உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் 177 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 1,202,827 பேருக்குப் பரவியுள்ளது. 64,771 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 2,46,886 - ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,588 ஆக உயர்ந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.
கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி?
உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.
கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?
நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.
உங்களுக்கு கொரோனா உள்ளது என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.
கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?
இந்த கோவிட் 19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.
இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவரின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ள எந்த பகுதிகளில் தெர்மாமீட்டர் வைத்து சோதிக்கலாம்?
கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன?
கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.
தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
கொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?
கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.
56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:
6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.
14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை
80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.
வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.
கொரோனாவை குணப்படுத்த முடியுமா?
தற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும். விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். கோவிட் 19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து (பாக்டீரியாவை அழிக்கும் மருந்து)) செயல்படாது.
கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
கொரோனா எங்கிருந்து வந்தது?
இந்த SARS-COV-2 வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த விலங்கு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் வெளவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல்
கொரோனா வைரஸ் : சிக்கன் சாப்பிடலாமா? வெயில் அவசியமா? - மருத்துவர் விளக்கம்
கொரோனா: யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? அமைச்சர் விளக்கம்
கொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது?
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.
இரும்பும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுபரவலை தடுப்பது எவ்வாறு?
உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.
Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.
எனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும்,
உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும்
மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும்
கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.
கொரோனா தொற்றை கையாள இந்தியா தயாராக உள்ளதா?
உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?
ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.
இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணத்தை சீன அரசு ஊடகங்கள் உறுதி செய்த ஆறு நாட்களில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) பிரகடனம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்தே விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.
அருகில் உள்ள நேபாளத்துடன் சர்வதேச எல்லையை பகிரும் ஐந்து மாநிலங்களில் எல்லைப் பகுதியில் வாழும் 27,000-க்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் 10 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருபவர்களைப் பரிசோதிப்பதற்காக, இரானில் ஓர் ஆய்வகத்தை இந்தியா அமைக்கிறது.
இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில் இந்த வைரஸ் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இந்த வைரஸ் தீவிரமாகப் பரவ நேரிட்டால் நிலைமையை எப்படிக் கையாள்வது என்று சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டு வசதிகள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுபாடுகள் என்னென்ன?
இந்தியர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்து திரும்பினால் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தாலி, சீனா, இரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியிலிருந்து பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு வந்தவர்கள் அனைவரையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இது வரும் மார்ச் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியர்கள் அவசியமில்லாத பயணங்களை ரத்து செய்ய கேட்டு கொள்ளப்படுகின்றனர். மேலும் வெளிநாட்டுக்கு பயணம் செய்து வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்," என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாஸ்க் அணிவது பயன் தருமா?
காற்றில் உலவும் பாக்டீரியா அல்லது வைரஸை தடுப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் மாஸ்க் பெரிய பலனை தராது. அந்த மாஸ்க் அழுத்தமாக இருக்காது என்பதாலும், அதில் காற்று தடுப்பான் இல்லை என்பதாலும், கண்கள் மூடப்படாது என்பதால் அவ்வளவு பலனை தராது. என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் டேவிட் காரிங்டன்
உங்களை நீங்களே எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளலாம்?
நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி, பணி மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.