Sunday 31 December 2017

தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்

தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள் | இனிய சுவையுடன் ஏராளமான நன்மைகளையும் அளிப்பவை பழங்கள். எண்ணற்ற சத்துகளைக் கொண்ட பெட்டகங்களாக அவை திகழ்கின்றன.வாழைப்பழம்: இயற்கையாகவே வாழைப்பழத்தில் அமில எதிர்ப்புச் சக்தி அதிகம். அதனால், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலன்களை அடையலாம். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட, வாழைப்பழத்தைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிக்கத் தூண்டும் நிகோட்டினை சிறிது சிறிதாகக் குறைக்க உதவும். இதன் மூலம் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும்.பப்பாளிப்பழம்: ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் ஒன்று, பப்பாளி. இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டைத் தீர்க்கவும், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், ஆண்மை பலம் கிட்டவும், ரத்த விருத்தி பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் துணைபுரிகிறது. பெண்களை அவதிப்படுத்தும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய நல்லதொரு மருந்தாகிறது. மேலும் இதில் உள்ள கரோட்டின் சத்து, புற்றுநோய்க்கு எதிரியாகும். நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. பழுக்காத பப்பாளிப்பழத்தை தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் செரிமானக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல மருந்தாகும்.கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொய்யாவுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்தும் சாப்பிடலாம். சொறி, சிரங்கு மற்றும் ரத்தசோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நலம் பயக்கும். வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் நிறைந்த கொய்யா தோல் வறட்சியைப் போக்கும், முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையை மிளிரச் செய்யும்.
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து உள்ளது. இது உடலுக்குப் பலம் தருவதுடன், ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், தாது உப்புகள் போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. தாது உப்புகள் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் முக்கியமாகும். கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிக மாகவும் உள்ள அன்னாசி இதய நோய் வராமல் தடுக்கக்கூடியது. தொப்பையைக் கரைக்கமுடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு டேபிள்ஸ்பூன் பொடியாக்கிய ஓமம் சேர்த்து நீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் பருகிவந்தால், தொப்பை குறையும். மிளகு ரசத்துடன் அன்னாசிப்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.மாதுளம்பழம்: இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம், இதயம், மூளை போன்றவற்றுக்கு சக்தி தரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பைப் போக்கும். ரத்தபேதிக்கு நல்ல மருந்தான மாதுளை, தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும் செய்யும். குடல்புண்ணை ஆற்றும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாறை அருந்தலாம். மேலும் இது, கர்ப்பகால ரத்தசோகையைப் போக்கும். உடல்சோர்வைப் போக்க மாதுளம்பழத்தின் சாறுடன் கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். மாதுளை கடுமையான இதய வலியைப் போக்கக்கூடியது.

ரத்த அழுத்தம் நோய்தானா ?

ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கப்படுகிறது. பரம்பரை, உடற்பருமன், முதுமை, முறையற்ற உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய், அட்ரீனல், தைராய்டு கோளாறு போன்ற பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நாம் பின்பற்றும் மேற்கத்திய உணவுப் பழக்கமும் மன அழுத்தமுமே இதற்கு முக்கியக் காரணங்கள். துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், செயற்கை உணவு வகைகள் எனக் கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதாலும், பள்ளிக் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை அனைவரையும் மன அழுத்தம் பாதிப்பதாலும். உங்களைப் போல் பலருக்கும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது. | DOWNLOAD

Saturday 16 December 2017

ஒரு கிளாஸ் டீ குடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?ஒரு கிளாஸ் டீ குடிப்பதில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள் | மழைச் சாரலில் சிலிர்த்தபடியே ரோட்டோரத்து கடைகளில் இருக்கும் கண்ணாடி குவளையில் டீ பருகியவாரே பெய்யும் மழையில் தொலைந்து போகும் ரசிகரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது. ரசனையுடன் நீங்கள் குடிக்கும் இந்த தேநீரில் உள்ள பயன்களையும் அதை பற்றிய சுவாரசிய தகவல்களையும் அறிவீர்களா? என்னதான் இப்போதெல்லாம் குறைவாக மழை பெய்தாலும், வேலைக் கெடுபிடிகளுக்கு மத்தியில், ஏற்கனவே குளிர் சாதன அறையில் பாதி உறைந்த நிலையில் இருக்கும் பலரது மனதில் எழும் எண்ணம், 'இப்போ சுடச்சுட ஒரு நல்ல டீ சாப்பிட வேண்டும்' என்பதே. தேயிலையில் இருக்கும் பாலிபினால் என்ற கலவை சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வரக்கூடிய புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் மிக்கது. முச்சுமுட்டும் வாகன புகைகளுக்கு மத்தியில் தினமும் பயணிப்பவர்களுக்கு அன்றாடம் டீ குடிக்கும் பழக்கம் இருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். உணவு முறைகளின் மாற்றம், மன அழுத்தம், பணிச்சுமை, இரவில் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் மட்டுமில்லாமல் இயல்பாகவே வயது காரணமாக ஏற்படக்கூடிய சுருக்கம், நினைவாற்றல் குறைப்பாடு ஆகியவற்றில் இருந்தும் நம் உடலையும், மூளையையும் இந்த டீ குடிக்கும் பழக்கம் பாதுகாக்கும். தேயிலைகள் பல வகைப்படும், ஒவ்வொன்றும் ஒவ்வொறு வகையில் சுவையான தேநீரை நமக்கு தருகிறது. உதாரனத்திற்கு; மசாலா டீ கிரீன் டீ பிளாக் டீ மசாலா டீ: என்னதான் தேநீரின் பிறப்பிடம் சீனா என்றாலும், இந்தியாவின் பாரம்பரிய தேநீர் வகைக்கு என தனி சிறப்புண்டு. மசாலா டீ அதாவது 'சாய்' என்று பரவலாக அழைக்கப்படும் இதில் தேயிலையுடன் ஏலக்காய், இலவங்கபட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து பருகுகிறோம். இது நம் நாட்டின் இயற்கை சூழலுக்கு ஏற்ற ஒரு பானமாகும். இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு மசாலா பொருட்களுக்குமே தனித்துவமான மருத்துவ குணங்கள் உண்டு என்பது பலரும் அறிந்ததே. இது உடல் வீக்கம், தொண்டை பிரச்னை, சளி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என ஒரு சர்வ நோய் நிவாரணியாக செயல்படுகிறது. கிரீன் டீ: இந்த பெயர் பல டீ விரும்பிகளுக்கு பிடிக்காத ஒன்றுதான் என்றாலும் இதில் நிறைந்துள்ள பயன்கள் ஏராளம். 'உடல் எடையை குறைக்க வேண்டுமா? இளமையாகவே இருக்க வேண்டுமா? கிரீன் டீ குடியுங்கள், இதுதான் என் அழகின் ரகசியம்' என்று பல முன்னனி நடிகைகள் அடிக்கடி விளம்பரங்களில் வந்து இவ்வாறு சொல்வதை நாம் பார்த்திருப்போம். உண்மையில் அதுதான் அவர்களுடைய அழகின் ரகசியமா என்று தெரியாது ஆனால், கிரீன் டீ நிஜமாகவே உடல் எடையை குறைப்பதோடு, மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்துவது, வாய் புண்ணை சரி செய்வது போன்ற பல நன்மைகளை வழங்கவல்லது. பிளாக் டீ: தலைவலிக்குது நல்லா ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சாதான் சரியாகும்னு அடிக்கடி ஃபீல் பன்னுபவரா நீங்கள்? அப்போ சரிதாங்க, உண்மையில் ஒற்றை தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகளுக்கு அதிக திடமான பிளாக் டீ ஒரு நல்ல மருந்து. அது மட்டுமின்றி சிறுநீரக கோளாறு, குறைந்த ரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய பாதுகாப்பு என இன்னும் பல நன்மைகளையும் தரக்கூடியது. டீ பருகாதவர்களை விட டீ குடிப்பவர்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 3% வரை உங்கள் உடலின் கலோரியை டீ குறைக்க வல்லது. அதாவது தினமும் 60-70 கலோரிகளை குறைப்பதன் மூலம் எந்த ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் 3.5 கிலோ வரை உடல் எடையை உங்களால் இழக்க முடியும். தேநீரில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட்ஸ் பேக்டீரியா போன்ற நுண்கிருமிகளால் பற்களின் மேற்பரப்பில் உருவாகும் படலம் போன்றவற்றிலிருந்து பற்களை பாதுகாக்கும். இன்னும் சொல்லப்போனால் தேநீரில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது வெண்மையான பற்களையும் தரும். எனவே வெள்ளை பற்களுடன் கூடிய அழகிய சிரிப்புக்கு தேநீரில் சர்க்கரை சேர்ப்பதை தவிருங்கள். காபியைவிட தேயிலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரில் 50% குறைவான கஃபைன் அளவே உள்ளது. அதனால் தேநீரில் கெடுதலே இல்லையா என்று கேட்காதீர்கள், 'அளவுக்கு மீறினல் அமிழ்தமும் நஞ்சு' எனவே உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற அளவு டீ குடிப்பதில் எந்தவொரு அபாயமும் இல்லை. அடுத்து வரவிருக்கும் மழை காலத்தில் உங்களை உற்சகப்படுத்துவதோடு உடலிற்கும் பல நன்மைகளும் தரும் என்கிற நம்பிக்கையோடு தேநீரை சுடச்சுட பருகி மகிழுங்கள்.

மூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து

மூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து | இந்தக் குளிர் காலத்தில், காற்றுப் புகாமல் மூடிய அறைக்குள் தூங்க விரும்புவது இயல்பு. ஆனால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது. தூங்கும் அறையில் காற்றோட்டம் மிகவும் அவசியம், காற்றோட்டம் இல்லாவிட்டால் அபாயம் அதிகம் என்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் கூறுகின்றனர். குளிர் காலத்தில் சிலர் மூடிய அறைக்குள் உறங்குவது மட்டுமல்ல, சூட்டை உண்டாக்குவதற்காக கரி, மரத்துண்டு போன்றவற்றை எரிக்கும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். அவற்றில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, அறையை விட்டு வெளியேற வசதியின்றி, தூங்குபவர் களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும். ஒரு காரில் எஞ்சினை மட்டும் ஓடவிட்டு, கண்ணாடியை ஏற்றிவிட்டு உள்ளே உட்கார்ந்திருந்தாலும் மூச்சுத்திணறல் ஏற்படும். மூடிய அறைக்குள் வெப்பத்தை உருவாக்கும் சாதனங்களைப் பயன்படுத்தும்போது, காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்துகொள்வது உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும். குளிர்காலத்தில், புளோயர், ஹீட்டர் மற்றும் கரி அடுப்பு போன்றவற்றின் முன் அமர்ந்து குளிர் காய்வதால் தோலில் வறட்சித்தன்மை ஏற்படும். அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கு இது அதிக பாதிப்பை அதிகப்படுத்தும். இதைத்தவிர, தலையில் பொடுகுத்தொல்லையும் ஏற்படும், ஏற்கனவே பொடுகுப் பிரச்சினை இருப்பவர்களுக்கு அது மிகவும் அதிகமாகும். உஷ்ணம் ஏற்படுத்தும் உபகரணங்கள், சருமத்தின் இயற்கை ஈரத்தன்மையை இழக்கச்செய்கின்றன. கரி அல்லது மரத்துண்டுகள் எரியும் இடத்தில் காற்றோட்டத்துக்குத் தேவையான வசதிகள் இல்லையென்றால், அங்கு இருப்பவர்கள் பிராணவாயுவுடன் சேர்த்து கார்பன் மோனோக்சைடையும் சுவாசிக்கின்றனர். கார்பன் மோனோக்சைடு, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் சேர்ந்து, கார்பாக்சிஹீமோகுளோபினாக மாறிவிடுகிறது. உண்மையில், ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த செல்கள், பிராணவாயுவை உட்கிரகிப்பதற்கு முன்னரே கார்பன் மோனாக்சைடுடன் இணைகின்றன. பொதுவாகவே, கார்பன் மோனாக்சைடு மிகவும் அதிகமாக இருக்கும் இடத்தில் ஒருவர் இருந்தால், அவரின் ரத்தத்தில் பிராணவாயுவைவிட கார்பன் மோனாக்சைடு விரைவாகச் சேரும். இதனால் உடலின் பிற பாகங்களுக்குச் செல்ல வேண்டிய பிராணவாயுவின் அளவு குறைகிறது. இதனால் ஹைபோக்சியா என்ற நிலைமை உருவாகி, திசுக்கள் அழிக்கப்படுவதோடு, மரண அபாய அளவும் அதிகரிக்கிறது. பொதுவாக நாம் இருக்கின்ற இடத்திலும், சுவாசிக்கின்ற காற்றிலும் நச்சுத்தன்மை இருக்கிறதா என்பதை அறிவது மிகவும் முக்கியம். காற்றில் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகமாக இருந்தால், தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். இவற்றைத்தவிர, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதோடு கண்களில் எரிச்சலும் தோன்றும். ஆக மொத்தம், குளிர்காலத்தில் வெப்பத்தைக் கொடுக்கும் சாதனங்களைப் பயன்படுத்தினால், அந்த இடத்தில் காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். மூடப்பட்ட அறைகளில் நிலக்கரி அல்லது மரத்துண்டுகளை எரிக்கக் கூடாது. ஹீட்டர் அல்லது புளோயர் பயன்படுத்தினாலும் கவனம் தேவை. அவற்றை அதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்துதான். சமீபத்தில் டெல்லியில், மூடிய வேனுக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். வேனுக்குள் குளிரை ஏற்படுத்துவதற்காக அவர்கள் தந்தூரி அடுப்பைப் பயன்படுத்தியதுதான் இந்தப் பரிதாபத்துக்குக் காரணம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு அவர்கள் கதவுகளை திறந்துவைத்திருந்தால், உயிர் பிழைத்திருக்க முடியும். குளிர் வேளையில் வெப்பமூட்டும் வசதிகளை நாடுவதில் பிழையில்லை, ஆனால் அதில் எச்சரிக்கை தேவை என்பதே நிபுணர்கள் கூறும் கருத்து.

கொய்யாவில் குவிந்திருக்கும் நன்மைகள்

கொய்யாவில் குவிந்திருக்கும் நன்மைகள் | பழங்களில் பலரும் கொய்யாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் அதில் சத்துகளுக்குக் குறைவில்லை. கொய்யாவில் குவிந்திருக்கும் சத்துகள் பற்றி... கொய்யாவில் உள்ள 'வைட்டமின் சி' சத்து, ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட நான்கு மடங்கு அதிகம். இந்த வைட்டமின் 'சி' சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன், கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது. நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவு கொண்டதாகவும் கொய்யா உள்ளது. கொய்யாப் பழத்தில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கொய்யாப்பழம் உண்ண அறிவுறுத்தப்படுகிறது. நன்றாகப் பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்டா பழத்தைச் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும். கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும். மதிய உணவுக்குப் பிறகு கொய்யாப்பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும், வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சீறு நீரகக் கோளாறு உள்பட பல நோய்கள் கட்டுப்படுத்தும் ஆற்றலும் கொய்யாவுக்கு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.

பாகற்காயும் சர்க்கரை நோயும்

பாகற்காயும் சர்க்கரை நோயும் | கசப்புச் சுவை கொண்டது என்றாலும் பல இனிப்பான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக்கூடியது, பாகற்காய். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக பாகற்காய் பரிந்துரைக்கப்படுகிறது. பாகற்காயில் உள்ள சரண்டின், மொமார்டின் வேதிப்பொருட்கள்தான் சர்க்கரை நோய்க்கு எதிரான கவசமாகத் திகழ்கின்றனவாம். பாகற்காய் ரத்தச் சர்க்கரை அளவை மட்டும் குறைக்கக் கூடியதல்ல. ரத்த கொழுப்பு வகைகளைக் குறைப்பதிலும், செல் அழிவைக் கட்டுப்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்டையும் கொண்டிருப்பதுதான் இந்தக் காயின் சிறப்பு. வெந்தயம், கறிவேப்பிலை போன்றவையும் இப்படிப்பட்ட சிறப்புத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. பாகற்காய் சாப்பிடுவதால் நாம் உட்கொள்ளும் பிற நவீன மருந்துகளின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இரண்டின் தன்மையும் ஒன்றோடு மற்றொன்று மாறுபடாதிருக்கக் குறைந்தபட்சம் 45 நிமிட இடைவெளி இருந்தால் நல்லது. அதேநேரம் பல சித்த மருந்துகளுக்குப் பத்தியமாகப் பாகற்காய் நீக்கப்பட அறிவுறுத்தப்படுவதும் உண்டு. எனவே, சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் நமது மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் பாகற்காய் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம். அதிக மாவுச்சத்துப் பொருட்களைச் சாப்பிடுவது, உடலுழைப்பு குறைவு, அதிக உடல் எடை அல்லது அதிக மன உளைச்சல் ஆகியவை மட்டுமே நீரிழிவு நோய்க்கான முழுமையான காரணம் இல்லை. வேறு பல காரணங்களும் இருக்கின்றன. எது எப்படியிருந்தாலும், இன்று சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது உண்மை. பாரம்பரியச் சித்த மருத்துவப் புரிதல்படி பார்த்தால், மேக நோயில் ஒரு வகையாகவே நீரிழிவு பார்க்கப்படுகிறது. இதைப் பல வகைகளில் சீர்ப்படுத்த வேண்டும். இல்லையென்றால், பல பின்விளைவு நோய்களைத் தரும் என்று அன்றே எடுத்துக்கூறியிருக்கிறார்கள். எனவே, நீங்கள் எந்தத் துறை சார்ந்த மருந்துகளை உட்கொண்டுவந்தாலும், உணவில் கவனம், சரியான உடற் பயிற்சி, உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே சீரமைக்கும் யோகாசனப் பயிற்சி ஆகிய அனைத்தும் சேர்ந்திருந்தால் மட்டுமே படிப்படியாக சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். எனவே, சர்க்கரை நோய்க்குக் கடிவாளம் போட பாகற்காய் போன்ற உணவுப்பொருட்களும் உதவும் என்றாலும், முழுக்க முழுக்க அதை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியிருக்கக் கூடாது.