Tuesday 26 June 2018

ஆபத்தாகும் கல்லீரல் நோய்

ஆபத்தாகும் கல்லீரல் நோய்: அரசு கவனம் செலுத்துமா? தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கு.கணேசன் உ லக சுகாதார நிறுவனம் 2030-க்குள் ‘ஹெபடைடிஸ்’ (Hepatitis) எனும் கல்லீரல் நோயை உலக அளவில் ஒழித்துவிட வேண்டும் என்னும் முனைப்புடன் செயல்படுகிறது. ‘எளிதில் தடுத்துவிட முடியும்; ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியும்’ என்னும் நிலையில் உள்ள இந்நோயை, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் வளரவிட்டு வேடிக்கைபார்ப்பதாகக் குற்றம்சாட்டுகிறது, அந்நிறுவனம். இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ‘ஹெபடைடிஸ்-சி’ எனும் கல்லீரல் நோய் பாதிப்பு இருக்கிறது. இது, இங்குள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட ஆறு மடங்கு அதிகம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டுதோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் கல்லீரல் நோயால் இறக்கின்றனர். தொற்றுநோய் வரிசையில் காசநோய்க்கு அடுத்தபடியாக அதிகம் உயிர்ப் பலி கேட்கும் நோயாக இது வளர்ந்துவருகிறது. வருடத்துக்கு வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் உலக சுகாதார நிறுவனம், ‘காலத்தோடு இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் சுருக்க நோய் போன்ற கொடுமையான நோய்கள் இதன் பின்விளைவாக வருவதும் அதிகரித்துவிடும். அதன் விளைவால், இளமையில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அப்போது நாட்டின் பொது சுகாதாரத்துக்கு மட்டுமன்றி, பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்’ என்று எச்சரித்துள்ளது. உயிர்க்கொல்லி நோய்கள் கல்லீரல் அழற்சி ஆவதை ‘ஹெபடைடிஸ்’ என் கிறோம். பாக்டீரியா/வைரஸ் தொற்று, மது அருந்துவது, தேவையில்லாமல் மாத்திரை, மருந்துகளைச் சாப்பிடு வது போன்றவற்றால் கல்லீரல் அழற்சி ஆகிறது. இவற்றில் ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, ஈ எனும் வைரஸ் தொற்றுகளால் கல்லீரல் பாதிப்படைவதுதான் அதிகம். ஹெபடைடிஸ்-பி மற்றும் சி வைரஸ்களால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்குரிய சான்று. ஹெபடைடிஸ்-ஏ மற்றும் ஈ வைரஸ் தொற்றுகள் சுகாதாரமற்ற குடிநீரின் மூலமும் அசுத்தமான உணவு வழியாகவும் நமக்கு நோயைத் தருகின்றன. இவற்றால் மனித உயிருக்கு அவ்வளவாக ஆபத்தில்லை. ஆனால், ஹெபடைடிஸ்-பி, சி மற்றும் டி வைரஸ் தொற்றுகள் ஆபத்து மிகுந்தவை. இவை பரிசோதிக்கப்படாத ரத்தம் மூலமும், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்கள் வழியாகவும் அடுத்தவர்களுக்குப் பரவுகின்றன. கர்ப்பிணிக்கு / பாலூட்டும் தாய்க்கு இந்த நோய்கள் இருந்தால் குழந்தைக்கும் ஏற்படும். பாதுகாப்பற்ற/தகாத உடலுறவு மூலம் இவை மற்றவர் களுக்குப் பரவுகின்றன. இந்த நோய்களின் பொதுவான அறிகுறி மஞ்சள் காமாலை. பசி குறைவது, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அதீத களைப்பு, எலும்புகளில் கடுமையான வலி போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இவை எல்லாமே சில வாரங்களில் மறைந்து விடும். ஆனால், நோய் உள்ளுக்குள் மறைந்திருக்கும். தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமலேயே இந்த நோயாளிகள் மற்றவர்களுக்கும் பரப்புவார்கள். நாட்கள் ஆக ஆக இவர்களுக்குக் கல்லீரல் சுருங்கிப் புற்றுநோய் வரும். ஆகவேதான் இவற்றை ‘உயிர்க்கொல்லி நோய்கள்’ என்கிறோம். தடுக்க வழியுண்டா? சுத்தமான குடிநீரை அருந்துவது, சுகாதாரம் மிகுந்த உணவைச் சாப்பிடுவது ஆகியவற்றின் வழியாக ஹெபடைடிஸ்-ஏ மற்றும் ஈ வைரஸ் தொற்றுகளை எளிதில் தடுத்துவிடலாம். மேலும், ஹெபடைடிஸ்-ஏ, ஹெபடைடிஸ்-பி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கத் தடுப்பூசிகளும் உள்ளன. ஹெபடைடிஸ்-சி நோய்க்குத் தடுப்பூசி இல்லை என்றாலும், அதைப் பூரணமாகக் குணப்படுத்துவதற்கு நவீன மருத்துவத்தில் நல்ல மருந்துகள் வந்துள்ளன. ஆனால், சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சுமார் 95 % ஹெபடைடிஸ் நோயாளிகள் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமல் சிகிச்சைக்கே வராமல் இருக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்களிடம் இந்த நோய்கள் குறித்தும் தடுப்புவழிகள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும், நம் சுகாதார அமைப்புகள் அதிக கவனமாக இயங்கவில்லை என்பதையும்தான் இது வெளிப்படுத்துகிறது. அரசு என்ன செய்யலாம்? இன்றைய நிலையில் கல்லீரல் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசியத் திட்டங்கள் வலுவாக இல்லை என்பது நிதர்சனம். குழந்தைகள்கூடப் பாதிக்கப்படுகிறார்கள் எனும் நிலையில், இந்த நோய்க்கு எதிராக முனைப்புடன் போராட இந்தியா தயாராக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். இதற்கு முதல் படியாக, கல்லீரல் நோய்க்கான ‘முன்னறிதல் பரிசோதனை வசதி’களை (ஸ்க்ரீனிங் டெஸ்ட்) எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுக்க வழிசெய்வதும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதும், ஏற்கெனவே சிகிச்சையில் உள்ளவர்கள் அதைத் தொடர்ந்து எடுக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதும் மிக முக்கியம். மேலும், இந்த நோயுள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைத்து, வயிறு மற்றும் குடல்நோய் சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தால், நோய் முழுவதுமாகக் குணமாகும். அடுத்து, ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் மூலம் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, ஹெபடைடிஸ் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இவற்றுக்குள்ள தடுப்பூசிகளை எல்லோருக்கும் இலவசமாகப் போடுவது ஆகியவையும் இன்றைய அவசரத் தேவைகள். மக்களுக்குச் சுத்த மான குடிநீர் கிடைக்க வழிசெய்ய வேண்டியது மக்களாட்சி செய்யும் ஓர் அரசின் தார்மீகக் கடமை. ரத்தம் மற்றும் அதன் தொடர்பான பொருட்களை நோயாளி களுக்கு வழங்குவதில் எவ்வித முறைகேடுகளும் நேராமல் இருக்க ரத்த வங்கிகளை முறையான இடைவெளிகளில் சோதிப்பதும், நாட்டில் போலி மருத்துவர்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். இறுதியாக ஒன்று, ஹெபடைடிஸ்-சி நோய்க்கான மாத்திரை விலை மிகமிக அதிகம். இதனாலேயே பல நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதில்லை. இந்த நோயுள்ளவர்கள் அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டுமானால், இந்த மருந்தின் விலையைக் கட்டுப்படுத்துவதும், அரசு மருத்துவமனைகளில் எப்போதும் இது தாராளமாகக் கிடைக்க வழிசெய்வதும் அவசியம். இத்தனை வழி களையும் திறந்து வைத்தால்தான், 2030-க்குள் ‘ஹெபடைடிஸ்’ நோயை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க முடியும்; உலக சுகாதார நிறுவனத்தின் கனவும் நனவாகும். அதற்குத் தேவையான செயல் திட்டங்களைத் தேசிய அளவில் புதிதாகக் கொண்டுவந்து, போதுமான நிதியை ஒதுக்கி, அரசு இயந்திரங்கள் முனைப்புடன் செயல்பட மத்திய அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். மனது வைக்குமா மத்திய அரசு? - கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

கல்விச்சோலை - kalvisolai health tips

No comments: