Sunday, 18 February 2018

வைட்டமின் சத்து உடலுக்கு ஏன் தேவை?


உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும், தாதுக்களும் அவசியமான ஊட்டச்சத்துகளாக விளங்குகின்றன. எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன? அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

1. வைட்டமின் ஏ:
நன்மைகள்: பொதுவான உடல் வளர்ச்சி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. பற்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கிறது.
சாப்பிடவேண்டியவை: கேரட், ஆரஞ்சு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முலாம்பழம். இவை அனைத்திலும் கரோட்டின் நிறமி அதிகளவில் இருக்கிறது.

2. வைட்டமின் பி:
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான சக்தியையும் வழங்குகிறது.
கிடைக்கும் பொருட்கள்: பதப் படுத்தப்படாத உணவுகள், குறிப்பாக முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள், பீன்ஸ், மிளகுத்தூள், பயறு வகைகள், வெல்லப்பாகு.

3. வைட்டமின் சி:
நன்மைகள்: ரத்தக்குழாய்களை வலுப்படுத்தும். சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையும் கொடுக்கும்.
சாப்பிட வேண்டியவை: ஆரஞ்சு, கொய்யா, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கிவி பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, பரங்கிக்காய்.

4. வைட்டமின் டி:
நன்மைகள்: எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.
சாப்பிட வேண்டியவை: காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் டி உற்பத்தியாக தொடங்கிவிடும். முட்டை, மீன், காளான்களை சாப்பிடுவதன் மூலமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறலாம்.

5. வைட்டமின் ஈ:
நன்மைகள்: ரத்த சுழற்சியை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. பிறவகை கொட்டகைகள், சூரியகாந்தி விதைகள், தக்காளி போன்றவற்றிலும் அதிகம் உள்ளது.

6. வைட்டமின் கே:
நன்மைகள்: ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், ப்ராக்கோலி.

7. போலிக் அமிலம்:
நன்மைகள்: புதிய செல்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. பெண்களுக்கு பிரசவகால சிக்கலையும் தடுக்கும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், ப்ராக்கோலி, காலிபிளவர், பீட்ரூட், சோளம்.

8. கால்சியம்:
நன்மைகள்: பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பால், சோயா தயிர், கருப்பட்டி.

9. இரும்புச்சத்து:
நன்மைகள்: உடல் தசைகளை வலுப்படுத்தும். ரத்த அளவை சீராக்கும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: சோயாபீன்ஸ், தானியங்கள், பூசணி விதை, பீன்ஸ், பருப்புவகைகள், கீரை வகைகள்.

10. துத்தநாகம்:
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். கருவுறுதல் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: கடல் உணவுகள் துத்தநாகம் நிறைந்தவை. கீரை வகைகள், முந்திரி பருப்பு, பீன்ஸ், கருப்பு சாக்லேட்டுகள் போன்றவற்றிலும் நிறைந்திருக்கிறது.

11. குரோமியம்:
நன்மைகள்: உடலுக்கு தேவையான குளுக்கோஸை வழங்கும். மேலும் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: முழு தானியங்கள், பச்சைக்காய்கறிகள், கீரைகள்.

Saturday, 17 February 2018

தேடினால் தொலையும் தூக்கம்!

தேடினால் தொலையும் தூக்கம்! டாக்டர் ஜி. ராமானுஜம் மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டிருக்கிறது உடல் பருமனுக்குத் தூக்கமின்மையும் ஒரு முக்கியக் காரணம் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம், மனப் பதற்றம் தூக்கம் என்பது ஆரோக்கியத்தையும் உடலையும் இணைக்கும் ஒரு தங்கச் சங்கிலி - தாமஸ் டெக்கர் அரிதிலும் அரிதான இந்த மானிடப் பிறவியில், மூன்றில் ஒரு பங்கு தூக்கத்திலேயே கழிகிறது. இதிலிருந்தே தூக்கம் மனிதர்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது எனப் புரியும். சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மனித உடலில் பல பாதகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டுவந்திருக்கிறது. அதற்கு ஏற்றவாறே நமது உடலும் சூரியகாந்தி மலர்களைப் போல் சூரிய வெளிச்சத்துக்கு ஏற்றவாறு பகலில் வேலை செய்யவும் இரவில் ஓய்வெடுக்கவும் பழகியுள்ளது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட இரவானதும் சுமார் ஏழு –ஏழரை மணிக்கே மக்கள் தூங்கச் சென்றுள்ளனர். இரவைப் பகலாக்கும் மின்சாரத்தின் பரவலாக்கத்துக்குப் பின்னரே தூங்கச் செல்லும் நேரம் தாமதமாகத் தொடங்கியது. பின்னர் வானொலி, தொலைக்காட்சி, கணினி என ஒவ்வொன்றாகப் படுக்கையறையை ஆக்கிரமிக்க, இறுதியில் செல்பேசியின் வருகையால் பலரும் மறுநாள்தான் தூங்கச் செல்வது என்றாகிவிட்டது. என்னதான் அதிநவீன ஐபோனைப் பார்த்துக்கொண்டே படுத்துக் கொண்டிருந்தாலும், அந்தி கருத்தவுடனேயே தூங்கச் சென்ற ஆதிமனிதன் காலத்திலிருந்து நம்முடைய உடல் பெரிதாக மாறிவிடவில்லை. குறையும் எதிர்ப்பு ஆற்றல் தூக்கத்தின்போது உடலுக்குள் நிகழும் செயல்கள் பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளப்படவில்லை. எனினும், உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே தூக்கம் மிக முக்கியம். அதுவும் உயிரினங்களில் மூளையின் செயல்பாடுகள் சிக்கலாகச் சிக்கலாகத் தூக்கத்தின் தேவையும் அதிகரிக்கிறது. தூங்காமல் இருக்கும்போது உடலில் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. உடல் பருமனுக்குத் தூக்கமின்மையும் ஒரு முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் போன்ற பல எதிர்விளைவுகளும் ஏற்படுகின்றன. தூக்கமின்மையால் வரும் கவனக் குறைபாட்டால் பல விபத்துகள் ஏற்படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டும் உண்மை. கவலையால் வராத தூக்கம் தூக்கமின்மைக்கு ஒரு முக்கியக் காரணம், மனப் பதற்றம். தூங்கப் போகும்போதுதான் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஒன்றில் செருப்பைத் தொலைத்தது பற்றி வருத்தப்படவும், 20 ஆண்டுகளுக்குப் பின் வரப்போகும் மகளின் திருமணத்தைப் பற்றிக் கவலைப்படவும் தொடங்குகிறோம். ஏனென்றால், பகல் முழுதும் வேறு வேறு வேலைகள் நமது கவனத்தை ஆக்கிரமித்து இருந்திருக்கும். இரவு வந்தவுடன் சிந்தனை வௌவால்கள் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கும். இன்னும் சிலருக்கு வேறொரு கவலையால் தூக்கம் வராமல் போய்விடும். தூக்கம் வரவில்லையே என்ற கவலைதான் அது! குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லையே என்ற கவலையால் குடிப்பதைப் போன்றதுதான் இதுவும். மகிழ்ச்சியைப் பற்றி ஓஷோ கூறும்போது 'தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும்' என்பார். அதாவது மகிழ்ச்சியைத் தேடி ஓடாமல் அமைதியாக இருந்தோமென்றாலே மகிழ்ச்சி தானாக நம்மைத் தேடி வரும். அதுபோல்தான் தூக்கமும். தூங்கவிடாத சிந்தனை தூக்கம் வரவில்லையே எனக் கவலைப்பட்டாலே தூக்கம் தொலைந்து போய்விடும். தூங்குவது இயல்பாக நடைபெறாமல், அதற்காகப் பெரிதும் முயற்சி மேற்கொண்டால் 'மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை' என 'முதல் மரியாதை' திரைப்படப் பாடல் வரிபோல் எதிர்மறையாகவே முடிந்துவிடும். பதவி, புகழ், நல்ல பெயர், விளம்பரம் போன்றவற்றைப் போல் தூக்கமும் தானாக வருவதே சிறப்பாகும். இன்னும் சிலர் மது, காபி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவை தூக்கத்துக்கு உதவும் என நினைத்துப் பயன்படுத்துவார்கள். அவை தற்காலிகமாகத் தூக்கத்தைத் தந்தாலும், சொந்தச் செலவில் சூனியம் வைப்பதுபோல் நாளடைவில் தூக்கமின்மையை இவை அதிகரித்துவிடும். தூங்கும் அறைக்குள் சிந்தனைகளுக்கும் செல்போன்களுக்கும் தடா போட வேண்டும். நல்ல தூக்கத்துக்கு உடற்பயிற்சி உறுதுணை. இவ்வளவு சிறப்புமிக்க தூக்கம் முக்கியமே என்றாலும், அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்தும். எப்படி? கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர் தொடர்புக்கு: ramsych2@gmail.com 

தங்கம்போல ஜொலிக்க… மஞ்சள்!

தங்கம்போல ஜொலிக்க… மஞ்சள்! டாக்டர் வி. விக்ரம்குமார் பெண்களுக்கு நோய்கள் ஏற்படாமல் தடுத்ததில் மஞ்சளுக்கு நெடுங்காலமாக மிகப் பெரிய பங்கு உண்டு. மாதவிடாய் நாட்களில் உண்டாகும் கிருமிகளை அழிக்கவும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் முறை பயன்பட்டிருக்கிறது. உடலில் தேவையில்லாமல் முளைக்கும் ரோமங்களை இயற்கையான முறையில் நீக்க மஞ்சளைத் தவிர சிறந்த பொருள் வேறெதுவுமில்லை. கிருமிநாசினி செய்கை கொண்டது என்பதால், தோல் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமையும் மஞ்சளுக்கு இருக்கிறது. பாடல் உணர்த்தும் உண்மை 'மஞ்சள் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமோடு' எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் உடலில் ஏற்படும் நாற்றம், தோல் நோய்கள், சில வகையான கப நோய்கள் போன்றவை நீங்கும் என்பதை உணர்த்துகிறது. மஞ்சள் குளியலால் தலைபாரம், தலைவலி குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 'மஞ்சள் தேய்த்துக் குளிப்பது அநாகரிகமான செயல்' என்று இன்றைய தலைமுறையினர் கருதும் நிலையில், அதன் பயன்களை முந்தைய தலைமுறையிடம் கேட்டால் மஞ்சளின் மகிமை குறித்து நமக்குப் புரியும். மஞ்சளை அரைத்து, அதைக் குளிப்பதற்குப் பயன்படுத்தும் வயதான பாட்டிகளின் தோல் ஆரோக்கியத்தை இன்றும் நம்மால் கண்கூடாகப் பார்க்க முடியும். மேனிக்கு மருந்து இன்றைய நகரவாசிகள் சமையல் தவிர்த்து மஞ்சளை வேறு எதற்கும் பயன்படுத்தாத நிலையில், மஞ்சள் குளியல் முறை மீண்டும் உயிர் பெற்றால், தங்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து பெண்கள் தப்பித்துக்கொள்வதற்கு, நல்லதொரு பாதுகாப்புக் கவசம் கிடைக்கும். தோலில் பாதிப்பு உண்டாகாமல் 'பள பள'வென ஜொலிக்கும் தேகத்தைப் பெற, மஞ்சள் தேய்த்துக் குளிப்பது பயன் தரும் என்பதை 'பொன்னிறமாம் மேனி புலால் நாற்றமும் போம்' என்ற பாடல் வரியின் மூலம் விளக்குகிறார் சித்தர் அகத்தியர். மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் தோல் புத்துயிர் பெறுவதோடு, தேகத்தில் உருவாகும் வியர்வை நாற்றமும் மறையும் என்பதுதான் இதன் பொருள். மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், தோல் சுருக்கம் ஏற்படுவது தள்ளிப்போவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் தேய்த்துக் குளித்து வருவதால் பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் தீவிரமடையாது. ஈரமான இடங்களில் தொடர்ந்து இருப்பதால் உண்டாகும் சேற்றுப் புண் வராமலும் தடுக்கப்படும். மஞ்சள் நீரூற்றின் மகிமை பெரும்பாலான வடநாட்டுத் திருமணங்களில், மணமக்களுக்கு 'மஞ்சள் பூச்சு' நிகழ்வு தவறாமல் இடம்பெறுகிறது. கிருமிகளை அழிப்பதும், முகப்பொலிவை உண்டாக்குவதும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதும்தான் 'மஞ்சள் பூச்சு' செய்வதன் விஞ்ஞானப் பின்னணி. தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கும் மஞ்சள் நீரூற்று விழாக்களின் பாரம்பரியத்திலும் நோய்களை அழிக்கும் அறிவியல் உள்ளது. தேங்காய்ப் பாலோடு மஞ்சள் கலந்து குளிக்கும் வழக்கம் மலையாள மக்களிடம் இன்றளவும் தொடர்கிறது. கலப்பட மஞ்சள்! மஞ்சள் போலவே மணமிக்க கஸ்தூரி மஞ்சளையும் குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். இதை அரைத்து உடலில் தேய்த்துக் குளிப்பதால், உடலில் உண்டாகும் சிறுசிறு கொப்பளங்கள், அரிப்பு, கரப்பான் எனப்படும் ஒரு வகையான தோல் நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. முகப் பருக்களில் கிருமி சஞ்சாரம் ஏற்படுவதும் தடுக்கப்படும். குளித்து முடித்த பிறகு நல்ல வாசனையையும் கொடுக்கும். சில கடைகளில் கிடைக்கும் மஞ்சள் தூளில் மரத் தூள், மாவுப் பொருள் போன்றவற்றைக் கலப்படம் செய்துவிடுகின்றனர். 'வெளியில் பூசிக் குளிப்பதற்குத் தானே, கலப்படம் இருந்தால் என்ன?' என்று சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. கலப்பட மஞ்சளை உட்கொள்வதால் மட்டுமல்ல, வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தினாலும் உடலுக்குப் பாதகம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. தரமற்ற மஞ்சள் நிச்சயமாகத் தோலுக்குப் பாதிப்புகளை உண்டாக்கும். 'மஞ்சள் தேய்த்துக் குளிப்பது தோலுக்குப் பாதகமானது' என்று தவறாகப் பிரசாரம் செய்துவிட்டு, கிருமிநாசினி கிரீம்களிலும், பாடி லோஷன்களிலும் மஞ்சளின் சாரத்தை வணிக நிறுவனங்கள் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள். நம்மில் பலரும் வெறும் விளம்பரங்களுக்கு மயங்குகிறோம்! இனிமேலாவது உண்மைப் பலன்களுக்கு மயங்குவோம். கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com 

சர்க்கரைக்கு கடிவாளம் போடும் ‘பீன்ஸ்’

சர்க்கரைக்கு கடிவாளம் போடும் 'பீன்ஸ்' | சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பீன்சில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாகக் கரைவதால் அது ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுப்பதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, பீன்சில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. தொடர்ந்து பீன்ஸ் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள பிளேவனாய்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அந்நோய் வராமல் தடுக்கும். வேகவைத்த காய்களை மனிதக் குடல் எளிதில் ஜீரணிப்பதுடன், அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும். வேகவைத்த பீன்சை சாப்பிட்டால், அது குடலியக்கத்தைச் சீராக்கி, செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். 100 கிராம் பீன்சில் நார்ச்சத்தின் அளவு 9 சதவீதம். இந்த நார்ச்சத்து, குடலின் உட்புறச் சுவர் களைப் பாதுகாத்து, நச்சுத் தன்மைகளை வெளியேற்றும். பீன்சில் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், போலேட், தாமிரம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய கனிமச் சத்துகள் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும், உடலின் ஆரோக்கியம் காக்கும், இதயத்துக்கும் இதம் சேர்க்கும். பீன்சில் உள்ள சிலிக்கான், எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மற்ற காய்கறிகளைவிட பீன்சில் உள்ள சிலிக்கான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும். பச்சை பீன்சில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தின் ஆரோக்கியம் காக்கும், முதுமை அறிகுறி களை தள்ளிப்போட உதவும்.

ஆரோக்கியத்தை நொறுக்கும் நொறுக்குத் தீனி

ஆரோக்கியத்தை நொறுக்கும் நொறுக்குத் தீனி | பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனேகமானவர்கள் நொறுக்குத் தீனி பிரியர்களாக உள்ளனர். நொறுக்குத் தீனி தனது சுவையால் அவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆனால் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தையே உருக்குலைக்கும். எனவே, பெரியவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடாமல் தவிர்ப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பது நலம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பற்றி எடுத்துக்கூறி, அதை பழக்கப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பு. நொறுக்குத்தீனிகள் சத்துகள் இல்லாமல் வெறும் சர்க்கரையையும் உப்பையும் கொண்ட வெற்று கலோரிகளை உடலுக்கு அளிக்கின்றன. மாறாக, சரிவிகித உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சரியான அளவில் அளிக்கும். நொறுக்குத்தீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டுவரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். இதனால், அவர்கள் படிப்பிலும், பிற தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நொறுக்குத்தீனியில் உள்ள அதிக கொழுப்பால், உடலில் கொலஸ்டிராலும் டிரைகிளிசரைடும் அதிகரித்து, குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படலாம். நொறுக்குத்தீனிகள் குழந்தைகளைக் கவர ஒரு முக்கியக் காரணம், அவை கவர்ச்சிகரமான தோற்றத்தில், பளபளக் கும் 'பேக்கிங்'கில் வருவது. பெற்றோர், ஆரோக்கியமான உணவுகளையும் குழந்தைகளை ஈர்க்கும்படி சமைத்துக் கொடுக்கலாம். அவை வண்ணமயமாகவும், புதுமைத் தோற்றத்துடனும் இருக்க வேண்டும். உதாரணமாக, காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு அலங்காரமான 'சாலட்' தயாரிக்கலாம். குழந்தைகளுக் கான உணவில், மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், கால்சியம் போன்ற எல்லா சத்துகளும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 'ஜங்க் புட்' எனப்படும் துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு, அவற்றின் தீமைகளை குழந்தைகளுக்கு தெளிவாக விளக் கிக்கூற வேண்டும். பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக மாறி, நொறுக்குத்தீனிகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆசைக்காக எப்போதாவது கொஞ்சம் நொறுக்குத் தீனியைக் கொறிப்பதில் தவறில்லை. ஆனால் அதை அன்றாட வழக்கமாக்கிக்கொண்டால், குறிப்பாக டி.வி., சினிமா பார்க்கும்போது நம்மையும் அறியாமல் அதிக நொறுக்குத்தீனி சாப்பிட்டால், துன்பத்தை நாமே அழைப்பிதழ் கொடுத்து அழைக்கிறோம் என்றுதான் பொருள். தொடர்ச்சியான நொறுக்குத்தீனி பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தை நொறுக்கிவிடும் என்பதை நாம் உணர்ந்து, குழந்தைகளுக்கும் உணர்த்தி வழிநடத்த வேண்டும்.

Sunday, 11 February 2018

கண்களை காத்திடுவோம்

கண்களை காத்திடுவோம் | தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன்களை நீண்ட நேரம் கூர்ந்து கவனிக்கும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகிறது. அதோடு காற்று மாசுபாடு, மனஅழுத்தம் போன்றவைகளும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒருசில எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். இரு கண்களின் பார்வையையும் மூக்கின் மீது பதிய வைக்க வேண்டும். கவனத்தை எங்கும் திசை திருப்பாமல் சில நிமிடங்கள் மூக்கையும், சில நிமிடங்கள் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளையும் மாறி மாறி உற்றுநோக்க வேண்டும். கண்களின் பார்வை மூக்கின் மீதும், பொருளின் மீதும் மாறி, மாறி பதியுமாறு இந்த பயிற்சியை செய்ய வேண்டும். சில நிமிட நேர பயிற்சிக்கு பிறகு கண்களை கைகளால் மூடி, ஓய்வு கொடுக்க வேண்டும். தொடர்ந்து இந்த பயிற்சிகளை செய்து வருவது பார்வை நரம்புகளை வலுப்படுத்தும். கைவிரல்களை கொண்டும் மசாஜ் செய்ய வேண்டும். கண்களை மூடி மென்மையாக விரல்களால் மசாஜ் செய்துவர வேண்டும். கண் இமைகள் மீதும் விரல்களை பதித்து லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும். தலையை அசைக்காமல் மேலும் கீழும் கண்களை சுழலச் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து கண்களை இடதுபுறமாகவும் பின்பு வலதுபுறமாகவும் சுழற்ற விட்டும் பயிற்சி செய்ய வேண்டும். இடையிடையே கண்களை மூடித் திறக்க வேண்டும். கண்கள் சோர்வாக இருந்தால், இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு சுடுநீரில் காட்டன் துணியை முக்கி கண்களை மூடி அதன் மேல் ஒத்தடம் கொடுக்கலாம். கண்களை சில வினாடிகள் மூடிக்கொண்டும், சில வினாடிகள் திறந்தும் தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம். தினமும் சிறிது நேரம் பயிற்சி செய்து வந்தாலே போதும். இந்த மாதிரியான பயிற்சிகளை கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

காளான் கொழுப்பைக் கரைக்கும்

காளான் கொழுப்பைக் கரைக்கும் | கடல் உணவுகள் மற்றும் இறைச்சி வகைகளில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. சைவ உணவு பிரியர்கள் இறைச்சி வகைகளை சாப்பிடாமலேயே உடலுக்கு தேவையான புரதச் சத்துக்களை பெற்று விடலாம். அத்தகைய உணவு வகைகள் குறித்து பார்ப்போம். இறைச்சி வகைகளைவிட பீன்ஸ்சில் அதிக அளவு புரதம் உள்ளது. அதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் போதுமான அளவு புரச்சத்தை பெறமுடியும். பருப்பு வகைகளையும் தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவையும் சீரான புரத சத்துக்களை வழங்கும். சோயா பீன்ஸ்சிலும் அதிக புரதச் சத்து இருக்கிறது. புரதச்சத்து குறைபாடு கொண்டவர்கள் உணவில் சோயாபீன்சை சேர்த்துக்கொள்வது அவசியம். சோயா பால், சோயா சீஸ் போன்றவற்றையும் சாப்பிடவேண்டும். முளைகட்டிய தானியங்களும் புரதச்சத்து நிரம்பப்பெற்றவை. அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் பச்சைப்பயறு, கடலை போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் முளைக்குருத்து வரும் தருவாயில் சாப்பிடவேண்டும். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இவைகளை சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும். பட்டாணியில் புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதனை காய்கறிகளுடன் சமைத்தோ, சூப்பாக தயார் செய்தோ ருசிக்கலாம். தயிர், பாலாடைக்கட்டி போன்றவை களிலும் புரதச்சத்து இருக்கிறது. அவை கொழுப்புச் சத்துக்களும் அதிகம் கொண்டவை என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும். சோளத்தை வேகவைத்து சாப்பிடலாம். அதில் புரதச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்தும் கலந்திருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அவற்றில் புரதச்சத்து மட்டுமின்றி உடலுக்கு தேவையான அனைத்து வகை சத்துக்களும் நிறைந்திருக்கிறது. பெண்கள் அடிக்கடி உணவில் உளுந்தை சேர்த்துக்கொள்வது அவசியம். புரதச்சத்து மிகுந்துள்ள உளுந்து கர்ப்பப்பையை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. நிலக்கடலை எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது. அதில் உடலுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் உள்ளன. தினமும் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. அதிலும் கடினமான உடலுழைப்பு மேற்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் அவசியம் முட்டை சாப்பிட வேண்டும். காளானை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது உடலில் கொழுப்பு சேர்வதை தவிர்க்க உதவும். புரதம் உள்பட அதில் வேறு பல சத்துக்களும் உள்ளன.

Friday, 9 February 2018

ஜோதிடத்தில் மருத்துவம் திரிகடுகம்

ஜோதிடத்தில் மருத்துவம் திரிகடுகம் என்னும் மூவா மருந்து சுக்கு மிளகு திப்பிலி திரிகடுகம் என்னும் வைத்திய நூலானது மூவா மருந்து என்னும் சுக்கு, மிளகு, திப்பிலி பற்றி குறிப்பிடும் மருத்துவ நூலாகும். இதில் சுக்கு, மிளகு, திப்பிலி என்பதற்கு கூட கிரக ஆதிக்கம் உள்ளது. அதன்படி, சுக்கு - அதிபதி குரு மிளகு - அதிபதி செவ்வாய் திப்பிலி - அதிபதி புதன் இதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம். சுக்கு உலர்ந்த இஞ்சி தான் சுக்காக மாறுகிறது. இஞ்சியின் சாறு அனைத்தும் உலர்ந்து போனதால் இவற்றில் சக்தி அதிகமாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நமது உடலின் ஜீரண உறுப்புகளுக்கு ஏற்ற அருமருந்தாகும். செரிமானம் செய்யக்கூடிய உணவுகளில் கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், கிளிசரால் போன்ற மூலக்கூறுகளாக மாற்றும் வேதி நிகழ்வு தான் இந்த செரிமானம் என்பதாகும். திடமான உணவுகளை கூட எளிதாக மாற்றக்கூடிய சக்தி நார்ச்சத்து உள்ள காய், கிழங்கு, கீரை வகைகளுக்கு உண்டு. இதில் அதிக சக்தி பெற்றது சுக்கு. இதற்கு உரியவர் குரு பகவான். மிளகு இந்தியாவின் கருப்பு வைரம் என்று வர்ணிக்கப்படும் பொருள் மிளகு. இவை மலைகளில் கொடி போல் படர்ந்து வளரக்கூடிய அதிக மருத்துவ குணம் கொண்டது. சற்று காரமாக இருந்தாலும், இதன் மருத்துவ பயன்கள் அதிகம். நுரையீரலில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடியவை. சளிக்கும், ரத்த போக்கை நீக்குவதற்கும், கெட்ட கொழுப்பை கரைப்பதற்கும், குடல் புழுக்கள் நீங்குவதற்கும், விஷக்கடிகள் முறிவு செய்யவும், ரத்தத்தை சுத்தம் செய்யவும் இவை உதவும். இதற்கு உரியவர் செவ்வாய் கிரகமாகும். திப்பிலி சுக்கு-மிளகு என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திப்பிலி என்றால் பலருக்கு தெரியாது. திப்பிலி என்பது கோது என்பவையாகும். கோது என்றால் சூரணம் போன்ற பொடி வகையைச் சேர்ந்ததாகும். திப்பிலி என்பது ஒரு பொருளை குறிப்பிடும் சொல் அல்ல. மர சக்கை, பழத்தின் மேல் தோல், இலைச் சருகு, மரப்பட்டை, செடி கொடியின் வேர்கள் போன்ற மூலிகை அம்சங்களை கொண்டவை தான் திப்பிலி. இவை நோய் தன்மைக்கு ஏற்றவாறு பல மூலப்பொருட்கள் சேர்த்து செய்யப்படும் மருந்தாகும். இவை உடலில் மேல் பூசப் படுவதற்கும், உடல் உள்ளே சாப்பிடுவதற்கும் ஏற்ற மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இந்த திப்பிலிக்கு உரியவர் புதன். சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் கொண்டு மருத்துவம் செய்யப்படுகிறது. பழங்கால மருத்துவ வகையில் இவையும் ஒன்று. தற்போது மலைவாழ் மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்றாலும், சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் தயாரிக்க இவற்றைப் பயன்படுத்திக் கொள் கிறார்கள். மனோவசிய மருத்துவம்: நமது மனதை திடப்படுத்தி ஒரு நிலைப்படுத்தி செய்யக்கூடிய மருத்துவம், 'மனோவசிய மருத்துவம்'. இதற்கு சந்திரனே காரணமாக இருக்கிறார். மனதில் பயம் கொண்டவர் களுக்கு தைரியத்தை அளிப்பதற்காக யந்திரம் மந்திரித்துத் தருவதைப் பார்த்திருக்கலாம். இதுவும் ஒருவகை மருத்துவமே. பித்து பிடித்த மன நிலையில் இருப்பவர்களுக்கு இவ் வகையான மருத்துவம் செய்யப்படுகிறது. இவற்றுக்கு காரணமானவர் சுக்ரன். தமிழ் வேதங்களான தேவாரம், திருவாசகம் போன்ற வேத வார்த்தைகளை பயன்படுத்தி, திருநீறு மந்திரித்து தருவது ஒருவகை வைத்தியம் ஆகும். இதன் மூலம் உடல் வலிகள் மன தைரியம், நம்பிக்கை மூலம் பல நோய்கள் குணம் அடைய செய்வார்கள். இவற்றுக்கு எல்லாம் குருவே காரணமாக இருக்கிறார். நமது உடல் பயிற்சிகள் மூலம் எவ்விதமான நோய்கள் வராமல் பாதுகாக்க யோகாசனம் பெரும் உதவி செய் கிறது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் ஒருவகை வைத்திய கலை இதுவாகும். இதற்கு சூரியன் காரணமாக இருக்கிறார். தியானம் மூலமும் பல நோய்கள் வராமல் தடுக்க முடியும். நோய் இன்றி நூறு வருடம் வாழும் கலையை கற்றுத் தரு கிறது. இவற்றுக்கு புதன் காரணமாக இருக்கிறார். பிராணாயாமம் என்ற ஒரு வகை மருத்துவ முறை இருக்கிறது. இது நமது மூச்சு விடும் காற்று அளவுகளில் சுவாசத்தை அடக்கியாளும் யோக முறையாகும். இந்த மூச்சு பயிற்சியின் மூலமும் நோய் தடுப்பு செய்ய முடியும். இவற்றுக்கும் காரணம் புதனே ஆகும். வேப்பிலை அடித்து பாடம் போடுதல்: வேப்பிலை அடித்து பாடம் போடுவது என்ற ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அது மருத்துவம் என்று சொல்வதை விட, மனிதர்களின் நம்பிக்கை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இதற்கு உரியவர் சனி பகவான். இந்தியாவில் மட்டும் தான் மனிதனின் நம்பிக்கை என்ற அடிப்படையில் பல வகையான மருத்துவ முறைகள் உள்ளன. எல்லா வைத்திய முறைகளுக்கும் விஞ்ஞான ஆதாரம் காட்டுவது என்பது குறைவு என்றாலும், நோய் போக்குவதற்கு எளிய வைத்திய முறைகள் நிறைய உள்ளன. நாம் பல விரத நாட்களில் அமாவாசை தினங்களில் கடலில் போய் குளிக்கிறோம். அவ்வாறு கடலில் குளிக்கும் போது கடல் நீர் உப்பு தன்மையாக இருந்தாலும் நமது உடலில் உள்ள சொரி, சிரங்கு, தேம்பல், மேக நோய், மர்ம உறுப்பில் உள்ள தோல் நோய்கள், அக்குகள் உள் தோல் நோய்கள், தலையில் பொடுகு, புண்கள் உடனே சரியாகும். கடல் நீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்பதை விஞ்ஞானம் கூட ஒப்புக் கொள்கிறது. மனித உடலில் உள்ள நோய்களை போக்க விஞ்ஞானம் கூடிய இயற்கை முறைகளில் நல்ல மருந்தாக உள்ளது. என்ன தான் இயற்கை முறையில் மருத்துவம் ஆயிரம் இருந்தாலும் விஞ்ஞான அடிப்படையில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை முறைகளில் ஈடு இணை எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியே காட்டுகிறது. இவற்றுக்கெல்லாம் ஒரு அடிப்படை ஜோதிடம் காரணமாக உள்ளது. மேலும் நம்மை அறியாமல் எங்கும் எதிலும் ஜோதிடம் நுழைந்து அதன் பணியை சரிவர செய்கிறது. பொதுவாக மகர கும்ப ராசிகளில் செவ்வாய் நின்று இருந்தாலே நமது உடலில் ஒரு சின்ன தையல் போட வேண்டி வரும். அதேபோல் சனி செவ்வாய் சேர்க்கை அல்லது பார்வை இருந்தாலே உடலை கிழித்து தையல் போட்டு ஒட்டு போட வேண்டி இருக்கும். இவையாவும் ஜோதிட ரீதியாக அனுபவத்தில் கண்ட உண்மையாகும். -ஆர்.சூரியநாராயணமூர்த்தி.