Sunday, 30 June 2019

அவசியம் தேவை ‘ஆரஞ்சு’

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தீர்வு காண நீண்ட காலம் மாத்திரை உட்கொள்வது சரியான வழிமுறை அல்ல. தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்ளும்போது வேறு விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதேவேளையில் ரத்த அழுத்தத்தை சீராக்காவிட்டால் இதய நோய்கள் எற்படவும் வழிவகுத்துவிடும். ஆரோக்கியமான உணவு வகைகளுடன் ஜூஸ் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். மாதுளை பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவி புரியும். மேலும் பல்வேறு நோய் தொற்றுவில் இருந்தும் உடலை பாதுகாக்கும். ரத்த சோகை இருப்பவர்களுக்கும் இது ஏற்றது. ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்வதிலும் மாதுளை முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பிணி பெண்கள் மாதுளை ஜூஸ் பருகுவதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அதேவேளையில் நீரிழிவு நோயாளிகள் மாதுளை ஜூஸ் பருக கூடாது. ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளானவர்கள் ஆரஞ்சு ஜூஸ் பருகுவது நல்லது. அதனை தொடர்ந்து பருகுவதன் மூலம் வளர்சிதை மாற்றமும் மேம்படும். ஆரஞ்சு ஜூஸ் தொடர்ந்து பருகி வந்தால் கண்புரை மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஆரஞ்சு ஜூஸில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நாள்பட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மையும் கொண்டவை.

Monday, 10 June 2019

குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை

அமெரிக்காவின் சிகாகோவில் இருக்கும் பெயின்பெர்க் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன் குக் மில்ஸ் தலைமையிலான குழு ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டது. பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் உணவு இல்லை. இருந்தும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை மற்றும் சரும ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிவதுதான் ஆராய்ச்சியின் நோக்கம். பொதுவாக ஒவ்வாமைக்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று, மரபு வழி ஜீன்கள். மற்றொன்று, உணவு. இறுதியாக, சுற்றுப்புறச்சூழல். பிறந்து சில நாள்களே ஆன ஓர் எலியைச் சோதனைக்கு எடுத்துக் கொள்கின்றனர். அதற்கு ஒவ்வாமைக்கான ஜீன்களைச் செலுத்துகின்றனர். அடுத்து, தூசுப் படலத்தை நுகரவைக்கின்றனர். பின்னர், நிலக்கடலைப் போன்ற ஒவ்வாமை உணவுகளைக் கொடுக்கின்றனர். ஆனால், இந்த விஷயங்கள் அந்த எலிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை. அந்த நேரம் ஜோன் குக்குக்கு பழைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. நம் சருமத்தின் மேற்பரப்பு லிபிட்ஸ்‘ எனும் ஒருவகை கொழுப்பினால் ஆனது. அதுவே நம் சருமத்தின் தடுப்பு அரணாகச் செயல்படுகிறது. சோப்புகளில் இருக்கும் ரசாயனங்கள் அந்த அரண்களை உடைக்கும் தன்மை வாய்ந்தவை என்பது அந்தக் கட்டுரை சொல்லும் செய்தி. ஜோனுக்குச் சட்டென ஒரு பொறி தட்டியது. அது, அவரை அதிர்ச்சியடைய வைப்பதாகவும் இருந்தது. தன் சோதனையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கினார். முதலில் எலியின் தோலின் மீது சோடியம் லாரைல் சல்பேட்’ எனும் வேதிப்பொருளைத் தடவினார் (இது பொதுவாக சோப்புகளில் காணப்படும் ரசாயனம்தான்). இரண்டு வாரக் காலத்தில் நான்கு முறை இப்படிச் செய்யப்பட்டது. பின்னர், சில ஒவ்வாமை உணவுகள் அதற்குக் கொடுக்கப்பட்டன. இப்படிச் செய்ததும், மிக விரைவாக எலியின் தோல் பல இடங்களில் தடிக்கத் தொடங்கியது. உடல் முழுக்க ஒவ்வாமை ஏற்பட்டது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மிக முக்கியமான எச்சரிக்கையை முன்வைக்கிறார் ஜோன். “குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் ‘வெட் வைப்ஸ்’ ஒவ்வாமைக்கான மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. இனி வெட் வைப்கள் உபயோகிப்பதைக் குறைத்துக் கொண்டு, முன்னர் செய்தது போலத் தண்ணீரை உபயோகித்துக் குழந்தைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.“ மேலைநாடுகளில் வெட் வைப்ஸ்’ அதிகமாக உபயோகிக்கும் பழக்கம் என்பது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளிலும், சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது. இப்படி ஒருபக்கம் ஒவ்வாமை, ஒவ்வொரு நாட்டிலும் அதிகமாகிக்கொண்டே இருக்க, மறுபக்கம்‘வெட் வைப்ஸ்’களின் உபயோகமும் பரவலாகிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கான எதிர்ப்புகளும் ஒருபக்கம் இருக்கவே செய்கின்றன. எனினும், ‘வெட் வைப்’, சோப்புகள் உபயோகத்தைக் கூடுமானவரைக் குறைத்துக்கொண்டு, தண்ணீரால் குழந்தைகளின் உடலைச் சுத்தப்படுத்துவதே அவர்களின் உடலைப் பாதுகாக்கும். அதுவே ஆரோக்கியமும்கூட!

Tuesday, 4 June 2019

பாலியல் தூண்டுதலை உருவாக்கும் ‘சாக்லேட்’

சாக்லேட்டை தான் சுவைத்து மகிழ்ந்த காலம் போய், தனக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கும் பரிசுப் பொருளாகவும் அது புது அவதாரம் எடுத்திருக்கிறது. அதனால் தங்கள் அன்பை வெளிப்படுத்த பிறந்த நாள், திருமண நாள் போன்றவை களுக்கு வாழ்த்துக்களோடு சாக்லேட் பரிசு வழங்குகிறார்கள்.

சாக்லேட் விற்பனையை தக்கவைத்துக்கொள்வதற்காக, அது பற்றி அவ்வப்போது ஏதாவது ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பெரும் அளவில் இருப்பதாகவும், ரத்த அழுத்தத்தை அது சீராக்கும் தன்மையை கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். ‘டார்க் சாக்லேட்’ உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதயத்திற்கு வலு சேர்ப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

உடலுக்கு உற்சாகம் தரும் ‘எண்டோர்பின்’ ஹார்மோனை, சாக்லேட் அதிகம் சுரக்கச் செய்கிறது. இது நரம்புகளை பலப்படுத்தி உத்வேகப்படுத்துகிறது. அந்த அடிப்படையில் சாக்லேட் குறிப்பிட்ட மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. அதில் இருக்கும் காபின் மூளையை சுறுசுறுப்பாக்கும். இ்ந்த ஒட்டுமொத்தமான செயல்பாடுகள் சாக்லேட் சாப்பிடும் ஆண் மற்றும் பெண்களிடம் பாலியல் தூண்டலையும் உருவாக்கும் என்றும் சொல்கிறார்கள்.

டார்க் சாக்லேட் ஒரு பார் சாப்பிட்டால் அதன் மூலம் உடலுக்கு 400 கலோரி கிடைக்கும். மதிய உணவுக்கு பிறகு சாக்லேட் சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அவர்கள் டார்க் சாக்லேட்டில் பாதி அளவு சாப்பிட விரும்புகிறார்கள் என்றால், தாங்கள் சாப்பிடும் உணவில் 200 கலோரியை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணவின் அளவு சமச்சீராக இருக்கும். போதுமான அளவு உணவு சாப்பிட்டுவிட்டு, அதற்கு மேல் சாக்லேட்டும் அதிக அளவில் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல. தேவைக்கு அதிகமான கலோரி உடலில் சேர்ந்துவிடும்.

வழக்கமான சாக்லேட்டில் பால், சர்க்கரை போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால் அதன் தன்மை மாறும். அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொருத்துதான் சாக்லேட்டின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. உலர் பழங்கள், வேர்க்கடலை, பாதாம், ஆரஞ்சுத் தோல் முதலியவை சேர்க்கப்பட்டிருந்தால் நல்லது. அதிக அளவு வெண்ணெய், சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால் அவை கோகோவின் நற்குணங்களை செயலிழக்கச் செய்துவிடும். அது உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதல்ல.

டார்க் சாக்லேட் இனிக்காது. சற்று கசக்கத்தான் செய்யும். கசப்பை போக்க அதனுடன் பால் சேர்க்கக்கூடாது. சேர்த்தால் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பலனளிக்காது. உடல் எடையை குறைக்கவும் சாக்லேட் பயன்படுகிறது. இதை கைதேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் பயன்படுத்தி, எடையை குறையச் செய்கிறார்கள். உடலில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், புதிய செல்களை உற்பத்தி செய்யவும் சாக்லேட் உதவுகிறது. சாக்லேட்டின் மூலப் பொருளை பயன்படுத்தி ‘கோகோ பட்டர் பாடி வேக்ஸ்’ போன்றவை தயாரிக்கப்பட்டு உடல் முழுவதும் மசாஜ் செய்கிறார்கள். இதன் மூலம் உடல் எடை குறைந்து, தசை இறுக்கமடைவதாக சொல் கிறார்கள். தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், சருமத்தின் நிறம் கூடும். பளபளப்பு, மென்மைத்தன்மை அதிகரிக்கும். கறுப்பாக இருப்பவர்கள் சருமத்தை பொலிவாக்க சாக்லேட் சாப்பிடுவதுண்டு.

சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் சாக்லேட் ஸ்க்ரப்பை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் கோகோவுடன், 4 ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் மில்க் கிரீம் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும் சிறந்த ஸ்கிரப் ஆகும்.

சிறிதளவு கோகோ பட்டருடன் தயிர் கலந்து ஒரு துண்டு வாழைப்பழத்தை மசித்து நன்றாக கிரீம் போல தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை முகம், கை கால்களில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். இதன் மூலம் முகம் பளபளப்புடன் ஜொலிக்கும்.

பாடி பாலிஷ்: கிண்ணத்தில் கோகோ பவுடர் சிறிதளவு எடுத்து, அதில் சிறிது உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து உடல் முழுவதும் பூசிவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் பளபளப்பாகும்.

சாக்லேட் வேக்ஸ்: இது கடைகளில் கிடைக்கும். இதனை உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம். உடலில் உள்ள பழைய செல்களை அகற்றி விட்டு புதிய செல்கள் உருவாக இந்த வகை மெழுகு உதவுகிறது.

சாக்லேட் ஸ்க்ரப்: இதுவும் சருமத்தின் தன்மைக்கேற்ப பலவிதங்களில் கடைகளில் கிடைக்கும். இந்த ஸ்க்ரப்கள் கொஞ்சம் ரவை போன்று தரியாக காணப்படும். இதனை தோலின் மேல்நோக்கி தேய்ப்பதன் மூலம் இறந்த செல்களை நீக்கிவிடலாம். தோலில் படிந்திருக்கும் கழிவுகளையும் நீக்கிவிட முடியும். இதனை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் தோல் வியாதிகள் வராது.

சாக்லேட்டில் காபின் உள்ளது. அது தேநீர், காபி, கோக் போன்றவற்றில் இருப்பதை விட மிகக் குறைந்த அளவே உள்ளது. சாக்லேட் பார், ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். அதில் பால் அல்லது வேறு பொருட்கள் கலந்து விட்டால் அதன் தரமும், ஆயுளும் குறைந்து போய்விடும்.

1842-ம் ஆண்டு் இங்கிலாந்தில் கேட்பரி என்பவர் முதன் முதலில் சாக்லேட் பார்களை தயாரித்தார். அதற்கு முன் அதை பானமாகத்தான் பருகி வந்தார்கள். உலகில் அதிகமாக டார்க் சாக்லேட் சாப் பிடுபவர்கள் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த சாக்லேட் சாப்பிடுவதால் ஹார்மோன்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பது பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளது. 28 கிராம் டார்க் சாக்லேட் மூலம் உடலுக்குத் தேவையான 10 சதவீத இரும்புச் சத்தை பெறலாம். சாக்லேட் சாப்பிடுபவர்கள் உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். சராசரியாக 15 பேரில் 10 பேர் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். அமெரிக்க நிறுவனங்களில் ஊழியர்கள் உற்சாகமாக பணிபுரிவதற்காக அவர்களுக்கு சாக்லேட் விநியோகிக்கும் வழக்கம் இருக்கிறது.

கோகோ மரம்

சாக்லேட்டின் மூலப்பொருளாக இருப்பவை, கோகோ விதைகள். இவை கோகோ மரத்தில் இருந்து கிடைக்கின்றன. கோகோ மரம் வருடத்திற்கு 20 முதல் 50 பழங்களை அளிக்கும். ஒவ்வொரு பழமும் சுமார் அரை கிலோ எடை கொண்டது. அதன் மேல் பகுதி முதலில் பச்சையாகவும், பின்பு மஞ்சளாகவும், இறுதியில் செம்பழுப்பு நிறமாகவும் மாறுகிறது. ஒவ்வொரு பழத்தின் உள்ளும் 30 விதைகள் வரை இருக்கும். இவைதான் சாக்லேட் தயாரிப்பிற்கு மூல பொருளாக இருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் கோகோ விதைகள் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மெக்சிகோ கோகோவின் தாயகமாகும்.