Saturday 23 June 2018

‘தலை’ காக்கும் பொடு‘தலை!’

‘தலை’ காக்கும் பொடு‘தலை!’ டாக்டர் வி. விக்ரம் குமார் வேதி களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கத்துக்கு முன்பு, வயல் வரப்புகளில் நிறைய சிறுசிறு மூலிகைகள் நிரம்பியிருந்தன. தற்போது அவற்றில் பெரும்பாலானவை காணாமல் போய்விட்டன. வேதிப்பொருட்களின் வீரியத்தைத் தாண்டி சில மூலிகைகள் வளர்ந்தாலும், அவற்றைக் களைச் செடிகள் என்று மக்கள் பிடுங்கி எறிந்துவிடுகின்றனர். அவ்வாறு பலராலும் தவறாகக் கருதப்படக்கூடிய மூலிகைதான் ‘பொடுதலை’. நோய்க்கான தீர்வைத் தனது பெயரிலேயே பொதிந்து வைத்திருக்கும் மூலிகை இது. தலையில் அரிப்புடன், வெள்ளை நிறப் பொக்கு உதிரும் பொடுகுத் தொல்லைக்கான அற்புதமான மருந்து பொடுதலை தாவரத்தில் இருக்கிறது. பெயர்க் காரணம்: பொடுகுத் தொந்தரவுக்கு இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பயன்படுவதால், ‘பொடுதலை’ எனும் பெயர் உருவானது. பொடுதிலை, பூற்சாதம், பூஞ்சாதம் ஆகிய வேறு பெயர்களும் பொடுதலைக்கு உண்டு. நீர் நிறைந்த பகுதிகளிலும் மழைக்காலத்திலும் தாராளமாக வளர்ந்து கிடக்கும் தரைபடர் பூண்டு வகை பொடுதலை. அடையாளம்: தண்டு முழுவதும் சிறிய ரோம வளரிகள் காணப்படும். விளிம்புகளில் வெட்டுகள் கொண்ட சிறிய இலைகளை உடையது. காயானது திப்பிலிபோல இருந்தாலும், அளவில் சிறியதாக இருக்கும். கணுப்பகுதியில் வேர் உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். கருஞ்சிவப்புடன் வெண்ணிறம் கலந்த அழகான மலர்களை உடையது. ‘வெர்பினாசியே’ (Verbenaceae) குடும்பத்தைச் சார்ந்த பொடுதலையின் தாவரவியல் பெயர் ‘ஃபைலா நோடிஃபுளோரா’ (Phyla nodiflora). டிரைடெர்பினாய்ட்ஸ் (Triterpenoids), நோடிஃபுளோரிடின் (Nodifloridin), லிப்பிஃபுளோரின் (Lippiflorin), ரூடின் (Rutin) போன்ற வேதிப்பொருட்களும் இருக்கின்றன. உணவாக: மூல நோய்க்கு இதன் இலையை நெய்யில் வதக்கி, உளுத்தம் பருப்பு சேர்த்துத் துவையலாகச் சாப்பிடலாம். மலமும் சிரமமின்றி வெளியேறும். இதன் இலைகளோடு சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட, சிறுநீர் எரிச்சல் குறையும். பழைய அரிசியுடன், இதன் காயைச் சேர்த்து ஒரு கொதி மட்டும் வேகவைத்து, பின் வெந்த அரிசியைக் காயவைத்து நொய்யாக்கி, வயிறு மந்தத்துடன் அவதிப்படும் குழந்தைகளுக்குக் கஞ்சியாக்கிக் கொடுக்க பலன் கிடைக்கும். பொடுதலை இலைகளுடன் புதினா, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துத் துவையல்போலச் செய்து, சோற்றுடன் பிசைந்து சாப்பிட சுவாசக் கோளாறுகள் மறையும். மருந்தாக: தோலில் ஏற்படும் கருநிறத் திட்டுகளை (Hyper pigmentation) குறைப்பதற்குப் பொடுதலை பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மெலனின் உற்பத்தியைத் தேவையான அளவுக்கு பொடுதலை முறைப்படுத்தும், பதற்றத்தைச் சாந்தப்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பது (Anxiolytic), கொசுப்புழுக்களை அழிக்கும் தன்மை போன்ற திறன்களும் பொடுதலைக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டு மருந்தாக: வறுத்த ஓமத்துடன் பொடுதலையைச் சேர்த்தரைத்து, நீர்விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, ஒரு சங்கு அளவு கொடுக்க, குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல், வயிற்றுவலி ஆகியவை கட்டுப்படும். பொடுதலைக் காயோடு மஞ்சள் சேர்த்து மையாக அரைத்து, அடிப்பட்ட புண்கள், கட்டிகள் மீது தடவலாம். சிறு கட்டிகளுக்கு, பொடுதலையைச் சிறிது நீர்விட்டு மசித்துக் கட்டலாம். பொடுதலையின் காய், இலையை இடித்துச் சாறு பிழிந்து, சம அளவு நல்லெண்ணெய் கூட்டி, சிறிது மிளகுத் தூள் சேர்த்து வெயிலில் வைத்து நன்றாக சுண்டச் செய்து, சாறு முழுவதும் வற்றியபின் எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். பொடுகுத் தொந்தரவு இருப்பவர்கள் இந்தத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்துவர பொடுகு, தடமின்றி மறையும். மேலும் முழுத் தாவரத்திலிருந்து சாறு எடுத்துபின், நல்லெண்ணெய் கூட்டி அடுப்பில் வைத்துக் காய்ச்சி, இறுதியில் மிளகுத் தூள் சேர்த்தும் கூந்தல் தைலமாகப் பயன்படுத்தலாம். பூஞ்சைத் தொற்றுக்களை எதிர்க்கும் ஆற்றல் பொடுதலைக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘தலை’க்கு வந்த நோயை விரட்டுவதால், மூலிகைக் குழுவுக்கு ‘தலை’மையேற்கும் பொறுப்பை பொடு‘தலை’க்கு வழங்கியுள்ளது இயற்கை எனச் சொல்லலாம்!

கல்விச்சோலை - kalvisolai health tips

No comments: