Thursday 21 June 2018

ரொம்ப நேரம் உட்காராதீங்க

நம்மில் பலர் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள். காலை முதல் மாலை வரை குறைந்தது எட்டு மணி நேரம் அமர்ந்தபடி வேலை செய்ய நேர்கிறது. இப்படி அதிகநேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு. * தொடர்ந்து உட்கார்ந்திருப்பதை முடிந்தளவு தவிர்க்கலாம். உதாரணமாக, வேலைகளுக்கிடையே அவ்வப்போது எழுந்து நடக்கலாம் அல்லது படிகளில் ஏறி இறங்கலாம். உடன் வேலை செய்பவர்களுக்கு மெசேஜ் அனுப்புவதற்குப் பதில் நேரில் சென்று தகவல் சொல்லலாம். * முன் பக்கமாக வளைந்தோ அல்லது 90 டிகிரியில் நேராகவோ உட்கார்வதைவிட 135 டிகிரி அளவில் சாய்ந்து உட்காருங்கள். இது முதுகில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும். * ஒரே மாதிரயான நிலையில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதால், கழுத்து, தோள்பட்டைப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் அழுத்தப்படுகின்றன. இதனால் ரத்த ஓட்டம் குறைந்து சோர்வு ஏற்படும். * நாம் ஓரிடத்தில் உட்கார்ந்ததும் நம் கால் தசைகளின் மின் செயல்பாடு நின்றுவிடும். அதாவது, ஒரு நிமிடத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலோரி எரிக்கப்படும் அளவு குறைந்துவிடும். கொழுப்பைக் குறைக்க உதவும் நொதிகளும் (என்சைம்) 90 சதவிகிதம் குறைந்துவிடும். இருக்கையில் உட்கார்ந்த இரண்டு மணி நேரத்தில் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவு 20 சதவிகிதம் குறைகிறது. 24 மணி நேரம் கழித்து இன்சுலின் சுரப்பின் அளவு 24 சதவிகிதம் குறைந்து சர்க்கரை நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியிலும் கழுத்துப் பகுதியிலும் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது. * நாம் கண்விழித்திருக்கும் நேரங்களில், ஒருநாளைக்கு 9 மணி நேரம் 20 நிமிடங்கள் அதிக உடல்உழைப்பு இல்லாத வேலைகளைச் செய்யலாம். 6 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை குறைந்த உடல்உழைப்புள்ள வேலைகளைச் செய்யலாம். ஆனால் 45 நிமிடங்கள் தீவிர உடல்உழைப்பு தேவை.

கல்விச்சோலை - kalvisolai health tips

No comments: