'ஆர்கானிக்': அறிய வேண்டிய 6 விஷயங்கள் | தற்போது, ஆரோக்கியம் காக்கும் உணர்வு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது, அதனால், 'ஆர்கானிக் புட்ஸ்' எனப்படும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகள் மீதான ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. நச்சுக்கொல்லிகள், செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படாமல் விளைவிக்கப்படுவதாகக் கூறப்படும் இயற்கை உணவுகளை சற்றுக் கூடுதல் விலை கொடுத்தும் வாங்க மக்கள் இப்போது தயங்குவதில்லை. ஆனால் நாம் இயற்கை உணவை வாங்கும்முன், கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள் இருக்கின்றன. அவை பற்றி... 'முழுமையாக' நம்பத் தேவையில்லை ஓர் உணவுப்பொருள், 'ஆர்கானிக்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே அதை நூறு சதவீதம் இயற்கை உணவு என்று நம்பத் தேவையில்லை. குறிப்பிட்ட உணவுப்பொருள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தப்படாமல் விளைவிக்கப்பட்டிருக்கலாம்தான். ஆனால் அந்த உணவுப்பொருளை விளைவிப்பதற்காக பாய்ச்சப்பட்ட தண்ணீரில் வேதித் தன்மை இருக்கலாம். குறிப்பிட்ட இயற்கை வேளாண் பண்ணை அல்லது வயலின் அருகே உள்ள பண்ணையில் இயற்கை வேளாண் நடைமுறை பின்பற்றப்படாமல், அதுவும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். '100 சதவீதம் ஆர்கானிக்' என்று அறுதியிட்டுக் கூறும் உணவுப்பொருட்கள்தான் உண்மையான இயற்கை வேளாண் உணவுப்பொருளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. தோற்றத்தைக் கவனியுங்கள் 'ஆர்கானிக்' முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறியோ, பழமோ, தானியமோ எதுவாக இருந்தாலும் ஒரே சீராக, அதிக பளபளப்பாக இருக்காது. காரணம், இயற்கையில் ஒவ்வொரு சிறு விஷயமும் தனித்தன்மையானதுதான். வர்த்தகரீதியில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும், செயற்கைப் பொலிவு ஏற்றப்படும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள்தான் ஒரே மாதிரியான தோற்றம், அளவிலும், சிறு புள்ளி கூட இல்லாமல் 'பளிச்'சென்றும் இருக்கும். நல்ல நறுமணம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, மரபணு மாற்றம் செய்யப்படாத பழங்கள், நல்ல நறுமணம் கொண்டிருக்கும். மணம் இல்லாதிருந்தால் அல்லது குறைவாக இருந்தால், 'ஆர்கானிக்' இல்லை என்று அறியுங்கள். நமது உடல்நலத்தை மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை என்ற எண்ணத்தில் நீங்கள் இயற்கை விளைபொருட்களை தேர்வு செய்பவராக இருந்தால், ஒரு நிமிடம் பொறுங்கள். எங்கோ தொலைதூரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு உங்கள் இடத்துக்குக் கொண்டு வரப்படும் 'ஆர்கானிக்' உணவுப்பொருள், போக்குவரத்தின் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு ஒருவகையில் காரணமாக இருந்திருக்கும். எனவே அதற்குப் பதில், உள்ளூரில் சாதாரண முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருளே மேல். வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அதிகமில்லை இயற்கை உணவுகளில் வேதிப்பொருட்கள் இல்லாததாலேயே அது ஆரோக்கியமானதாகத் திகழ்கிறது. மற்றபடி அதில் வழக்கமான அளவில்தான் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் இருக்குமே தவிர, இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் சத்துகள் கூடுவதில்லை. உடனடி உணவுப்பொருட்கள் சமைக்காமல் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களில், உதாரணமாக, 'ஜாமில்' பயன்படுத்தப்பட்ட பழம், 'கெட்சப்'பில் பயன்படுத்தப்பட்ட தக்காளி போன்றவை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஒரு நிமிடம் யோசியுங்கள். அவை கெட்டுப் போகாமல் இருக்கவும், சுவை, நிறம் கூட்டவும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். அந்நிலையில், அவற்றை முழுமையான 'ஆர்கானிக்' பொருட்கள் என்று கூறமுடியாது. என்ன, 'ஆர்கானிக்' பிரியர்களே, இனிமேல் இந்த விஷயங்களை கவனத்தில்கொள்வீர்கள்தானே?