Tuesday, 4 June 2019

பாலியல் தூண்டுதலை உருவாக்கும் ‘சாக்லேட்’

சாக்லேட்டை தான் சுவைத்து மகிழ்ந்த காலம் போய், தனக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கும் பரிசுப் பொருளாகவும் அது புது அவதாரம் எடுத்திருக்கிறது. அதனால் தங்கள் அன்பை வெளிப்படுத்த பிறந்த நாள், திருமண நாள் போன்றவை களுக்கு வாழ்த்துக்களோடு சாக்லேட் பரிசு வழங்குகிறார்கள்.

சாக்லேட் விற்பனையை தக்கவைத்துக்கொள்வதற்காக, அது பற்றி அவ்வப்போது ஏதாவது ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பெரும் அளவில் இருப்பதாகவும், ரத்த அழுத்தத்தை அது சீராக்கும் தன்மையை கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். ‘டார்க் சாக்லேட்’ உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதயத்திற்கு வலு சேர்ப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

உடலுக்கு உற்சாகம் தரும் ‘எண்டோர்பின்’ ஹார்மோனை, சாக்லேட் அதிகம் சுரக்கச் செய்கிறது. இது நரம்புகளை பலப்படுத்தி உத்வேகப்படுத்துகிறது. அந்த அடிப்படையில் சாக்லேட் குறிப்பிட்ட மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. அதில் இருக்கும் காபின் மூளையை சுறுசுறுப்பாக்கும். இ்ந்த ஒட்டுமொத்தமான செயல்பாடுகள் சாக்லேட் சாப்பிடும் ஆண் மற்றும் பெண்களிடம் பாலியல் தூண்டலையும் உருவாக்கும் என்றும் சொல்கிறார்கள்.

டார்க் சாக்லேட் ஒரு பார் சாப்பிட்டால் அதன் மூலம் உடலுக்கு 400 கலோரி கிடைக்கும். மதிய உணவுக்கு பிறகு சாக்லேட் சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அவர்கள் டார்க் சாக்லேட்டில் பாதி அளவு சாப்பிட விரும்புகிறார்கள் என்றால், தாங்கள் சாப்பிடும் உணவில் 200 கலோரியை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணவின் அளவு சமச்சீராக இருக்கும். போதுமான அளவு உணவு சாப்பிட்டுவிட்டு, அதற்கு மேல் சாக்லேட்டும் அதிக அளவில் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல. தேவைக்கு அதிகமான கலோரி உடலில் சேர்ந்துவிடும்.

வழக்கமான சாக்லேட்டில் பால், சர்க்கரை போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால் அதன் தன்மை மாறும். அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொருத்துதான் சாக்லேட்டின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. உலர் பழங்கள், வேர்க்கடலை, பாதாம், ஆரஞ்சுத் தோல் முதலியவை சேர்க்கப்பட்டிருந்தால் நல்லது. அதிக அளவு வெண்ணெய், சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால் அவை கோகோவின் நற்குணங்களை செயலிழக்கச் செய்துவிடும். அது உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதல்ல.

டார்க் சாக்லேட் இனிக்காது. சற்று கசக்கத்தான் செய்யும். கசப்பை போக்க அதனுடன் பால் சேர்க்கக்கூடாது. சேர்த்தால் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பலனளிக்காது. உடல் எடையை குறைக்கவும் சாக்லேட் பயன்படுகிறது. இதை கைதேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் பயன்படுத்தி, எடையை குறையச் செய்கிறார்கள். உடலில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், புதிய செல்களை உற்பத்தி செய்யவும் சாக்லேட் உதவுகிறது. சாக்லேட்டின் மூலப் பொருளை பயன்படுத்தி ‘கோகோ பட்டர் பாடி வேக்ஸ்’ போன்றவை தயாரிக்கப்பட்டு உடல் முழுவதும் மசாஜ் செய்கிறார்கள். இதன் மூலம் உடல் எடை குறைந்து, தசை இறுக்கமடைவதாக சொல் கிறார்கள். தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், சருமத்தின் நிறம் கூடும். பளபளப்பு, மென்மைத்தன்மை அதிகரிக்கும். கறுப்பாக இருப்பவர்கள் சருமத்தை பொலிவாக்க சாக்லேட் சாப்பிடுவதுண்டு.

சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் சாக்லேட் ஸ்க்ரப்பை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் கோகோவுடன், 4 ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் மில்க் கிரீம் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும் சிறந்த ஸ்கிரப் ஆகும்.

சிறிதளவு கோகோ பட்டருடன் தயிர் கலந்து ஒரு துண்டு வாழைப்பழத்தை மசித்து நன்றாக கிரீம் போல தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை முகம், கை கால்களில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். இதன் மூலம் முகம் பளபளப்புடன் ஜொலிக்கும்.

பாடி பாலிஷ்: கிண்ணத்தில் கோகோ பவுடர் சிறிதளவு எடுத்து, அதில் சிறிது உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து உடல் முழுவதும் பூசிவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் பளபளப்பாகும்.

சாக்லேட் வேக்ஸ்: இது கடைகளில் கிடைக்கும். இதனை உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம். உடலில் உள்ள பழைய செல்களை அகற்றி விட்டு புதிய செல்கள் உருவாக இந்த வகை மெழுகு உதவுகிறது.

சாக்லேட் ஸ்க்ரப்: இதுவும் சருமத்தின் தன்மைக்கேற்ப பலவிதங்களில் கடைகளில் கிடைக்கும். இந்த ஸ்க்ரப்கள் கொஞ்சம் ரவை போன்று தரியாக காணப்படும். இதனை தோலின் மேல்நோக்கி தேய்ப்பதன் மூலம் இறந்த செல்களை நீக்கிவிடலாம். தோலில் படிந்திருக்கும் கழிவுகளையும் நீக்கிவிட முடியும். இதனை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் தோல் வியாதிகள் வராது.

சாக்லேட்டில் காபின் உள்ளது. அது தேநீர், காபி, கோக் போன்றவற்றில் இருப்பதை விட மிகக் குறைந்த அளவே உள்ளது. சாக்லேட் பார், ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். அதில் பால் அல்லது வேறு பொருட்கள் கலந்து விட்டால் அதன் தரமும், ஆயுளும் குறைந்து போய்விடும்.

1842-ம் ஆண்டு் இங்கிலாந்தில் கேட்பரி என்பவர் முதன் முதலில் சாக்லேட் பார்களை தயாரித்தார். அதற்கு முன் அதை பானமாகத்தான் பருகி வந்தார்கள். உலகில் அதிகமாக டார்க் சாக்லேட் சாப் பிடுபவர்கள் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த சாக்லேட் சாப்பிடுவதால் ஹார்மோன்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பது பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளது. 28 கிராம் டார்க் சாக்லேட் மூலம் உடலுக்குத் தேவையான 10 சதவீத இரும்புச் சத்தை பெறலாம். சாக்லேட் சாப்பிடுபவர்கள் உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். சராசரியாக 15 பேரில் 10 பேர் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். அமெரிக்க நிறுவனங்களில் ஊழியர்கள் உற்சாகமாக பணிபுரிவதற்காக அவர்களுக்கு சாக்லேட் விநியோகிக்கும் வழக்கம் இருக்கிறது.

கோகோ மரம்

சாக்லேட்டின் மூலப்பொருளாக இருப்பவை, கோகோ விதைகள். இவை கோகோ மரத்தில் இருந்து கிடைக்கின்றன. கோகோ மரம் வருடத்திற்கு 20 முதல் 50 பழங்களை அளிக்கும். ஒவ்வொரு பழமும் சுமார் அரை கிலோ எடை கொண்டது. அதன் மேல் பகுதி முதலில் பச்சையாகவும், பின்பு மஞ்சளாகவும், இறுதியில் செம்பழுப்பு நிறமாகவும் மாறுகிறது. ஒவ்வொரு பழத்தின் உள்ளும் 30 விதைகள் வரை இருக்கும். இவைதான் சாக்லேட் தயாரிப்பிற்கு மூல பொருளாக இருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் கோகோ விதைகள் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மெக்சிகோ கோகோவின் தாயகமாகும். 

Sunday, 31 March 2019

புரதமும்.. நாற்பதும்..

40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல் பருமன் பிரச்சினையும் ஏற்படும். அத்தகைய பாதிப்புகளை தடுப்பதற்கு புரதம் அவசியமானது. 40 வயதை கடந்தவர்கள் தினமும் தங்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் என்ற அளவிலாவது புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளையும், எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் புரதத்தின் பங்களிப்பு முக்கியமானது. அசைவ பிரியர்கள் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தினமும் இரு வேளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை பிரியர்கள் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. சைவம் சாப்பிடுபவர்கள் சோயா பொருட்கள் மற்றும் பால் பொருட்களை அதிகம் சாப்பிடலாம். அதில் புரதம் அதிகம் கலந்திருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கலந்த பொருட்களையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் நல்ல கொழுப்பு சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதற்கு உதவி செய்யும். மேலும் நீரிழிவு பிரச்சினையில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவும். விரைவிலேயே வயதான தோற்றம் உருவாகுவதையும் தடுக்கும். அதுபோல் வைட்டமின் ஏ, சி. இ, கால்சியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்களும் 40 வயதை கடந்தவர்களுக்கு அவசியம். அவை சூரிய கதிர்வீச்சுகளின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கும். வயதான தோற்ற பொலிவையும் தவிர்க்க உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண் களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை தோன்றுவதால் இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடும் குறைந்துபோய்விடும். அதனால் ஹார்மோன் மற்றும் தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ப உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 40 வயதை கடந்த ஆண்களை விட பெண்களுக்குத்தான் தசை இயக்கங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் முறையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதும் அவசியமானது.

கல்விச்சோலை - kalvisolai health tips

Saturday, 22 December 2018

மனச்சிதைவைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு

மனச்சிதைவு நோயைக் குணப்படுத்த ரஷிய ஆய்வாளர்கள் புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். மனநலப் பாதிப்புகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், ரஷியாவில் உள்ள பாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி பெற்றுள்ளனர். டிஏஏஆர்1 என இப்போதைக்கு குறியீட்டுப் பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்தை ஆய்வுக்கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்திப் பரிசோதித்தனர். அதற்கு எதிர்வினையாக எலிகளின் மூளைப்பகுதியில் உள்ள நரம்பியல் பகுதியில் சில மாற்றங்கள் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து வெளியிடுவதன் மூலம் மனச்சிதைவு, வெறிநோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக இந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஏலியா சுக்னோவ் தெரிவித்திருக்கிறார்.

கல்விச்சோலை - kalvisolai health tips

ரத்தம் உறையாமை நோய்

உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போது உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிரை பறிக்கும் பிரச்சினை. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய் ஆகும்.

உடலுக்குள் ரத்த குழாய்க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் உறையாமலே இருக்கும் பிரச்சினை தான் ஹீமோபீலியா. பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்த நோய், பரம்பரை சம்பந்தப்பட்டது.

பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்த நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்த நோய் உள்ளவர் கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்த நோய் உள்ளவர்கள் வலி நிவாரண மருந்துகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். இது ஆண்கள் உடலில் xy குரோமோசோம் களாகவும், பெண்கள் உடலில் xx குரோமோசோம்களாகவும் இருக்கும். x குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே இந்த நோய்க்கு முதன்மை காரணம். ஒரு x கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க முடியாது.

இரண்டு xx கொண்ட பெண்களுக்கு ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு x உள்ள மரபு பண்புகளைக் கொண்டு ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவும் பெண் என்பதால் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் இவரது சந்ததியை அது பாதித்தது.

அவருக்கு வந்ததோ மிக மோசமான ஹீமோபீலியா பி நோய் வகை. இவரது ஐந்து குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் மூலம், அரச வம்சத்து ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் பரவ விக்டோரியா காரணமாக இருந்தார். இதனால் இது அரச நோய் என்ற பெயரையும் பெற்றது. ரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு. அடிபடாமல் கவனமாக இருந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம்.

ரத்த உறவில் திருமணம் செய்வதால் தான் இந்த நோய் அதிகம் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மரபணுவில் உள்ள இந்தச் சிக்கல், ரத்த சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் மூலமே பரவுகிறது. மரபணு காரணமாவதால் இந்த நோய்க்குத் தீர்வு இல்லை. ஆனால், இதைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Saturday, 1 December 2018

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை முடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலில் உருவாகும் புற்றுநோய் திசுக்களை எதிர்த்துச் சண்டையிட்டு முறியடிக்கும் ஒருவித செல்கள், உடல் பருமன் அதிகமுள்ளவர்களின் உடல், கொழுப்புகளால் அடைக்கப்படுவதால், அவற்றின் செயல்பாடு நின்று புற்றுநோய் ஏற்படுவதாக அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் புற்றுநோயை உண்டாக்கும், அதேவேளையில் தடுக்கும் வாய்ப்புள்ள புற்றுநோய்க்கான காரணிகளில் புகைப்பழக்கத்தை அடுத்து உடல்பருமன் இரண்டாவது இடத்தை வகிப்பதாக அந்நாட்டின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் புற்றுநோய் தாக்கும் 20 பேரில் ஒருவர் அல்லது ஓராண்டுக்கு 22 ஆயிரத்து 800 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக அதிகப்படியான உடல் பருமன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலில் பெரும்பகுதியை கொழுப்பு அடைத்துக்கொண்ட பிறகு அது உடலில் உள்ள செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி, புற்றுநோயை உண்டாக்குகிறதா, புற்றுநோய் அணுக்களை அதிகரிக்கிறதா என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தனர்.

இந்நிலையில், உடல்பருமன் அதிகமுள்ளவர்களின் கொழுப்பு எவ்வாறு புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது என்பதை டிரினிட்டி கல்லூரி விஞ்ஞானிகள் ‘நேச்சர் இம்யூனாலஜி’ இதழில் விளக்கியுள்ளனர்.

ஒவ்வொருவரின் உடலிலும் இயற்கையாக அமைந்துள்ள புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை அவற்றைப் பாதிக்கும் கொழுப்புகளிடம் இருந்து காப்பாற்றி அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் மருந்துகளை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

‘‘இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்கும் சேர்மத்தைப் பரிசோதித்துப் பார்த்தோம். நாங்கள் நினைத்தவாறே அதை முற்றிலும் அழிக்க முடிந்தது’’ என்று பேராசிரியர் லிடியா லிஞ்ச் கூறுகிறார்.

‘‘புற்றுநோய் அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துவதைவிட உடல் எடையைக் குறைப்பது மற்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கு உதவும் சிறந்த வழி’’ என்றும் அவர் கூறுகிறார்.

‘‘13 வகையான புற்றுநோய் ஏற்பட உடல் பருமனே காரணமாக உள்ளது என்று நமக்குத் தெரிந்தாலும், உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து இதுவரை தெளிவான பதில்கள் கிடைத்திருக்கவில்லை’’ என்று இங்கிலாந்தின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் லியோ கார்லின் கூறுகிறார்.

‘‘கொழுப்பு மூலக்கூறுகள் எவ்வாறு நோய் எதிர்ப்பு அணுக்களை தனது புற்றுநோய் தடுப்புச் செயல்பாட்டை மேற்கொள்ளவிடாமல் தடைசெய்கிறது என்பதையும், அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான புதிய வழிவகைகளையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்குக் காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் உண்டாவதற்கு புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது, உடல் உழைப்பு இல்லாமை ஆகிய ஐந்து காரணிகளே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22 சதவீதம் பேரின் பாதிப்புக்குக் காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைபிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.

உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்குக் காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்கள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புற்றுநோய் பல உறுப்புகளில் ஏற்பட்டாலும், நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் இந்நோய் உண்டாகிறது.

கல்விச்சோலை - kalvisolai health tips