Friday, 28 September 2018

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

காற்றில் உள்ள மாசுக்கள் காரணமாக (pollution) சருமத் துளைகளில் சேரும் மாசுக்கள், சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இத்தகைய மாசுக்களை அகற்றி, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சி பெறும் வகையில் சுத்தம்செய்யவும், சருமத்துளைகளில் வெளிப்படும் எண்ணெய்த்தன்மை காரணமாக முகம்பொலிவிழப்பதை தடுக்கவும், முகப்பரு ஏற்படும் தாக்கத்தை கட்டுக்குள் வைக்கவும், மூக்கின்மேல் சொரசொரப்பாக தோன்றும் கரும்புள்ளிகள் (blackheads) மற்றும் வெள்ளை புள்ளிகளும் (whiteheads) நீங்கி முகம் பளிச்சிடவும், முகத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராவதால் முதுமை தோற்றத்தை தள்ளி வைக்கவும், மேலும் மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்று சுவாசத்திற்கு சிரமம் தரக்கூடிய சில பிரச்சனைகளில் உடனடி தீர்வு தரக்கூடியது என ஆவி பிடிப்பதற்கு பல நல்ல பலன்கள் உண்டு. ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்கு கொதித்தவுடன், மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன் அளவுபோட்டு, உடனே கனத்த துண்டு, கொண்டு ஆவி முகத்தில் படும்படி, கண்களைமூடி, ஆவி பிடிக்கவும். மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மஞ்சள் நமது சுவாசப்பாதையை சரிசெய்வதுடன், சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள மாசுக்கள், மற்றும் பருக்களை உருவாக்கும் கிருமிகள் விரைவில் வெளியேற உதவுகிறது. மஞ்சள் மற்றும் கையளவு துளசியைப் போட்டும் ஆவி பிடிக்கலாம். எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு கலந்தும் ஆவி பிடிக்கலாம். வேப்பிலை கையளவு போட்டும் ஆவி பிடிக்கலாம். கடைசியில் ஐஸ் கட்டியை டவலில் சுற்றி முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஒற்றி, சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஒத்தடம் வைக்கலாம். அல்லது குளிர்ந்த நீரினால் முகத்தை அலசலாம்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday, 2 September 2018

உறவுக்குப் பின்னால் சில உபாதைகள்

உறவுக்குப் பின்னால் சில உபாதைகள் (தீர்வுகளை தெரிந்துகொள்வோம்) கணவன்- மனைவி இடையேயான தாம்பத்ய உறவு இன்பமானதாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு உறவுக்குப் பின்பு சின்னச் சின்ன உடல் உபாதைகளும், சிலருக்கு தீவிரமான பாதிப்புகளும் ஏற்படலாம். உறவு கொண்ட பின்பு, பொதுவாக ஏற்படும் சில உடல் உபாதைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆண்-பெண் இருபாலருக்கும் நல்லது. அடிக்கடி ஏற்படும் வலி பொதுவாக தாம்பத்ய உறவு முடிந்ததும் கணவனும்- மனைவியும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் அல்லது பேசிக் கொண்டிருப்பார்கள். பின்பு ஆண்கள் சீக்கிரமாக தூங்கிவிடுவார்கள். உடல் அசதி இருவருக்குமே இருந்தாலும், பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரம்ப கால உறவின்போது ஏற்படும் வலி என்பது வேறு. வழக்கமான உறவுக்குப் பின்பு வலி ஏற்படுவது கவனிக்க வேண்டியதாகும். வித்தியாசமான உறவு செயல்பாடுகளால் வலி உண்டாகலாம். தீவிர ஆர்வத்தால், வினோத புணர்வு இன்பத்தால் பிறப்பு உறுப்பில் தோல் கிழிவது, புண்ணாவது, நகங்கள் படுவது போன்ற காரணங்களால் இருபாலருக்குமே காயம் ஏற்படவும் வலி உண்டாகும் வாய்ப்பும் உண்டு. உடல் ஆரோக்கிய குறைபாடு காரணமாகவும் வலி உண்டாகலாம். மாறுபட்ட முயற்சி மற்றும் முரட்டுத்தனமான புணர்ச்சியாலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகலாம். சாதாரண வலி என்றால் அதனை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரோக்கிய குறைபாடு மற்றும் தொடர் வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் ஒவ்வொரு முறை உடலுறவுக்குப் பின்பும் வலி ஏற்படுவது, கட்டி, புண்கள் வளர்வதற்கான அறிகுறியாகவும், வேறு நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். வலி ஏற்படாமல் இருக்க நிதானமான தாம்பத்ய செயல்பாடுகள் அவசியம். நீண்ட நேர எரிச்சல் வலியைப் போலவே பலருக்கும் உடலுறவுக்குப் பின்பு எரிச்சல் உணர்வு உண்டாகலாம். நகக் கீறல், பற்குறி, அசுர வேகம் உள்ளிட்ட காரணங்களால் தோலில் ஏற்படும் கிழிசலாலும், அதிக அழுத்தம் காரணமாக ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டும் எரிச்சல் ஏற் படலாம். உறவுக்குப்பின்பு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எரிச்சல் நின்றுபோனால் அது சாதாரணமானது. எப்போதும் தொடர்ந்து எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். நிதானமான உறவு செயல்பாடு வலியையும், எரிச்சலையும் தவிர்க்கும். வாய் மற்றும் பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்வதும் அவசியமாகும். இருவருமே அந்தரங்க சுத்தத்தை மேற்கொண்டால் எரிச்சலை பெருமளவு தவிர்க்கலாம். ரத்தக்கசிவு முதல் உறவின்போது மட்டுமே கன்னித்திரை கிழிவதால் லேசான ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது பெண்களின் விளையாட்டு, உடல் இயக்கம், வாழ்வியல் முறைகளால் அத்தகைய ரத்தக் கசிவு நிலை அனேகமாக ஏற்படுவதில்லை. மாதவிலக்கு முடிந்த அடுத்த நாட்களில் உறவு வைத்துக் கொண்டால், சில பெண்களுக்கு எஞ்சிய ரத்தத்துளிகள்கூட கசிந்துவரக்கூடும். மற்ற நேரங்களில் சாதாரண உறவு நிலையில் ரத்தம் கசிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். முரட்டுத்தனம் மற்றும் அவசரத்தால் ஏற்பட்ட ரத்தக்கசிவு என்றால் மருந்துகளை உபயோகித்து சரி செய்துவிடலாம். உறவுக்குப் பின்பு தொடர்ந்து ரத்தம் கசிவது, ஒவ்வொரு உறவின்போதும் இதே பிரச்சினை ஏற்படுவது, பிறப்பு உறுப்பின் உட்பகுதியில் புண் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு அவசியம் மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள். நமைச்சலும் அரிப்பும் உறவுக்குப் பின்பு பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அரிப்பு ஏற்பட்டால் அந்தரங்க சுத்தமின்மை காரணமாக இருக்கலாம். உறவுக்கு முன்னும் பின்னும் உறுப்புகளை சுத்தமாக கழுவுவது நல்லது. ஆணுறை உபயோகிப்பது, வழுவழுப்பு தன்மைக்காக ஏதேனும் கிரீம்களை உபயோகிப்பது, உதட்டுச் சாய ரசாயனங்களின் விளைவு உள்ளிட்ட காரணங்களாலும் அரிப்பு ஏற்படலாம். உறுப்புகளை கடந்து உடலிலும் அரிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவியை பெறுவது அவசியம். உடலுறவால் சிலருக்கு சிறுநீர்ப்பை நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. குடல் பகுதியில் இருந்து பாக்டீரியா நுண்கிருமிகள் பிறப்பு உறுப்புகளின் வழியே நுழைவது சிறுநீர்ப்பை நோய்த் தொற்றை உருவாக்கும். உடலுறவுக்கு முன்பு அல்லது உடலுறவு முடித்த உடன் சிறுநீர் கழிப்பதை தவிர்த்தால் சிறுநீர்ப்பை நோய்த் தொற்றை தவிர்க்கலாம். அவசர உபாதைகள் தாம்பத்ய உறவு கொண்டதும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் அல்லது மலம் கழிக்கும் அவசரம் ஏற்படுவதுபோல தோன்றலாம். இது முழு விருப்பம் இல்லாமல், பலவித மனநெருக்கடிக்கு இடையில் உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். ஆண்களில் சிலருக்கு உறவுக்குப் பின்பு, திரவம் கசிவதுபோல இருக்கலாம். அது எஞ்சிய திரவமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் கருவுற்ற நிலையில் உறவு கொண்டாலோ அல்லது கருத்தடை சாதனங்களை பயன்படுத்திக் கொண்டு உறவு கொண்டாலோ உட்சென்ற விந்துத்திரவம் சிறிது நேரத்தில் வெளித்தள்ளப்படக்கூடும். இது இயற்கையானதுதான். அந்தரங்க சுத்தமும், நிதானமான செயல்பாடுகளும் இருந்தால் பெரும்பாலும் உடலுறவுக்குப் பின்னால் அவஸ்தைகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பதை ஆண்களும், பெண்களும் கவனத்தில்கொள்வது மிக அவசியம்.

கல்விச்சோலை - kalvisolai health tips