கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க முடியாது.

இரண்டு xx கொண்ட பெண்களுக்கு ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு x உள்ள மரபு பண்புகளைக் கொண்டு ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவும் பெண் என்பதால் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் இவரது சந்ததியை அது பாதித்தது.

அவருக்கு வந்ததோ மிக மோசமான ஹீமோபீலியா பி நோய் வகை. இவரது ஐந்து குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் மூலம், அரச வம்சத்து ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் பரவ விக்டோரியா காரணமாக இருந்தார். இதனால் இது அரச நோய் என்ற பெயரையும் பெற்றது. ரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு. அடிபடாமல் கவனமாக இருந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம்.

ரத்த உறவில் திருமணம் செய்வதால் தான் இந்த நோய் அதிகம் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மரபணுவில் உள்ள இந்தச் சிக்கல், ரத்த சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் மூலமே பரவுகிறது. மரபணு காரணமாவதால் இந்த நோய்க்குத் தீர்வு இல்லை. ஆனால், இதைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Saturday 1 December 2018

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை முடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலில் உருவாகும் புற்றுநோய் திசுக்களை எதிர்த்துச் சண்டையிட்டு முறியடிக்கும் ஒருவித செல்கள், உடல் பருமன் அதிகமுள்ளவர்களின் உடல், கொழுப்புகளால் அடைக்கப்படுவதால், அவற்றின் செயல்பாடு நின்று புற்றுநோய் ஏற்படுவதாக அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் புற்றுநோயை உண்டாக்கும், அதேவேளையில் தடுக்கும் வாய்ப்புள்ள புற்றுநோய்க்கான காரணிகளில் புகைப்பழக்கத்தை அடுத்து உடல்பருமன் இரண்டாவது இடத்தை வகிப்பதாக அந்நாட்டின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் புற்றுநோய் தாக்கும் 20 பேரில் ஒருவர் அல்லது ஓராண்டுக்கு 22 ஆயிரத்து 800 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக அதிகப்படியான உடல் பருமன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலில் பெரும்பகுதியை கொழுப்பு அடைத்துக்கொண்ட பிறகு அது உடலில் உள்ள செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி, புற்றுநோயை உண்டாக்குகிறதா, புற்றுநோய் அணுக்களை அதிகரிக்கிறதா என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தனர்.

இந்நிலையில், உடல்பருமன் அதிகமுள்ளவர்களின் கொழுப்பு எவ்வாறு புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது என்பதை டிரினிட்டி கல்லூரி விஞ்ஞானிகள் ‘நேச்சர் இம்யூனாலஜி’ இதழில் விளக்கியுள்ளனர்.

ஒவ்வொருவரின் உடலிலும் இயற்கையாக அமைந்துள்ள புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை அவற்றைப் பாதிக்கும் கொழுப்புகளிடம் இருந்து காப்பாற்றி அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் மருந்துகளை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

‘‘இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்கும் சேர்மத்தைப் பரிசோதித்துப் பார்த்தோம். நாங்கள் நினைத்தவாறே அதை முற்றிலும் அழிக்க முடிந்தது’’ என்று பேராசிரியர் லிடியா லிஞ்ச் கூறுகிறார்.

‘‘புற்றுநோய் அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துவதைவிட உடல் எடையைக் குறைப்பது மற்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கு உதவும் சிறந்த வழி’’ என்றும் அவர் கூறுகிறார்.

‘‘13 வகையான புற்றுநோய் ஏற்பட உடல் பருமனே காரணமாக உள்ளது என்று நமக்குத் தெரிந்தாலும், உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து இதுவரை தெளிவான பதில்கள் கிடைத்திருக்கவில்லை’’ என்று இங்கிலாந்தின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் லியோ கார்லின் கூறுகிறார்.

‘‘கொழுப்பு மூலக்கூறுகள் எவ்வாறு நோய் எதிர்ப்பு அணுக்களை தனது புற்றுநோய் தடுப்புச் செயல்பாட்டை மேற்கொள்ளவிடாமல் தடைசெய்கிறது என்பதையும், அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான புதிய வழிவகைகளையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்குக் காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் உண்டாவதற்கு புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது, உடல் உழைப்பு இல்லாமை ஆகிய ஐந்து காரணிகளே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22 சதவீதம் பேரின் பாதிப்புக்குக் காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைபிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.

உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்குக் காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்கள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புற்றுநோய் பல உறுப்புகளில் ஏற்பட்டாலும், நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் இந்நோய் உண்டாகிறது.

கல்விச்சோலை - kalvisolai health tips