புரதம் நிறைந்த வெள்ளைக்கரு | காலை உணவுடன் முட்டையையும் சேர்த்துக் கொள்வது நல்லது. ஊட்டச்சத்து மிகுந்த முட்டை, உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. உடலுக்கு தேவையான ஆற்றலை அது தருகிறது. முட்டையை ஆம்லெட்டாகவோ, வேகவைத்தோ, பொரித்தோ சாப்பிடலாம். இளம் வயதைக் கடந்தவர்கள் வேகவைத்த முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வரலாம். முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! மஞ்சள் கருவை நீக்கி விட்டால் முட்டையில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்துபோய்விடும். கொழுப்பை விரும்பாதவர்கள், அதிக கொழுப்பு அளவை கொண்டிருப்பவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. முட்டையில் அதிக புரதம் உள்ளது. குறிப்பாக வெள்ளைக்கருவில் உடலுக்கு நன்மை தரும் குறைந்த கொழுப்பு கொண்ட புரதம் நிரம்பியிருக்கிறது. அதனால் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைத்துவிடும். கெட்ட கொழுப்பும் குறையும். முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கலோரி இருக்கிறது. அதனை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் குறைந்த கலோரிகளே உடலுக்கு கிடைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளைக்கருவில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். இதயத்துக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும். ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவும். வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ, பி 12 மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. வைட்டமின் பி12 தசை சிதைவு, கண் புரை, ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்க துணைபுரியும். வெள்ளைக்கருவை சாப்பிடும் வேளையில் மஞ்சள் கருவை அறவே ஒதுக்கிவிடவும் கூடாது. அதிலும் ஊட்டச்சத்துகள் உள்ளன. முக்கியமாக கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வெள்ளைக்கருவைவிட மஞ்சள் கருவில் அதிகம் இருக்கின்றன. எனினும் அதிக கொழுப்பு, உடல் எடை பிரச்சினை, சர்க்கரை நோய், ஜீரணம் தொடர்புடைய பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு வெள்ளைக்கரு சாப்பிடுவதே சிறந்த தீர்வாக அமையும்.
No comments:
Post a Comment