Saturday 17 December 2016

வாழைப்பழம் வழங்கும் நன்மைகள்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம், சத்துகள் நிறைந்த பழமாகத் திகழ்கிறது. பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கு இது தீர்வு அளிக்கிறது. பழுத்த வாழைப்பழம், பழுக்காத வாழைப்பழத்தைவிட நார்ச்சத்து மிகுந்த ஆகாரமாகவும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்ததாகவும் உள்ளது. பழுத்த வாழைப்பழம், அதிக வைட்டமின்களையும், புரதங்களையும், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடென்டுகளையும் அளிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நன்கு பழுத்த வாழைப்பழங்களின் மீது காணப்படும் கரும்புள்ளிகள், டி.என்.எப். எனப்படும் டியூமர் நேசிரோசிஸ் பாக்டர் எனப்படும் ஒரு வேதிப்பொருளை உருவாக்குகின்றன. இது புற்றுச் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. சாதாரணமாக ஒரு வாழைப்பழம் குறைந்தது சுமார் .55 மில்லிகிராம் அளவு வைட்டமின் பி 6-ஐ கொண்டுள்ளது. இது ஒரு வளர்ந்த மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் வைட்டமின் பி 6 அளவில் 42 சதவீதம் ஆகும். தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வருவது, ருமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஒரு பழுத்த வாழைப்பழத்தில், சக்திவாய்ந்த எலும்புகளையும், தசைகளையும் உற்பத்தி செய்ய மனித உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவீதம் உள்ளது. தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவந்தால் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி, எலும்புச்சிதைவு மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். இவை தவிர, பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள், சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும் தடுக்கும். தினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.