Sunday 29 April 2018

இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?

 • இயல்பாக நடைபெற்றுவந்த விஷயங்கள் எல்லாம் தற்போது முயற்சி மேற்கொண்டு செய்யவேண்டியவை ஆகிவிட்டன. அதற்கு உதாரணம், உறக்கம்.உறக்கம் ஓடிவரவில்லை என்று மருத்துவ உதவியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தூக்கத்துக்கு உதவுவதற்கு என்றே மருத்துவமனைகள்கூட உருவாகிவிட்டன.இந்நிலையில், சில எண்கள் வாயிலாக உறக்கத்தின் முக்கியத்துவம், கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்...
 • உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தினமும் 7 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குகிறார்கள். ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியம். உறக்கக் குறைவு, இதயநோய், மனஅழுத்தம், சர்க்கரை வியாதி, உடல் பருமன் என்று பல பிரச்சினைகளை கைப்பற்றி அழைத்துவரும்.
 • தினமும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் உறங்குவதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு படுக்கைக்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திடுங்கள். ஞாயிற்றுக்கிழமையும் அந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம். அப்போது உங்கள் உடம்பு அந்த வழக்கத்துக்குப் பழகிக்கொள்ளும்.
 • ஒவ்வொரு மாதமும் சராசரியாக 7 முறை இரவுத் தூக்கம், கவலைகளால் பாதிக்கப்படுகிறது. இரவில் நம்மை விழித்திருக்க வைத்திருப்பதில், பணப் பிரச்சினை, ஆரோக்கிய அச்சம், வேலையை பற்றிய கவலைகள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. கவலையால் உறக்கத்தை இழந்திருப்பது தமது அன்றாட நலத்தைப் பாதிப்பதை உணர்வதாக 10-ல் 7 பேர் கூறுகின்றனர்.
 •  மெத்தை சரியில்லாவிட்டாலும் தூக்கம் பாதிக்கப்படும். சிறந்த மெத்தைகூட 7 ஆண்டு உபயோகத்துக்குப் பின் மோசமாகிவிடுகிறது. சுமார் 20 ஆயிரம் மணி நேர உறக்கத்துக்குப் பின் எந்த நல்ல படுக்கையும் முன்பைப் போல வசதியாக இருப்பதில்லை என்பது உறக்கவியல் ஆலோசனை மையத்தினரின் ஆய்வுக் கருத்து.
 • நாம் தினமும் இரவில் எத்தனை முறை கண் விழிக்கிறோம்? அதற்கு படுக்கை வசதிக் குறைவு காரணமாக இருக்கிறதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்போது தோன்றும் பதில்களைப் பொறுத்து, படுக்கையை மாற்றுங்கள்.
 • படுக்கையறையின் வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பதுதான் சரியானது. ஏன்? இயல்பாகவே இரவில் நம் உடல் வெப்பநிலை தணிகிறது. இந்நிலையில், படுக்கையறையின் குளுமை, நமது உடல் வெப்பநிலை யுடன் இணைந்து நல்ல உறக்கத்துக்கு உதவும்.
 • உங்கள் கட்டிலின் அகலம் குறைந்தபட்சம் 180 செ.மீ. ஆக இருக்க வேண்டும். நமது உறக்கத்துக்கும் கட்டிலின் அகலத்துக்கும் தொடர்பு உண்டு. பலர் சரியாக உறங்க முடியாமைக்கு, உடன் படுத்திருப்பவரின் தொந்தரவும் காரணம். நாம் தினமும் இரவில் சுமார் 60 முறை வளைந்து நெளிந்து படுக்கிறோம். அதிலும் உடன் படுத்திருப்பவர் ‘சுற்றிச் சுழல்பவர்’ என்றால், சிறிய கட்டிலில் சங்கடம்தான். இருவர் ஒன்றாகப் படுக்க வேண்டிய நிலையில், எதிரெதிர்ப்புறமாக ஒருக்களித்துப் படுக்கலாம்.
 • வெறும் 6 நிமிடங்கள் புத்தகம் வாசிப்பது 68 சதவீதம் அளவுக்கு மனஅழுத்தத்தைக் குறைக்கிறது என்கிறது இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வு. எனவே நூல் வாசிப்பு என்பது உறக்கத்துக்கு முன் செய்யக்கூடிய சரியான செயல். அது நம்மைத் தளர்த்துகிறது, நம் உறக்கத்தைப் பாதிக்கும் கவலைகளில் இருந்து திசைதிருப்புகிறது.
 • படுக்கைக்குச் செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன் குளிப்பது நல்லது. குளியலுக்குப் பின் உடல் வெப்பநிலை உடனடியாகக் குறைவதால், தூக்கம் உங்களை தாலாட்டத் தொடங்கிவிடும்.
 • படுக்கையில் உறக்கத்தை எதிர்நோக்கி, எவ்வளவு நேரம் கண்மூடிக் கிடப்பது? சுமார் 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று கருத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். உறக்கம் உங்களைத் தழுவுவதற்கு அவ்வளவு நேரம் மட்டுமே அனுமதிக்கலாம். அதற்குப் பின்பும் உறக்கம் வரவில்லை எனில், குறைந்த ஒலியில் மெல்லிசை கேட்பது, ஏதாவது புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
 • உங்கள் படுக்கையில் உங்களுடைய வியர்வை, எண்ணெய் மட்டுமல்ல, இறந்த சரும செல்களும் படிகின்றன. இந்தச் செல்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளுக்கு நல்ல உணவாகின்றன. இந்த நுண்ணுயிரிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். தேசிய உறக்கவியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, படுக்கை விரிப்பு சுத்தமாக இருக்கும்போது தங்களால் ஆழ்ந்து உறங்கமுடிவதாக 71 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். எனவே, 7 நாட்களுக்கு ஒருமுறை, அதாவது வாரம் ஒருதடவை படுக்கை விரிப்பு, தலையணை உறைகளை துவைத்து உலர்த்திப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருங்கள்.
 • காபி, செயற்கைக் குளிர்பானங்கள், டீ, சாக்லேட் ஆகியவற்றின் தாக்கம் முழுமையாக நீங்குவதற்கு சராசரியாக 8 மணி நேரம் ஆகிறது. எனவே நீங்கள் மாலையில் நேரங்கடந்து பருகும் ஒரு காபி, இரவில் உங்கள் தூக்கத்தில் குறுக்கிடக்கூடும். பிற்பகல் 2 மணிக்கு மேல் காபி பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

Saturday 28 April 2018

நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை

நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோய்களில், நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது, புகைப்பழக்கம் போன்றவை நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. அறுவைசிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலமாக நுரையீரல் புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுகிறது. கீமோதெரபி முறையில் பொதுவாக மருந்துகளை வாய் மூலமாகவோ, ஊசிகளின் மூலமாகவோ உடலின் உட்செலுத்தி, புற்றுநோயைக் கட்டுப்படுத்தி, அதைக் குணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நோயின் தன்மைக்கு ஏற்ப கீமோதெரபி மாறுபடும். ஆனால் இம்முறையில் முழுமையாகக் குணம் பெற முடியாது. இந்நிலையில், கீமோதெரபியுடன் இம்யுனோதெரபியையும் இணைத்துச் சிகிச்சை அளித்தால் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இம்யுனோதெரபியின்போது அளிக்கப்படும் பெம்பிராலிசுமா மருந்தை கீமோதெரபி சிகிச்சையுடன் வழங்கும்போது நுரையீரல் புற்றுநோயாளிகள் இறப்பு விகிதத்தை பாதியாகக் குறைக்கிறது. கீமோதெரபி சிகிச்சையை மட்டும் தனியாகச் செய்வதைவிட இது அதிக பலன் அளிக்கிறது. நோயாளிகளை அதிகநாள் வாழ வைக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சை முறை, 616 நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு மேற்கண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகில் உள்ள நுரையீரல் புற்றுநோயாளி களுக்கு நல்ல பலன் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனிப்புடன் நலம் அளிக்கும் பலா

இனிப்புடன் நலம் அளிக்கும் பலா பலாச்சுளையை அதன் தித்திப்புக்காக வாங்கி உண்போம். ஆனால் பலாவில் இனிப்புடன், ஆரோக்கிய நலன்களை அளிக்கும் பல மருத்துவக் குணங்களும் அடங்கியிருக்கின்றன. உதாரணமாக,
பலாச்சுளையில் வைட்டமின் சி, தாது உப்புகள், நார்ச்சத்து, மாவுச்சத்துகள் நிறைந்திருப்பதால், நல்ல சக்தியைத் தரும். பலாமரத்துப் பாலை கட்டிகளின் மீது தடவினால் வீக்கம் குறையும். வேரை பாலிட்டு அரைத்து சொறி, சிரங்குகளுக்குப் பூசலாம். பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு, உடலில் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேகவைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாறைக் கலந்து குடித்தால் ஆஸ்துமா தொல்லை அகலும். தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நலம் பயக்கும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகிறது. குழந்தைகள் பலாப்பழத்தை உண்பதால் எலும்புகள் வலு வடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது. பலாச்சுளையில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆக உள்ளது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது. பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது வயிற்றுப்புண், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோயாளிகளுக்கு ஏற்றது. பலாவில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். சருமத்தை மிருதுவாகவும், வழவழப்பாகவும் ஆக்கும், நரம்பு களுக்கு உறுதி தரும். நெய் அல்லது தேன் கலந்த பலாப்பழத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்பெறும். இவ்வளவு நன்மைகள் நிறைந்திருந்தாலும் பலாப்பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இப் பழத்தைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Wednesday 11 April 2018

கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்

டாக்டர் கிளாரன்ஸ் டேவி, முதல்வர், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி, நாகர்கோவில் உஷ்ணம், வியர்வை சகிக்க முடியவில்லை. இப்போதே வெயிலின் தாக்கம் இப்படி அதிகமாக இருக்குமானால் மே மாதம் எவ்வாறு இருக்கும்...? யோசித்து பார்க்கவே முடியவில்லை... முதலில் கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம் என்ற தலைப்பிற்கு செல்லும் முன் பருவகாலங்கள் பற்றியும், எதனால் இவ்வளவு அதிகமான வெப்பம் உள்ளது என்பது பற்றியும் சிந்தனை செய்ய வேண்டும். ஒரு வருடம் என்பது ஆறு பருவ காலங்களை கொண்டது. அவை கார்காலம், இலையுதிர் காலம், முன்பனி காலம், பின்பனி காலம், இளவேனில் காலம் மற்றும் முதுவேனில் காலம் ஆகியவை ஆகும். இதில் இளவேனில் காலமானது தமிழ் மாதங்களாகிய சித்திரை மற்றும் வைகாசி மாதங்களை உள்ளடக்கியது. முதுவேனில் காலமானது ஆனி, ஆடி மாதங்களை கொண்டது. தற்போது பருவ நிலை மாற்றத்தின் காரணமாக இளவேனில் காலத்தில் நாம் கடுமையான வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு காரணம் நாம் தான். அதாவது மனித குலம் தனது சுயநலத்திற்கு இயற்கையை அழிப்பதும், ஆடம்பரத்திற்காக குளிரூட்டிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை அதிகம் பயன்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன. உதாரணமாக, தேசிய வனக்கொள்கை படி மாநிலம் ஒன்றின் புவி பரப்பில் 33.3 விழுக்காடு வனங்கள் இருக்க வேண்டும். ஆனால் நமது மாநிலத்தின் புவி பரப்பில் 17.59 விழுக்காடு மட்டுமே வனப்பகுதி இருக்கிறது. மனிதன் வாழ வேண்டுமானால் மரங்கள் தேவை. ஆகவே, இயற்கையின் கொடையாகிய வனங் களை அழிப்பதால் பருவகாலங்கள் மாற்றமடைகின்றன. சில காலநிலைகள் மிகவும் கடுமையானதாக மாறிவிடுகின்றன. இயற்கை பேரழிவுகளையும் நாம் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறோம். இவ்வாறு மனித குலம் தனது சுயநலத்திற்காக செய்யும் செயல்களினால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு கோடை காலத்தில் கடும் வெப்பத்தை நாம் அனுபவிக்கும் சூழ்நிலையில் உள்ளோம். இந்த கடும் வெப்பத்தை ஆயுர்வேத முறைப்படி எவ்வாறு எதிர்கொள்ளலாம்? என்பதை காண்போம். ஆயுர்வேத நூல்களில் கோடை காலம் என்பது “கிரீஷ்ம ருது” என்று அழைக்கப்படுகிறது. மனித உடல் 60 விழுக்காடு நீரினால் ஆனது. கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால், உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறுவதால் உடல் சோர்வடையும் உடலின் நீர் அளவை நிலை நிறுத்த அதிக அளவு தண்ணீர், பழரசம், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்றவற்றை அடிக்கடி பருக வேண்டும். கிரீஷ்ம ருதுவில் கபதோசம் குறைந்து வாத தோசம் அதிகரிக்க தொடங்கும். எனவே உப்பு, எரிச்சல், புளிப்பு ஆகிய சுவை அடங்கிய உணவுகளை தவிர்க்க வேண்டும். கடுமையான உடற்பயிற்சி, மற்றும் அதிக நேரம் சூரிய ஒளியில் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். இனிப்பு மற்றும் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு வகைகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள், குளிர்ச்சியான உணவுகளை உண்ண வேண்டும். பருத்தியால் ஆன ஆடைகள் மற்றும் வெண்ணிற ஆடைகளை உடுத்த வேண்டும். பாரம்பரிய உணவுகளாகிய பழைய கஞ்சி, கூழ் ஆகியவை சிறந்தது. கோடை காலத்தில் விளையும் அனைத்து பழ வகைகளையும் தவிர்க்காமல் உண்ண வேண்டும். தலையில் எண்ணெய் தேய்த்து, நீர் நிலைகளில் மூழ்கி குளிப்பது சிறந்தது. சுடு நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். மண்பானையில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீர் அதிகமாக பருக வேண்டும். இரவு 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். வாய்ப்பு இருந்தால் பகலில் சிறு தூக்கமும் இக்கால நிலைக்கு உகந்தது தான். அதிக உடலுறவை தவிர்த்தல் வேண்டும். மேற்கண்ட ஆயுர்வேத விதிப்படி வாழ முயற்சிப்போம். கோடையை நலமுடன் எதிர்கொள்வோம். கடும் கோடை வெயிலுக்கு நாம் தான் காரணம். ஆகவே இயற்கையை நேசிப்போம். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்வோம். ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவோம்.

Monday 9 April 2018

வெற்றிலையின் மருத்துவ மகிமை

வெற்றிலையின் மருத்துவ மகிமை சித்தவைத்தியர் பி.அருச்சுனன், வேலூர். நமது நாட்டின் பண்பில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முடிந்தவுடன் வெற்றிலை கொடுப்பது வழக்கம். இது அந்த செயல் வெற்றி பெற்றது என்பதற்கு அடையாளமாக தருவதாகும். ஒரு மாணவன் கல்வி கற்கச்செல்லும் போதும், நமது நாட்டின் கலைகளை கற்கச்செல்லும் போதும்,வெற்றிலையை கொடுத்தே ஆரம்பிப்பர். தான் மேற்கொள்ளும் பயிற்சியின் தொடக்கத்திலேயே வெற்றிப்பெறும் அடையாளமாக வெற்றிலையை கொடுப்பது வழக்கம்.அதே போல் நாட்டின் பண்புப்படி திருமணம் செய்வதற்கு முன்பு பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் இருவரும் தன் சுற்றத்தாரும், நண்பர்களுடனும் சேர்ந்து பேசி முடித்தப்பின்பு வெற்றிலை பாக்கை மாற்றிக்கொள்வது பேசியது வெற்றி பெற்றதைக் குறிப்பதாகும். இதோடு மட்டுமல்லாமல் பெண் கொடுத்தவரும், பிள்ளை கொடுத்தவரும் சமபந்தி என்பர். இப்படி சமபந்தி என்பது நான் பெண் கொடுத்தேன், நீங்கள் பிள்ளை கொடுத்தீர்கள் என்பதால் சமமாக அமர்ந்து உணவு உண்ணும் நிலையில் உள்ளவர்கள் என்று பொருள்.ஆனால் இன்று சமபந்தி என்ற சொல் மருவி சம்மந்தி என்று ஆகி விட்டது. இந்த வெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது. இந்த மூன்று ரகத்தையும் தனித்தனியே பார்க்கும் போது இதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். கருப்பு நிறம் இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர்.இது மணமாக இருக்கும். கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர். கற்பூர மணம் உள்ள வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும்.இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர். இந்த மூன்று விதமான வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பு பொருந்திய கார்ப்புத்தன்மை உடையதாகும். கம்மாறு வெற்றிலைச் சாறை தினமும் காலை உணவிற்கு பிறகு அரை ‘அவுன்ஸ்’ வீதம் மூன்று நாள் குடித்து வந்தால் வாத, பித்த கபத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை குறைக்கும். உடலில் நீர் ஏற்றம், தலையில் நீர் ஏற்றம், தலை பாரம் உணவு செரியாமை,மந்தம், குரல் கம்மல் வயிற்றுவலி, வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கும். இந்த வெற்றிலையை பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து உபயோகிக்கும் போது தாம்பூலம் என்கிறோம். இந்த தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும்,நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது. அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏன் என்றால் பாக்கு துவர்ப்புத் தன்மை உடையது. இத்தன்மையால் உமிழ்நீர் சுரக்காது. எனவே ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும்.அப்படி இல்லாமல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,இவைகளை ஒன்றாக மெல்லும் போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும்,ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தத்தோடும், அக்கினி மந்தம், ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்கிவிட வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் உண்ணும் முறையாகும். காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும். பசி இல்லாதவர்கள் மதிய உணவுக்கு பின்பு இவ்விதமாக உண்டால் ஆரோக்கியமான பசி உண்டாகும். மாலையில் வெற்றிலை அதிகமாகவும் பாக்கு, சுண்ணாம்பு, குறைவாகவும் மெல்வதால் வாயிலுள்ள ரணங்கள் குணமாகும். வயிற்று ரணத்தால் வாயில் வீசும் துர்வாடை நீங்கி நல்ல மணம் வீசும். இப்படி நோய்க்கேற்றவாறு வெற்றிலை, பாக்குகளை கூட்டிக்குறைக்கும் போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.வெற்றிலையை இளம் சூட்டில் வதக்கி சாறு எடுத்து அச்சாற்றை மூக்கில் இரண்டு துளி விட தலை நோய், தலைபாரம், தலையில் நீர்தேக்கம் ஆகியவை நீங்கும். இரண்டு வெற்றிலையுடன் 50 கிராம் ஊற வைத்த சிவப்பு அரிசியை சேர்த்து உண்டால் கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். சிறுவர்களுக்கு மலக்குற்றம் நீங்கும். அதோடு இருமல், மூச்சுதிணறல், கோழைக்கட்டு ஆகியவை நீங்குவதோடு இதை பெண்கள் உண்டால் ஆண்கள் மீது பற்றும் ஆண்கள் உண்டால் பெண்களின் மீது பற்றும் உண்டாகும்.