Saturday 16 June 2018

‘உப்பு’ கரிக்கும் உண்மை!

இனிப்பு தேசத்தில், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இனிப்பில் மட்டுமல்ல. உப்பிலும்தான். காபிக்குச் சர்க்கரை வேணாம் என்று சொல்லிவிட்டு, ‘ஊறுகாய் இல்லாமல் மோர் சாதம் எப்படி?’ என வாதிடுவோருக்குத்தான் இந்த வாரக் கட்டுரை. தினையும் பனையும் மாதிரி உப்பின் வரலாறும் நீண்ட ஒன்று. உணவுக்கான ஓட்டத்தையும் காலத்தையும் உலகில் சற்றே ஒதுக்கி வைத்த பெருமை உப்பின் பதப்படுத்தும் ஆற்றலில்தான் உருவாயிற்று. நாகரிகங்கள் உருவாகி செல்வங்கள் ஒருபக்கமாய்ச் சேர்ந்ததற்கும் உப்புக்குமான தொடர்பு கெட்டியானது. நாம் இன்றைக்குச் ‘சம்பளம்’ என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தும் ‘Salary’ எனும் வார்த்தை, ‘Salt’ எனும் சொல்லில் இருந்துதான் பிறந்தது. இவ்வளவு மகத்துவமான உப்பை, அறுசுவையின் அத்தியாவசியச் சுவையை நீரிழிவுக்காரர்கள் கொஞ்சம் யோசித்துப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உப்பு உடலுக்குள் செய்யும் பணி ரொம்ப முக்கியமானது. இதயம் சுருங்கி விரிய, ரத்த நாடி, நாளம் தன் பலத்தோடு ரத்த ஓட்டத்தைச் சீராக இயக்க என உப்பு செய்யும் பணி அலாதியானது. ஆனால் அதே நேரம், ஒரு சிட்டிகை உப்பு கூடுதலாகச் சேர்ந்துவிட்டால், துணைக்குக் கூடவே நீரையும் சேர்த்துக்கொள்வதால், ரத்தக் கொதிப்பைக் கூட்டிவிடும் ஆபத்து உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு, மூன்று மாத சராசரி அளவு ஆகியவற்றைப் பார்க்கும் அதேவேளையில், நிற்கும்போது, படுக்கும்போது, உட்காரும்போது ரத்தக் கொதிப்பு அளவு எவ்வளவு என்பதும் மிக மிக முக்கியமானது. சித்த மருத்துவத்தில் பித்த நாடியின் ஓட்டத்தைச் சர்க்கரை நோய்க்குக் கொஞ்சம் உற்றுப் பார்ப்பது போலத்தான், நவீனப் புரிதல் ரத்த அழுத்தத்தை இனிப்பர்களுக்கு உற்றுப் பார்க்கிறது. சித்த மருத்துவப் புரிதல்படி, ஆரம்ப கட்ட இனிப்பு நோயருக்கு, முதலில் பித்த நாடி வலுவிலும் அளவிலும் இயல்பைவிடச் சற்றுக் கூடியிடிருக்கும். பசிக்கிற நேரத்தில் பேய்ப் பசியாய் மாறுவது இந்தப் பித்த ஆதிக்கக் குணத்தால்தான். பசிக்கும்போது, கோபமும் எரிச்சலும் உங்களுக்குப் பற்றிக்கொண்டு வருகிறதா? பரிமாறத் தாமதமாகும்போது பசி தாங்க முடியாமல், நடுவிரல் தானாக ஒரு ஆட்டம் ஆடி நிற்கிறதா? ஆம் என்றால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது GTT எனும் ரத்த சோதனையோ, நாடி சோதனையோதான். இரண்டும், உங்களுக்கு ஆரம்ப கட்ட நீரிழிவு நோய் வருகிறதா அல்லது ரத்தக் கொதிப்பு ஏறுகிறதா என்பதைத் தெரிவிக்கும். நாடியில் பித்தமும் ரத்தத்தில் சர்க்கரையும் சேர்ந்து ஏறி நின்று கலாய்க்க ஆரம்பித்துவிட்டது என்றால், இனிப்போடு சேர்ந்து உஷாராக இருக்க வேண்டிய பொருள் உப்புதான். நாம் ஒரு விஷயத்தை மிக முக்கியமாக உணர்ந்துகொள்ள வேண்டும். என்றைக்கு நமக்கு ரத்த சர்க்கரை அளவு உயர்ந்திருக்கிறது என்பதை உணர்கிறோமோ அப்போதே சிறுநீரகம் சற்றே பழுதாக, தொய்வாகத் தொடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். பல கோடி ஃபில்டர்கள் இருப்பதால் அந்தச் சிறுநீரகத் தொய்வின் தொடக்கம் எந்தச் சோதனையிலும் தெரிவதில்லை. காதோர நரைமுடி முதுமையை அறிவிக்காததுபோல, அமைதியாய் இருக்கும். ஆதலால், நாம் வெள்ளைச் சர்க்கரையைச் சற்றே விலக்கி இருக்க எத்தனிக்கும்போது, இந்த வெள்ளை உப்பையும் கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மெல்ல மெல்ல இதயம் விரிவடையும்போது வரும் அழுத்தம் (Diastolic blood pressure) உயரத் தொடங்கும். அப்பாவும் அம்மாவும் ரத்தக் கொதிப்பர்கள் என்றால், பிள்ளைக்கு அந்தச் சொத்து பங்கு போடாமல், பாந்தமாய் வந்து சேர்ந்துவிடுவது வாடிக்கை. ரத்தச் சர்க்கரையும் ரத்தக் கொதிப்பும் ஒன்றாய்ச் சேரும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் மிக மிக அவசியமாகிறது. சிறுநீரக ஃபில்டர்கள் பழுதாவது இங்கேதான் அதிகம். ஒவ்வொரு முறை சர்க்கரையைச் சோதிக்கும்போது, கை நாடியைப் பிடித்துப் பித்தத்தைப் பரிசோதிக்கும்போது, கூடவே அந்த ‘ஸ்பிக்மோமனோமீட்டர்’ (Sphygmomanometer) வைத்து ரத்தக் கொதிப்பையும் ஒரு எட்டுப் பார்ப்பது நல்லது. உப்பை அதிகமாகப் பயன்படுத்துவது ரத்த அழுத்ததைத் தூக்கிவிடும் என்பதை மறக்கக் கூடாது. 5-7 கிராம் உப்பை நாம் தினசரி சேர்க்கிறோம். அது அவசியமல்லாதது. உப்புச் சுவை அநேகமாய் எல்லாக் காய்கறிகளிலும் உள்ளது. ‘நான் இந்துப்பு, பாறையுப்பு, கறுப்பு உப்புதான் பயன்படுத்துகிறேன். இந்த அயோடைஸ்டு சோடியம் குளோரைடு உப்பு பயன்படுத்துவதில்லை’, என்று சொல்வோருக்கு ஒரு செய்தி. அவை அனைத்திலும்கூட, நல்ல பல நுண்ணியச் சத்துக்களோடு, சோடியம் குளோரைடும் உண்டு. மரபு உப்பென்றாலும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

No comments: