Wednesday, 29 April 2026

கோடைகால வெயிலும் பாதுகாக்கும் வழிமுறைகளும்


பருவநிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் வெயில் சுட்டெரிப்பதால், மக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதிலிருந்து தற்காத்துக்கொள்ள மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் பின்வருமாறு:

1. 'ஹீட் ஸ்ட்ரோக்' (வெப்ப வாதம்) மற்றும் கோடை நோய்கள்

அறிகுறிகள்: சருமம் வறண்டு போதல், நாவறட்சி, மனக்குழப்பம், தலைவலி, அதிக மூச்சு வாங்குதல், மயக்கம். சில நேரங்களில் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து கை, கால்கள் இழுத்துக்கொள்ளும்.

பிற பாதிப்புகள்: நீர்ச்சத்து குறைபாடு, அம்மை நோய், வயிற்றுப்போக்கு, சிறுநீரகத் தொற்று மற்றும் உணவு ஒவ்வாமை.

2. வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள்

நேரக் கட்டுப்பாடு: வெயில் உச்சத்தில் இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் சமைப்பதையும் தவிர்க்கலாம்.

ஆடைகள்: அடர் நிற ஆடைகளைத் தவிர்த்து, வெளிர் நிறத்திலான (Light colors), தளர்வான, உடல் முழுவதையும் மூடும் பருத்தி ஆடைகளை அணியவும்.

பாதுகாப்பு உபகரணங்கள்: வெளியே செல்லும்போது குடை (கருப்பு நிற குடைகளைத் தவிர்க்கவும்), தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் பயன்படுத்தவும்.

குழந்தைகள் பாதுகாப்பு: வெயில் நேரத்தில் கார்களை நிறுத்திவிட்டு, உள்ளே குழந்தைகளையோ வளர்ப்புப் பிராணிகளையோ தனியாக விட்டுச் செல்லக் கூடாது. கார்கள் எளிதில் சூடாகி ஆபத்தை ஏற்படுத்தும்.

குளியல்: உடல் உஷ்ணத்தைத் தணிக்க காலை, இரவு என இரண்டு வேளை குளிப்பது சிறந்தது. அவ்வப்போது குளிர்ந்த நீரால் முகம், கை, கால்களைக் கழுவலாம்.

3. நீர்ச்சத்து மற்றும் திரவ உணவுகள்

தண்ணீர்: தினமும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியே செல்லும்போது கட்டாயம் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும்.

இளநீர் & உப்புக்கரைசல்: இளநீர் உடலைக் குளிர்வித்து உப்புச்சத்தை சீராக்கும். வியர்வையால் வெளியேறும் உப்புச்சத்தை ஈடுகட்ட ஓ.ஆர்.எஸ் (ORS) உப்புக்கரைசல் நீரைப் பயன்படுத்தலாம்.

தவிர்க்க வேண்டியவை: கடைகளில் விற்கப்படும் பாட்டில் குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. கோடைகாலத்திற்கு ஏற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள்

நீர்ச்சத்துப் பழங்கள்: தர்பூசணி (90% நீர்ச்சத்து கொண்டது), கிர்ணி, ஸ்ட்ராபெரி, ஆப்பிள், பப்பாளி மற்றும் மாம்பழம் ஆகியவை உடல் சூட்டைத் தணிக்கும்.

வைட்டமின் சி பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்றவை கோடைகால அலர்ஜி மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுத்து நீர்ச்சத்தை அதிகரிக்கும்.

வெள்ளரிக்காய்: இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் கோடையில் ஏற்படும் மலச்சிக்கலைத் தடுக்கும்.

5. உடலை குளிர்ச்சியாக்கும் பிற உணவுகள்

கற்றாழை: இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளது. கற்றாழையை முகத்தில் தடவினால் சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்கும். மோருடன் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

கீரை வகைகள்: வாரம் பல முறை கீரைகளை உணவில் சேர்ப்பது வெப்பத்தைத் தணிக்கும்; ரத்த சோகையைத் தடுத்து எலும்புகளை வலுவாக்கும்.

வெங்காயம்: கோடையிலும் சளி பிடிக்கும் என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிகப்பு வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்க்கலாம்.

தயிர் & வாழைப்பழம்: குடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான 'ப்ரோ பயோடிக்' தயிரில் உள்ளது. வியர்வையால் ஏற்படும் சோர்வை நீக்க பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்களைச் சாப்பிடலாம்.

6. தவிர்க்க வேண்டிய உணவுகள்

எளிதில் செரிமானமாகாத, அதிக காரம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை, ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, எளிதில் செரிமானமாகும் மீன் போன்றவற்றை மட்டுமே குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. அதிக அசைவ உணவுகளை இந்தக் காலத்தில் தவிர்ப்பது நோய்த் தொற்றுகளில் இருந்து காக்கும்.

Sunday, 20 December 2020

மூல நோய்க்கான காரணம்

40 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் மூல நோய் முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலானோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்க தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசன வாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்த சோகை என பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்கு செலுத்துவதுடன், ரத்தம் தேவையில்லாமல் சிரை குழாய்களில் தேங்கி நிற்பதையும் தவிர்க்கிறது. ஆனால் நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயில் இருந்து குடலுக்கு செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை. இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள 2 சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப் புடைத்து, தடித்து ஒரு கட்டி போல திரண்டு விடுவதை ‘மூலநோய்’ என்கிறோம்.

மலச்சிக்கல் மூல நோய்க்கு முக்கிய காரணம். வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூல நோயை ஏற்படுத்தும். கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர, வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கி தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.

சிலருக்கு பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், மாமிச உணவு வகைகள், விரைவு உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புகை பிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும் ரத்தக் குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.

நடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.

40 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அந்த வயது உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Friday, 24 April 2020

வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் அற்புத கசாயம்

வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கசாயத்தை குடித்து பலன்பெறுங்கள்.

தேவையான பொருட்கள்
மணத்தக்காளிக் கீரை - ஒரு கைப்பிடி வெந்தயம் - 30 கிராம் சின்ன வெங்காயம் - 75 கிராம் ஏலரிசி - ஒரு கிராம்

செய்முறை
முதலில் மணத்தக்காளிக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், வெந்தயம், ஏலரிசி ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 750 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் மணத்தக்காளிக் கீரை , சிவக்க வறுத்து வைத்துள்ள வெங்காயம், வெந்தயம் , ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி இறக்கி வடிகட்டி குடிக்கவும்

பயன்கள்
இந்தக் கசாயம் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். இந்த கசாயத்தை தயார் செய்து காலை , மதியம் , மாலை என மூன்று வேளையும் வேளையும் தலா 50 மி.லி அளவாக குடித்து வரவும். இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE

   FOOD CONSULTANCY  CENTER

   - கோவை பாலா

   இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

   Cell: 96557 58609, 75503 24609

   Covaibala15@gmail.com

Sunday, 5 April 2020

கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்?

காற்றில் உயிர்வாழும் நேரம்

இருமல் மற்றும் தும்மலின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, மிகச்சிறிய, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.

இந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30இல் ஒரு பங்கு.

ஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.

ஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.

இன்ஃபுளூயென்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவரின் தும்மலில் வெளியாகும் ஒரு சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தது.

இந்த அளவு ஒவ்வொரு வகை வைரஸுக்கும் வேறுபடலாம்.

கொரோனா வைரஸ் மலத்தில் எவ்வளவு நேரம் உயிர்வாழும்?

மனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் இந்த வைரஸ் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பான நேர அளவு எதுவும் இல்லை.

இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர், முழுமையாக கைகளை சுத்தம் செய்யாமல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் அவற்றின்மீது இந்த வைரஸை பரவச் செய்ய முடியும்.

அதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது, வைரஸ் தொற்றியுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதுதான் மனித உடலுக்குள் இந்த Sars-CoV-2 கொரோனா வைரஸ் செல்வதற்கான முக்கியமான வழியாக உள்ளது.

உலோகங்கள், பிளாஸ்டிக், கண்ணாடி

கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

குளிர்ச்சியான சூழல்களில் அவை 28 நாட்கள் வரைகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தற்போது பரவி வரும் Sars-CoV-2 வகை கொரோனா வைரஸ் உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவை தாக்குப்பிடிக்கின்றன.

கொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்ளவு நேரம் இருக்கும்?

துணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

எனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய கார்டுபோர்டு அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே இந்த கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்.

சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் இந்த நேர அளவின் மீது தாக்கம் செலுத்தும்.

Sars-CoV-2 கொரோனா வைரஸை பொருட்கள் மீது அழிப்பது எப்படி?

தற்போது பரவி வரும் Sars-CoV-2 கொரோனா வைரஸ் 62-71% ஆல்கஹால் அளவுள்ள கிருமி நாசினி அல்லது 0.5% ஹைட்ரஜன் பெராக்ஸைடு பிளீச்சிங் பவுடர் அல்லது 0.1% சோடியம் ஹைட்ரோகுளோரைட் உள்ள வீட்டுப் பயன்பாட்டுக்கான பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்து ஒரு நிமிடத்துக்கும் குறைவான காலத்தில் ஒழித்து விடலாம்.

கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - சில சந்தேகங்களும், விளக்கமும்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.

இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள்.

இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

நோயாக உருவாகும் காலம்
இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம்.

உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.

சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.

தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி உடலில் செலுத்தி, அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும்.

ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது.

நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளது.

லேசான நோய்
ஏறத்தாழ அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும்.

கொரானா வைரஸ் தொற்று பரவிய 10 பேரில் எட்டு பேருக்கு கோவிட் - 19 நோய் லேசான பாதிப்பாக அமையும். காய்ச்சலும், இருமலும் தான் இதற்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

உடல் வலிகள், தொண்டை வறட்சி, தலைவலியும் கூட வரலாம். ஆனால் இவை வந்தாக வேண்டும் என்றும் கிடையாது.

காய்ச்சலும், அசௌகரியமாக உணர்தலும், தொற்று பரவியதற்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடியவை. இந்த வைரஸ் ஊடுருவல் கிருமியாக இருக்கும். உடலின் மற்ற செல்கள், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து சைட்டோகின்ஸ் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்யும்.

இவை தான் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படும். ஆனால் உடல் வலி, காய்ச்சலையும் ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் இருமல் ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருக்கும் பின்னர் வைரஸ் தொற்று ஏற்படும்போது, செல்களில் எரிச்சல் தோன்றும்.

சிலருக்கு இருமலின் போது கெட்டியான சளி வெளியாகும் - வைரஸால் கொல்லப்பட்ட நுரையீரல் செல்களின் கெட்டியான சளியாக அது இருக்கும்.

படுக்கையில் கிடந்து ஓய்வெடுத்தல், நிறைய பானங்கள் குடித்தல் மற்றும் பாரசிட்டமால் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் விசேஷ சிகிச்சை முறை எதுவும் தேவையில்லை.

இந்த நிலை சுமார் ஒரு வாரத்துக்கு இருக்கும் - இதிலேயே பெரும்பாலானோர் குணமாகிவிடுவர். வைரஸை எதிர்த்து நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இவ்வாறு நடக்கும்.

இருந்தபோதிலும், சிலருக்கு தீவிர கோவிட் -19 நோய் பாதிப்பு ஏற்படும்.

இந்த நிலையில், இந்த நோய் பற்றி நாம் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் இவை. மூக்கு ஒழுகுதல் போன்ற தீவிர சளி அறிகுறிகளும் ஏற்படலாம் என்றும் ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தீவிர பாதிப்பு
வைரஸ் பாதிப்புக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் உக்கிரமாக செயல்படும்போது, இது நோயாக உருவாகும்.

உடலின் மற்ற பகுதிகளில் அழற்சியை ஏற்படுத்த இது ரசாயன சமிக்ஞைகளை அனுப்பும். ஆனால் இதை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான அழற்சி ஏற்பட்டால் உடல் முழுக்க பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

``நோய்த் தடுப்பாற்றல் எதிர்வினை செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மையை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக உடல் அழற்சி இருக்கிறது. இதை எப்படி செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை'' என்று லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நத்தாலி மேக்டெர்மோட் கூறியுள்ளார்.

நுரையீரல் அழற்சி, நிமோனியா எனப்படுகிறது.

உங்கள் வாயில் இருந்து, மூச்சுக் குழாய் வழியாகச் சென்று, நுரையீரலின் சிறிய குழல்களில் அதனால் செல்ல முடியும் என்றால், நுண்ணிய காற்று அறைகளில் அதனால் போய் அமர்ந்து கொள்ள முடியும்.

அங்கு தான் ரத்தத்திற்கு ஆக்சிஜன் செல்வதும், கரியமில வாயு நீக்கப்படுவதும் நடக்கிறது. ஆனால், நிமோனியாவில் இந்த அறைகளில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு, சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பது சிரமம் ஆகும்.

சிலருக்கு சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படும்.

சீனாவில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தால், 14 சதவீதம் பேருக்கு இந்த நிலை வரை பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.

சிக்கலான நிலையில் பாதிப்பு
பாதிக்கப்பட்டவர்களில் 6 சதவீதம் பேருக்கு சிக்கலான நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் உடல் செயல்பாட்டை இழக்கிறது, இதுவே மரணம் ஏற்படவும் காரணமாக உள்ளது.

நோய்த் தடுப்பாற்றல் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு, உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்துவது தான் பிரச்சினை.

ரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்கு குறையும்போது உடல் உறுப்புகள் செயல்பாடு குறையும் அல்லது முழுமையாக நின்றுவிடும்.

நுரையீரலில் பரவலான அழற்சி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும்போது, உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை அளிப்பதை நுரையீரல் நிறுத்துவிடுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் சிறுநீரகங்களை அது தடுக்கக் கூடும். உங்கள் குடல்களும் பாதிக்கப்படலாம்.

``நீங்கள் அதற்கு ஆட்படும் அளவுக்கு பெரிய அளவில் அழற்சியை இந்த வைரஸ் ஏற்படுத்தலாம். அது பல உறுப்புகளை செயல் இழக்கச் செய்யலாம்'' என்று டாக்டர் பரத் பன்கானியா கூறுகிறார்.

வைரஸை நோய்த் தடுப்பாற்றலால் அடக்கியாள முடியாமல் போனால், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் அது பரவி, இன்னும் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் உடலின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். ECMO உள்ளிட்ட சிகிச்சைகள் அதில் அடங்கும்.

தடிமனான குழாய்களில் ரத்தத்தை வெளியில் எடுத்து, ஆக்சிஜனேற்றம் செய்து, மீண்டும் உடலில் செலுத்தக் கூடிய செயற்கை நுரையீரல் இது.

ஆனால் உறுப்புகள் உடலை உயிருடன் வைத்துக் கொள்ள முடியாமல் போகும் போது, அது உயிர்ப்பலி ஏற்படுத்தக் கூடும்.

முதலாவது மரணங்கள்
சிறந்த சிகிச்சைகள் அளித்தும் சில நோயாளிகள் எப்படி இறந்தார்கள் என்பதை டாக்டர்கள் விவரித்துள்ளனர். முதல் இரு நோயாளிகள் சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஜின்யின்டன் மருத்துவமனையில் இறந்தனர் என்று லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது நபர், 61 வயதான ஆண், மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சமயத்திலேயே தீவிர நிமோனியா பாதிப்புக்கு ஆளாகியிருந்தார்.

அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் இருந்தது. வென்டிலேட்டர் வைத்த பிறகும், அவருடைய நுரையீரல் செயல் இழந்துவிட்டது, இருதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 நாட்களில் அவர் இறந்து போனார்.

இரண்டாவது நோயாளி, 69 வயது ஆண், அவருக்கும் தீவிர மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்தது.

அவருக்கு ECMO சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. தீவிர நிமோனியா மற்றும் ரத்த அழுத்த குறைபாட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் இறந்து போனார்.