Saturday 17 February 2018

தங்கம்போல ஜொலிக்க… மஞ்சள்!

தங்கம்போல ஜொலிக்க… மஞ்சள்! டாக்டர் வி. விக்ரம்குமார் பெண்களுக்கு நோய்கள் ஏற்படாமல் தடுத்ததில் மஞ்சளுக்கு நெடுங்காலமாக மிகப் பெரிய பங்கு உண்டு. மாதவிடாய் நாட்களில் உண்டாகும் கிருமிகளை அழிக்கவும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் முறை பயன்பட்டிருக்கிறது. உடலில் தேவையில்லாமல் முளைக்கும் ரோமங்களை இயற்கையான முறையில் நீக்க மஞ்சளைத் தவிர சிறந்த பொருள் வேறெதுவுமில்லை. கிருமிநாசினி செய்கை கொண்டது என்பதால், தோல் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமையும் மஞ்சளுக்கு இருக்கிறது. பாடல் உணர்த்தும் உண்மை 'மஞ்சள் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமோடு' எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் உடலில் ஏற்படும் நாற்றம், தோல் நோய்கள், சில வகையான கப நோய்கள் போன்றவை நீங்கும் என்பதை உணர்த்துகிறது. மஞ்சள் குளியலால் தலைபாரம், தலைவலி குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 'மஞ்சள் தேய்த்துக் குளிப்பது அநாகரிகமான செயல்' என்று இன்றைய தலைமுறையினர் கருதும் நிலையில், அதன் பயன்களை முந்தைய தலைமுறையிடம் கேட்டால் மஞ்சளின் மகிமை குறித்து நமக்குப் புரியும். மஞ்சளை அரைத்து, அதைக் குளிப்பதற்குப் பயன்படுத்தும் வயதான பாட்டிகளின் தோல் ஆரோக்கியத்தை இன்றும் நம்மால் கண்கூடாகப் பார்க்க முடியும். மேனிக்கு மருந்து இன்றைய நகரவாசிகள் சமையல் தவிர்த்து மஞ்சளை வேறு எதற்கும் பயன்படுத்தாத நிலையில், மஞ்சள் குளியல் முறை மீண்டும் உயிர் பெற்றால், தங்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து பெண்கள் தப்பித்துக்கொள்வதற்கு, நல்லதொரு பாதுகாப்புக் கவசம் கிடைக்கும். தோலில் பாதிப்பு உண்டாகாமல் 'பள பள'வென ஜொலிக்கும் தேகத்தைப் பெற, மஞ்சள் தேய்த்துக் குளிப்பது பயன் தரும் என்பதை 'பொன்னிறமாம் மேனி புலால் நாற்றமும் போம்' என்ற பாடல் வரியின் மூலம் விளக்குகிறார் சித்தர் அகத்தியர். மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் தோல் புத்துயிர் பெறுவதோடு, தேகத்தில் உருவாகும் வியர்வை நாற்றமும் மறையும் என்பதுதான் இதன் பொருள். மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், தோல் சுருக்கம் ஏற்படுவது தள்ளிப்போவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் தேய்த்துக் குளித்து வருவதால் பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் தீவிரமடையாது. ஈரமான இடங்களில் தொடர்ந்து இருப்பதால் உண்டாகும் சேற்றுப் புண் வராமலும் தடுக்கப்படும். மஞ்சள் நீரூற்றின் மகிமை பெரும்பாலான வடநாட்டுத் திருமணங்களில், மணமக்களுக்கு 'மஞ்சள் பூச்சு' நிகழ்வு தவறாமல் இடம்பெறுகிறது. கிருமிகளை அழிப்பதும், முகப்பொலிவை உண்டாக்குவதும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதும்தான் 'மஞ்சள் பூச்சு' செய்வதன் விஞ்ஞானப் பின்னணி. தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கும் மஞ்சள் நீரூற்று விழாக்களின் பாரம்பரியத்திலும் நோய்களை அழிக்கும் அறிவியல் உள்ளது. தேங்காய்ப் பாலோடு மஞ்சள் கலந்து குளிக்கும் வழக்கம் மலையாள மக்களிடம் இன்றளவும் தொடர்கிறது. கலப்பட மஞ்சள்! மஞ்சள் போலவே மணமிக்க கஸ்தூரி மஞ்சளையும் குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். இதை அரைத்து உடலில் தேய்த்துக் குளிப்பதால், உடலில் உண்டாகும் சிறுசிறு கொப்பளங்கள், அரிப்பு, கரப்பான் எனப்படும் ஒரு வகையான தோல் நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. முகப் பருக்களில் கிருமி சஞ்சாரம் ஏற்படுவதும் தடுக்கப்படும். குளித்து முடித்த பிறகு நல்ல வாசனையையும் கொடுக்கும். சில கடைகளில் கிடைக்கும் மஞ்சள் தூளில் மரத் தூள், மாவுப் பொருள் போன்றவற்றைக் கலப்படம் செய்துவிடுகின்றனர். 'வெளியில் பூசிக் குளிப்பதற்குத் தானே, கலப்படம் இருந்தால் என்ன?' என்று சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. கலப்பட மஞ்சளை உட்கொள்வதால் மட்டுமல்ல, வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தினாலும் உடலுக்குப் பாதகம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. தரமற்ற மஞ்சள் நிச்சயமாகத் தோலுக்குப் பாதிப்புகளை உண்டாக்கும். 'மஞ்சள் தேய்த்துக் குளிப்பது தோலுக்குப் பாதகமானது' என்று தவறாகப் பிரசாரம் செய்துவிட்டு, கிருமிநாசினி கிரீம்களிலும், பாடி லோஷன்களிலும் மஞ்சளின் சாரத்தை வணிக நிறுவனங்கள் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள். நம்மில் பலரும் வெறும் விளம்பரங்களுக்கு மயங்குகிறோம்! இனிமேலாவது உண்மைப் பலன்களுக்கு மயங்குவோம். கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com 

No comments: