Thursday 21 June 2018

சரியாகச் சுவாசிக்கிறீர்களா?

`புத்துணர்ச்சி பெற உயிர்க்காற்று அவசியம் என்பது தெரிந்த ஒன்றே. ஆனால், நாம் எல்லோருமே சரியாகத்தான் சுவாசிக்கிறோமா என்று ஒருமுறை பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மில் பலர் எதிர்மாறாகவே சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது'' என்கிறார் யோகா இயற்கை மருத்துவர் மணவாளன். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், சுவாசம் தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் மணவாளன் செய்திருந்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் பலர் சரியாகச் சுவாசிப்பதில்லை என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. அது குறித்து அவருடன் பேசினோம்... இயற்கையாகக் காற்றில் காணப்படுவது ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு. இது பாலூட்டிகளின் மூக்குத் துவாரங்களில் தொடங்கி மெதுவாக மூச்சுக்குழாய் வழியாக உடலில் மார்புப் பகுதியில் உள்ள நுரையீரலைச் சென்றடையும். இதைத்தான் மூச்சு அல்லது சுவாசம் என்கிறோம். நுரையீரலைச் சென்றடைந்ததும், முழுமையாக நுரையீரல் விரிவடைந்து பிராண வாயு உடலின் உள்ளே செலுத்தப்படும். இந்த மூச்சுவிடுதல் அல்லது சுவாசித்தல் என்பது ஒருவித லயத்துடன் மீண்டும் மீண்டும் நடக்கும் ஒரு தொடர் செயல்பாடு. இந்தப் பூவுலகில் இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம் மூச்சு அல்லது உயிர்மூச்சு. உள்ளிழுப்பதை `உள்மூச்சு’ என்றும் வெளியேவிடுவதை `வெளிமூச்சு’ என்றும் சொல்வார்கள். இந்தச் செயல்பாட்டின்போது ரத்தத்தில் கலக்கும் சுவாசமானது தேவையற்ற கரியமிலவாயுவை வெளியே தள்ளும் பணியைச் செய்யும். இது மிகச் சாதாரணமாக நடக்கும் ஓர் இயற்கை நிகழ்வு. ஆனால், இந்தச் செயல்பாடு எல்லோருக்கும் ஒழுங்காக நடக்கிறதா என்பதில்தான் பிரச்னையே. அதாவது நாம் எல்லோரும் ஒழுங்காகச் சுவாசிக்கிறோமா என்பதே கேள்வி. பிறந்த குழந்தையை உற்றுப் பாருங்கள். அந்தக் குழந்தை சுவாசிக்கும் முறையே மிகச் சரியானது. ஆம், இயற்கையே குழந்தைக்கு சுவாசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த சுவாச முறையைத்தான் நாம் நம் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும். ஆனால், காலப்போக்கில் நம்மில் பலர் அதற்கு நேர்மாறாக சுவாசிக்கப் பழகிவிடுகிறோம். எங்களது மாணவர்கள் வயதானவர்களிடம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்தது. அதாவது 60 சதவிகிதம் பேர் சரியாகச் சுவாசிப்பதில்லை. உடலுக்குத் தேவையான பிராண வாயு குறையும்போது பெருமூச்சுவிடும்படி உடல் நம்மைத் தூண்டுகிறது. ஆழ்ந்த சுவாசம், சுவாசம்பெருமூச்சுவிடுதலின்போது நாம் நம்மையும் அறியாமல் ஒழுங்காகச் சுவாசிக்கிறோம். மற்ற நேரங்களில் வழக்கம்போல் மாற்றியே சுவாசிக்கிறோம். மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளே இழுத்ததும், அது நுரையீரலைச் சென்றடையும். அப்போது நுரையீரல் கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் மட்டுமல்லாமல் ஒரு பலூனைப்போல விரிவடையும். அப்படி விரிவடைந்தால்தான் சுவாசித்தல் முழுமை பெறும். மேலும், அப்போது வயிற்றையும் மார்பையும் பிரிக்கும் பகுதியான உதரவிதானம் (Diaphragm) கீழ்நோக்கிச் செல்ல வேண்டும். உதரவிதானம் கீழ்நோக்கிச் செல்லும்போது வயிற்றுப்பகுதி முன்னோக்கி அதாவது, வெளித்தள்ளப்பட வேண்டும். சுவாசத்தை வெளியே விடும்போது உதரவிதானம் மேல்நோக்கி எழும்; இதனால் வயிறு உள்நோக்கி இழுத்துக் கொள்ளப்படும். இப்படித்தான் சுவாசத்தின் செயல்பாடு நடக்கும். இதுதான் இயற்கையின் விதி, அறிவியல் என்றுகூடச் சொல்லலாம். குழந்தை பிறந்தவுடன் இந்தச் செயல்பாடு மிகச் சரியாகவே நடக்கும். ஆனால், வாழ்க்கைமுறை மாற்றத்தால் இயற்கைக்குப் புறம்பானச் செயல்பாடுகள் நடக்கின்றன. அதில் இந்த சுவாசச் செயல்பாட்டிலும் மாற்றம் நிகழ்கிறது. இந்த மாற்றம் எல்லோரிடமும் நிகழ்ந்துவிடுவதில்லை என்றாலும் 60 சதவிகிதம்பேர் இயற்கைக்கு மாறாகவே சுவாசித்து வருகிறோம். இயற்கைக்கு மாறான இந்த சுவாசச் செயல்பாட்டால் போதுமான அளவு பிராண வாயு கிடைப்பதில்லை. இதனால் நாளடைவில் உடல் சோர்வு, மன உளைச்சல் ஏற்படும். மேலும் தேவையான பிராணவாயு கிடைக்காமல்போவதால் செரிமானக்கோளாறில் தொடங்கி நோய்கள் அணிவகுக்கத் தொடங்கிவிடும். ஆனால், நாம் யாரும் இது பற்றி யோசிப்பதில்லை, இது யாருக்கும் தெரியவதுமில்லை. மூச்சுத்திணறல் அல்லது சுவாசத்தில் பிரச்னை ஏற்பட்ட பிறகே அது பற்றி சிந்திக்கிறோம். எனவே, முதலில் நாம் சரியாகத்தான் சுவாசிக்கிறோமா என்று நமக்கு நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு அதை நாமே சரிசெய்துகொள்ள முடியும் என்றால் சரி செய்துகொள்ளலாம். முடியாதபட்சத்தில் தகுதி வாய்ந்த யோகா இயற்கை மருத்துவரிடம் சென்று முறையாக மூச்சுவிட கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் சரியாகச் செய்தால் உடல், மன ஆரோக்கியம் கிடைக்கும்'' என்றார் மணவாளன். எப்படி சுவாசிப்பது என்பது மட்டுமல்லாமல், யோகாவின் அடிப்படை மூச்சுப்பயிற்சிகள், பிராணயாமம் உள்ளிட்ட பயிற்சிகள் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. இவை முறையாகப் பயிற்சி பெற்றவர்களால் கற்றுத் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விச்சோலை - kalvisolai health tips

No comments: