Saturday 31 March 2018

கொலஸ்ட்ரால்... பாதிப்புகளும், தப்பிக்கும் வழிகளும்


கொலஸ்ட்ரால்... பாதிப்புகளும், தப்பிக்கும் வழிகளும் ‘கொலஸ்ட்ரால்’ என்ற சொல்லே இன்று பலரைப் பய முறுத்துவதாக இருக்கிறது. வெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத இன்னொரு ஆபத்தான விஷயம்தான், கொலஸ்ட்ரால். வயதானவர்களை மட்டுமின்றி, நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விஷயமாக கொலஸ்ட்ரால் இருக்கிறது. சிறுவயதிலேயே ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிய ஆரம்பித்துவிடுகிறது என்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம். கொலஸ்ட்ரால் நமது ரத்தத்தில் அதிகரித்திருந்தால் என்ன நடக்கும்? வெளிப்படையாக உங்களுக்கு உடல் வலியோ, கழுத்து வலியோ, நெஞ்சு வலியோ, இளைப்போ வேறு எந்தப் பிரச்சினையோ ஏற்படப் போவதில்லை. ஆனால் சற்றுக் காலம் செல்லச் செல்ல பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள், கண்பார்வை பாதிப்பு போன்ற கடுமையான தாக்கங்கள் ஏற்படலாம். கொலஸ்ட்ரால் அதிகரிப்பு தொடர்பாக வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இல்லாதநிலையில், ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். அதாவது, ‘லிபிட் புரொபைல்’ என்ற பரி சோதனை செய்யப்படுகிறது. 12 மணிநேரம் உணவின்றி இருந்து இந்த ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பானங்களும் ஆகாது. ஆனால் வெறும் நீர் அருந்தலாம். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இப்பரிசோதனையைச் செய்வது நல்லது. ஆனால், கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக்கூடிய வாய்ப்புள்ள அனைவருமே வயது வித்தியாசம் இன்றி இச்சோதனையைச் செய்ய வேண்டும். பின்வருவோர் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ‘ரீனல் பெய்லியர்’ எனப்படும் சிறுநீரக வழுவல் உள்ளவர்கள், மாரடைப்பு, பக்கவாத பாதிப்புக்கு உள்ளானவர்களும், அது ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களும், அதாவது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்ட ரத்த உறவுகளைக் கொண்டவர்கள், உடல்பருமன் உடையவர்கள், புகை, மதுபான பழக்கம் உள்ளவர்கள், உடல் உழைப்புக் குறைந்த பணி செய்பவர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் ஆகியோர் வயது வேறுபாடின்றி தமது ரத்த கொலஸ்ட்ரால் அளவை அறிந்திருப்பது அவசியமாகும். ரத்த கொலஸ்ட்ராலில் டோட்டல் கொலஸ்ட்ரால், எல்டிஎல், எச்டிஎல், டிரைகிளிசரைடு எனப் பலவகை உண்டு. இந்த கொலஸ்ட்ரால் வகைகளில் அதிகம் கவனத்தில்கொள்ள வேண்டியவை, கெட்ட கொலஸ்ட்ரால் என்று சொல்லப்படும் எல்டிஎல் (லோ டென்சிட்டி லிபோபுரோட்டீன்) கொலஸ்ட்ராலும், டிரைகிளிசரைடு கொலஸ்ட்ராலும் ஆகும். இந்த கொலஸ்ட்ரால் வகைகள் அதிகரிப்பதற்கு, உணவு சார்ந்த காரணிகள் 25 சதவீதம்தான். எஞ்சிய 75 சதவீதத்துக்கு ஏனைய காரணிகளே காரணம். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த மற்ற காரணிகளின் பங்கு விவரம்.... பரம்பரை அம்சங்கள் 15 சதவீதம், மேலும், அதிகமான எடை 12, ஹார்மோன்களும் நொதிகளும் 8, உயர் ரத்த அழுத்தம் 8, மதுப்பழக்கம் 2, மனஅழுத்தம், உணர்ச்சிவசப்படுதல், சமூக பொருளாதார நிலை 8, சர்க்கரை நோய் 7, உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை 6, புகைப்பழக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு 6, பாலினம், வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள் போன்ற பிற காரணிகள் 5 என்ற சதவீத அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் அபாயத்தை ஏற்படுத்தும் காரணிகளில் மிக உயர்ந்த அளவான 25 சதவீதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைதான். எனவே நமது தவறான உணவுப் பழக்கமே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது. உணவுமுறைக்கு அடுத்தபடியாக பரம்பரை அம்சம் உள்ளது. இது 15 சதவீதம் வரை கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளது. சரி, கொலஸ்ட்ரால் நம்மை நாடாமல் எப்படித் தவிர்ப்பது? நமது உணவுமுறையில், கொலஸ்ட்ரால் மிகுந்த உணவுகளைக் குறைக்க வேண்டும். உணவில் பொதுவாக எல்லாக் கொழுப்புப் பொருட்களையும் குறைக்க வேண்டும். முழுத்தானிய உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கூடுதலாக உட்கொள்ள வேண்டும். புகை, மதுப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். தினசரி குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நமது எடையை நம் உயரத்துக்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, மருத்து வர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகமான எடை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ரொம்பவும் முக்கியம். கவனத்தோடு நடந்துகொண்டால், கொலஸ்ட்ரால் பற்றிக் கவலையில்லை!

மாம்பழத்தின் மகிமை


மாம்பழத்தின் மகிமை பழக்கடைகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது ருசியால் ஈர்ப்பது மாம்பழம். சுவையில் மட்டுமின்றி, தனது மருத்துவக் குணங்களாலும் மகிமை பெற்றுத் திகழ்கிறது, முக்கனிகளில் முதல் கனி. ஒரு ‘கப்’ மாம்பழத் துண்டுகளில், 100 கலோரிகள், 1 கிராம் புரதம், 0.5 கிராம் கொழுப்பு, 24 கிராம் சர்க்கரை, 3 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளைக்குத் தேவையான 100 சதவீத வைட்டமின் சி, 35 சதவீத வைட்டமின் ஏ, 20 சதவீத போலேட், 10 சதவீத வைட்டமின் பி6, 8 சதவீத வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் தாமிரம், கால்சியம், இரும்புச் சத்துகளும், ஸீசாந்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்டுகளும் அடங்கியிருக்கின்றன. இப்படி சத்துகளின் பெட்டகமாக உள்ள மாம்பழம், புற்றுநோய், குடல் இறக்கம், இதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகக் கருதப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும். நரம்புத் தளர்ச்சியை இப்பழம் போக்கும். மாம்பழச்சாறு பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும். இப்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும். தொடர்ந்து மாம்பழம் சாப்பிடுவதால் ரத்தஓட்டம் சீராகும், கர்ப்பக் கோளாறுகள் நிவர்த்தியாகும். தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களைத் தீர்க்கும் தன்மையும் மாம்பழத்துக்கு உண்டு.

Sunday 4 March 2018

புரதம் நிறைந்த வெள்ளைக்கரு

புரதம் நிறைந்த வெள்ளைக்கரு | காலை உணவுடன் முட்டையையும் சேர்த்துக் கொள்வது நல்லது. ஊட்டச்சத்து மிகுந்த முட்டை, உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. உடலுக்கு தேவையான ஆற்றலை அது தருகிறது. முட்டையை ஆம்லெட்டாகவோ, வேகவைத்தோ, பொரித்தோ சாப்பிடலாம். இளம் வயதைக் கடந்தவர்கள் வேகவைத்த முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வரலாம். முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! மஞ்சள் கருவை நீக்கி விட்டால் முட்டையில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்துபோய்விடும். கொழுப்பை விரும்பாதவர்கள், அதிக கொழுப்பு அளவை கொண்டிருப்பவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. முட்டையில் அதிக புரதம் உள்ளது. குறிப்பாக வெள்ளைக்கருவில் உடலுக்கு நன்மை தரும் குறைந்த கொழுப்பு கொண்ட புரதம் நிரம்பியிருக்கிறது. அதனால் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைத்துவிடும். கெட்ட கொழுப்பும் குறையும். முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கலோரி இருக்கிறது. அதனை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் குறைந்த கலோரிகளே உடலுக்கு கிடைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளைக்கருவில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். இதயத்துக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும். ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவும். வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ, பி 12 மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. வைட்டமின் பி12 தசை சிதைவு, கண் புரை, ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்க துணைபுரியும். வெள்ளைக்கருவை சாப்பிடும் வேளையில் மஞ்சள் கருவை அறவே ஒதுக்கிவிடவும் கூடாது. அதிலும் ஊட்டச்சத்துகள் உள்ளன. முக்கியமாக கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வெள்ளைக்கருவைவிட மஞ்சள் கருவில் அதிகம் இருக்கின்றன. எனினும் அதிக கொழுப்பு, உடல் எடை பிரச்சினை, சர்க்கரை நோய், ஜீரணம் தொடர்புடைய பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு வெள்ளைக்கரு சாப்பிடுவதே சிறந்த தீர்வாக அமையும்.

Saturday 3 March 2018

சுண்டைக்காயின் சிறப்பு

​சுண்டைக்காயின் சிறப்பு சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் பெரியது. இதன் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பாகின்றன. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சுண்டைக்காயை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடல்சோர்வு நீங்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக்கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். சுண்டைக்காய் மட்டுமல்ல, அதன் இலைகள், வேர், கனி என முழுத் தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கக்கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் செரிமானத் தன்மையை சிறப்பாக்கும். சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச் சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகின்றன. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். அது மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கிச் சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள கசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வு, வயிற்றுப் பொருமல் போன்றவை நீங்கும். சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் தயாரித்து அருந்தி வந்தால் ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.