Thursday 29 December 2016

கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?

கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலனாமே.'

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தென்னாட்டவருக்கு திரிபலா...

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்.

உடல் வலிமை பெற...

நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.

பல் நோய்கள் தீர...

கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

மூல எரிச்சல் தீர...

கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.

எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. வாழ்க வளமுடன்!

கடுக்காய்:
அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, எரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில் வாத-பித்த-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
பயன்கள் :
ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது.இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது. இளமையோடு நீண்ட நாள் வாழலாம். அதனால்தான் "காலையில் இஞ்சி... நண்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..''- என்று சித்த மருத்துவ பாடல் குறிப்பிடுகிறது.     
கடுக்காய்
இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. உடல் உறுதி பெறவும், நோயற்ற வாழ்வைப் பெறவும், நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியம் மேம்படவும், உடல் உள்ளுறுப்புகள் பலப்படவும் உதவக்கூடிய வழிமுறைகளை, தாவரங்கள் மூலம் இயற்கை நமக்கு வாரி வழங்குகிறது. இந்த இயற்கை தரும் முறைகளை செவ்வனே பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வை வாழலாம். அவ்வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கடுக்காய்.

கடுக்காயின் தாயகம் இந்தியா. இது மிகவும் பழமையான மரம். புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார் 20 முதல் 25 மீட்டர் உயரத்தில், அரை மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து, மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டை வடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக, சிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சை நிறமுடையதாகவும், முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்ட பள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டினுள் கொட்டை காணப்படும்.

கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.

சிறப்புத் தன்மைகள் :
கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மையுடையதாகும். வடமொழியில் 'மருத்துவரின் காதலி' எனப்படுகிறது. மருத்துவத்தில் மட்டுமின்றி பொருளாதா£ரம், தொழிலியல் துறைகளில் வெகுவாக பயன்படுகிறது. 'திரிபலா' என்பது சித்த மருத்துவத்தில் புகழ்பெற்ற ஒரு கூட்டு மருந்தாகும். இதில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்ற மூன்றும் சேர்க்கப்படுகின்றன. கடுக்காய் என்பது ஒரு கடினமான மருந்து என்று நாம் கருதுகிறோம். ஆனால் கடுக்காயை நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாக வாங்கலாம். கடுக்காயின் தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

பொருளாதாரப் பயன்கள்:
கடுக்காய் மரத்தழைகளை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
கடுக்காய் மரத்திலிருந்து பிசின் எடுக்கலாம்.
மரப்பட்டை பொடியிலிருந்து மோல்டிங் மாவு தயாரிக்கப்படுகிறது.
பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப்பொருளாக விளங்கும் டானின் சத்து கடுக்காய்த் தோலிருந்து பெறப்படுகிறது.
தோல் பதனிட டானின் பயன்படுகிறது.
துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டானின் உதவுகிறது.
டானின் பிரித்தெடுத்த பின் எஞ்சும் கடுக்காய்ச் சக்கை அட்டைக் காகிதம் செய்யவும், ஒட்டுப்பசை தயாரிக்கவும் பயனாகிறது.
முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.
கடுக்காய் கொட்டையிலிருந்து ஒருவகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது.

குணங்கள் :
வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, உள்ளழலகற்றி போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளைக் குணப்படுத்தும்.

மருத்துவப் பயன்கள் :
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.
மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.
10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.
நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு
வேறு பெயர்கள் : அமுதம், அம்ருதா, அரபி, அரிதகி, ரோகினி, வரிக்காய், ஜீவந்தி, அமரிதம்.
தாவரவியற் பெயர் :Terminalla Chebula
ஆங்கிலப் பெயர் : Chebulic Myrobalam, Ink nut
இது மரவகுப்பைச் சேர்ந்தது. இது சில இடங்களில் உயர்ந்தும், சில இடங்களில் மிக உயரமின்றித் தாழ்ந்தும் பயிராகின்றது. இதன் பிஞ்சும் பழமுமே மருத்துவத்தில் உபயோகமாகின்றன. தாயோ அறுசுவை உணவை ஊட்டி வளர்ப்பாள். கடுக்காயோ உடற்பிணிகளை ஓட்டி உடலைத் தேற்றும். இதனால் தாயினும் கடுக்காய் சிறந்தது எனக் கூறப்படுகின்றது. மருத்துவப் பாவனைகளாவன;
குடற்புழுக்களிற்கு
கடுக்காய்த் தோல், வேப்பிலை ஈர்க்கு, சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோன்று அரைத்து அதில் நெல்லிக்காய்ப் பிரமாணம் 1 தே. கரண்டி ஆமணக்கெண்ணெயில்  கலந்து காலையில் வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ந்து அருந்திவர குடலில் உள்ள புழுக்கள் வெளியேறி குடல் சுத்தம் அடையும்.
கரப்பான் நோய்க்கு (எக்ஸிமா)
கடுக்காய்த் தோலை சூரணித்து 1/2 தே.கரண்டி காலை, மாலை பாலுடன் உட்கொண்டு அச்சூரணத்தையே வெந்நீரில் கலந்து உடலில் பூசி ஸ்நானம் செய்து வந்தால் குணமாகும்.
மலச்சிக்கலுக்கு
பச்சைக் கடுக்காயை கொட்டை நீக்கி இடித்து அதற்கு 1/5 பங்கு உப்பிட்டு, 15 நாள் சென்ற பின் பிசைந்து அதை சோற்றுடன் சேர்த்தவாறு தனித்தாவது புசிக்கின் மலம் கழியும்.
உடல் எடையைக் குறைக்க
கடுக்காய்த் தோல், தான்றித்தோல், நெல்லி வற்றல் சம எடை எடுத்து சுத்தம் செய்து இடித்து வஸ்திரகாயஞ் செய்து அதில் 1/2 தே. கரண்டி அளவு கொள்ளுக் குடிநீருடன் காலை, மாலை என இருவேளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
தலைவலிக்கு
வேப்பம்பட்டை , கடுக்காய் (கொட்டை நீக்கியது), கோரைக்கிழங்கு, நிலவேம்பு சம எடை எடுத்து தட்டி ஒரு சட்டியில் போட்டு 400 மி.லீ. நீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்கு காய்ச்சி ஒரு நாளைக்கு 3 வேளை வீதம் தேன் கலந்து சாப்பிட தலைவலி குணமாகும்.
மூலத்திற்கு கடுக்காய் லேகியம்
 கடுக்காய் 300 கிராம் எடுத்து இடித்து 8 பங்கு நீர்விட்டு எட்டிலொன்றாக வற்றக் காய்ச்சி வடித்த கசாயத்தில் 300 கிராம் சர்க்கரையைக் கரைத்துப் பாகு செய்து  அதில் சிவதை இஞ்சி, மிளகு, ஓமம், வாய்விளங்கம், திப்பிலி வகைக்கு 30 கிராம் எடுத்து அரைத்துப் போட்டு பசு நெய் 1 படி விட்டுக் கிண்டி லேகியஞ் செய்து வேளை ஒன்றுக்கு கொட்டைப் பாக்குப் பிரமாணம் உட்கொள்ள மூலநோயுடன் பசியின்மை, மலசலக்கட்டும் தீரும். கரப்பான் பதார்த்தம் நீக்க வேண்டும்.
கண் மறைப்பிற்கு (கட்காசம்)
 கடுக்காய்த் தோலைத் தட்டி சூரணமாக்கி துணியில் முடித்து ஆமணக்கெண்ணெயில் இட்டுச் சூரிய ஒளியில் வைத்து  கண்ணில் பிழியலாம்.
கரப்பான், குட்டம் போன்ற நிலைக்கு
 கடுக்காய் சூரணத்தை 1/2 தே.கரண்டி காலை, மாலை பாலில் அரைத்துச் சாப்பிட வேண்டும்.
பல்லீறு வலி, இரத்தம் வடிதலுக்கு
 கடுக்காய்த் தோலை பொடி செய்து அதனைக் கொண்டு பல்துலக்க விரணம் ஆறுவதுடன் பல்லும் இறுகும்.
நீரிழிவு நோய்க்கு
 கடுக்காய்த்தோல் 1 பங்கு, நெல்லி வற்றல் 1 பங்கு, கறிவேப்பிலை 1 பங்கு, சிறுகுறிஞ் சா இலை1/2 பங்கு தனித்தனியாக பொடி செய்து ஒன்று கலந்து காலை, மாலை 1 தே. கரண்டி வெந்நீருடன் பருகலாம். ஆனால் இலங்கன இரத்தப் பரிசோதனையின் பின் வேண்டுமானால் 3 வேளையும் பருகலாம். பாவித்து நல்ல பலன் கிடைத்த ஒன்றாகும்.
இருமலிற்கு
 கடுக்காய்த் தோல், திப்பிலி சம எடை எடுத்து இடித்து தூள் செய்து 2 கி. தூளை தேனில் சேர்த்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.காலையில் இஞ்சி 1 துண்டு, மதியம் சுக்கு 1 துண்டு, இரவு 1/2 தே.கரண்டி கடுக்காய் தோல் பொடி உண்டால் இளமையுடன் வாழலாம்.