Tuesday, 10 July 2018

குழந்தையின்மைக்கு தைராய்டு காரணமா?

உடல் பருமன், நமது உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில், தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது. தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும். அதேபோல குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணம் என்று சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாலோ, குறைவாலோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களாலோ பெண்கள் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Tuesday, 26 June 2018

ஆபத்தாகும் கல்லீரல் நோய்

ஆபத்தாகும் கல்லீரல் நோய்: அரசு கவனம் செலுத்துமா? தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கு.கணேசன் உ லக சுகாதார நிறுவனம் 2030-க்குள் ‘ஹெபடைடிஸ்’ (Hepatitis) எனும் கல்லீரல் நோயை உலக அளவில் ஒழித்துவிட வேண்டும் என்னும் முனைப்புடன் செயல்படுகிறது. ‘எளிதில் தடுத்துவிட முடியும்; ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியும்’ என்னும் நிலையில் உள்ள இந்நோயை, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் வளரவிட்டு வேடிக்கைபார்ப்பதாகக் குற்றம்சாட்டுகிறது, அந்நிறுவனம். இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ‘ஹெபடைடிஸ்-சி’ எனும் கல்லீரல் நோய் பாதிப்பு இருக்கிறது. இது, இங்குள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட ஆறு மடங்கு அதிகம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டுதோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் கல்லீரல் நோயால் இறக்கின்றனர். தொற்றுநோய் வரிசையில் காசநோய்க்கு அடுத்தபடியாக அதிகம் உயிர்ப் பலி கேட்கும் நோயாக இது வளர்ந்துவருகிறது. வருடத்துக்கு வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் உலக சுகாதார நிறுவனம், ‘காலத்தோடு இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் சுருக்க நோய் போன்ற கொடுமையான நோய்கள் இதன் பின்விளைவாக வருவதும் அதிகரித்துவிடும். அதன் விளைவால், இளமையில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அப்போது நாட்டின் பொது சுகாதாரத்துக்கு மட்டுமன்றி, பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்’ என்று எச்சரித்துள்ளது. உயிர்க்கொல்லி நோய்கள் கல்லீரல் அழற்சி ஆவதை ‘ஹெபடைடிஸ்’ என் கிறோம். பாக்டீரியா/வைரஸ் தொற்று, மது அருந்துவது, தேவையில்லாமல் மாத்திரை, மருந்துகளைச் சாப்பிடு வது போன்றவற்றால் கல்லீரல் அழற்சி ஆகிறது. இவற்றில் ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, ஈ எனும் வைரஸ் தொற்றுகளால் கல்லீரல் பாதிப்படைவதுதான் அதிகம். ஹெபடைடிஸ்-பி மற்றும் சி வைரஸ்களால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்குரிய சான்று. ஹெபடைடிஸ்-ஏ மற்றும் ஈ வைரஸ் தொற்றுகள் சுகாதாரமற்ற குடிநீரின் மூலமும் அசுத்தமான உணவு வழியாகவும் நமக்கு நோயைத் தருகின்றன. இவற்றால் மனித உயிருக்கு அவ்வளவாக ஆபத்தில்லை. ஆனால், ஹெபடைடிஸ்-பி, சி மற்றும் டி வைரஸ் தொற்றுகள் ஆபத்து மிகுந்தவை. இவை பரிசோதிக்கப்படாத ரத்தம் மூலமும், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்கள் வழியாகவும் அடுத்தவர்களுக்குப் பரவுகின்றன. கர்ப்பிணிக்கு / பாலூட்டும் தாய்க்கு இந்த நோய்கள் இருந்தால் குழந்தைக்கும் ஏற்படும். பாதுகாப்பற்ற/தகாத உடலுறவு மூலம் இவை மற்றவர் களுக்குப் பரவுகின்றன. இந்த நோய்களின் பொதுவான அறிகுறி மஞ்சள் காமாலை. பசி குறைவது, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அதீத களைப்பு, எலும்புகளில் கடுமையான வலி போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இவை எல்லாமே சில வாரங்களில் மறைந்து விடும். ஆனால், நோய் உள்ளுக்குள் மறைந்திருக்கும். தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமலேயே இந்த நோயாளிகள் மற்றவர்களுக்கும் பரப்புவார்கள். நாட்கள் ஆக ஆக இவர்களுக்குக் கல்லீரல் சுருங்கிப் புற்றுநோய் வரும். ஆகவேதான் இவற்றை ‘உயிர்க்கொல்லி நோய்கள்’ என்கிறோம். தடுக்க வழியுண்டா? சுத்தமான குடிநீரை அருந்துவது, சுகாதாரம் மிகுந்த உணவைச் சாப்பிடுவது ஆகியவற்றின் வழியாக ஹெபடைடிஸ்-ஏ மற்றும் ஈ வைரஸ் தொற்றுகளை எளிதில் தடுத்துவிடலாம். மேலும், ஹெபடைடிஸ்-ஏ, ஹெபடைடிஸ்-பி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கத் தடுப்பூசிகளும் உள்ளன. ஹெபடைடிஸ்-சி நோய்க்குத் தடுப்பூசி இல்லை என்றாலும், அதைப் பூரணமாகக் குணப்படுத்துவதற்கு நவீன மருத்துவத்தில் நல்ல மருந்துகள் வந்துள்ளன. ஆனால், சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சுமார் 95 % ஹெபடைடிஸ் நோயாளிகள் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமல் சிகிச்சைக்கே வராமல் இருக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்களிடம் இந்த நோய்கள் குறித்தும் தடுப்புவழிகள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும், நம் சுகாதார அமைப்புகள் அதிக கவனமாக இயங்கவில்லை என்பதையும்தான் இது வெளிப்படுத்துகிறது. அரசு என்ன செய்யலாம்? இன்றைய நிலையில் கல்லீரல் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசியத் திட்டங்கள் வலுவாக இல்லை என்பது நிதர்சனம். குழந்தைகள்கூடப் பாதிக்கப்படுகிறார்கள் எனும் நிலையில், இந்த நோய்க்கு எதிராக முனைப்புடன் போராட இந்தியா தயாராக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். இதற்கு முதல் படியாக, கல்லீரல் நோய்க்கான ‘முன்னறிதல் பரிசோதனை வசதி’களை (ஸ்க்ரீனிங் டெஸ்ட்) எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுக்க வழிசெய்வதும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதும், ஏற்கெனவே சிகிச்சையில் உள்ளவர்கள் அதைத் தொடர்ந்து எடுக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதும் மிக முக்கியம். மேலும், இந்த நோயுள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைத்து, வயிறு மற்றும் குடல்நோய் சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தால், நோய் முழுவதுமாகக் குணமாகும். அடுத்து, ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் மூலம் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, ஹெபடைடிஸ் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இவற்றுக்குள்ள தடுப்பூசிகளை எல்லோருக்கும் இலவசமாகப் போடுவது ஆகியவையும் இன்றைய அவசரத் தேவைகள். மக்களுக்குச் சுத்த மான குடிநீர் கிடைக்க வழிசெய்ய வேண்டியது மக்களாட்சி செய்யும் ஓர் அரசின் தார்மீகக் கடமை. ரத்தம் மற்றும் அதன் தொடர்பான பொருட்களை நோயாளி களுக்கு வழங்குவதில் எவ்வித முறைகேடுகளும் நேராமல் இருக்க ரத்த வங்கிகளை முறையான இடைவெளிகளில் சோதிப்பதும், நாட்டில் போலி மருத்துவர்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். இறுதியாக ஒன்று, ஹெபடைடிஸ்-சி நோய்க்கான மாத்திரை விலை மிகமிக அதிகம். இதனாலேயே பல நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதில்லை. இந்த நோயுள்ளவர்கள் அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டுமானால், இந்த மருந்தின் விலையைக் கட்டுப்படுத்துவதும், அரசு மருத்துவமனைகளில் எப்போதும் இது தாராளமாகக் கிடைக்க வழிசெய்வதும் அவசியம். இத்தனை வழி களையும் திறந்து வைத்தால்தான், 2030-க்குள் ‘ஹெபடைடிஸ்’ நோயை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க முடியும்; உலக சுகாதார நிறுவனத்தின் கனவும் நனவாகும். அதற்குத் தேவையான செயல் திட்டங்களைத் தேசிய அளவில் புதிதாகக் கொண்டுவந்து, போதுமான நிதியை ஒதுக்கி, அரசு இயந்திரங்கள் முனைப்புடன் செயல்பட மத்திய அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். மனது வைக்குமா மத்திய அரசு? - கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday, 24 June 2018

மூக்கு அழகும் முக்கியம்!

உடல் அழகை மேம்படுத்துவதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. ஒருசிலர் மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் படர்ந்திருக்கும். அழுக்குகள் சேர்ந்தும் அவதிக்குள்ளாக்கும். அது முக அழகுக்கு பங்கம் விளைவிக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் சற்று ஆறியதும் அதனை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும். அகன்ற போர்வையை தலையில் மூடி முகத்தில் நீராவி படியும்படி ஆவி பிடிக்க வேண்டும். நீராவியால் சருமத்திற்கு எரிச்சலோ, காயமோ ஏற்பட்டு விடக் கூடாது. 10-15 நிமிடங்கள் தொடர்ந்து நீராவியை மூக்கு பகுதியில் நுகர்ந்துவிட்டு டவலால் துடைக்க வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் மூக்குப் பகுதி சுத்தமாக இருக்கும். மூக்கில் படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் குழைத்து மூக்கில் பசை போல் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும். மூக்கு பகுதியில் உள்ள அழுக்குகள் அகன்றுவிடும். கரும்புள்ளிகளும் மறையத் தொடங்கும். பேக்கிங் சோடாவுடன் வினிகரும் சேர்த்து பயன்படுத்தலாம். மூக்கில் ஆங்காங்கே தென்படும் கருப்பு நிற புள்ளிகளை போக்குவதற்கு ஓட்ஸையும் உபயோகிக்கலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸுடன் மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை மூக்கின் மேல் பூசி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். ஓட்ஸுடன் தக்காளி, தேனையும் பயன்படுத்தலாம். 4 தக்காளி பழங்களை ஜூஸாக்கி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு ஓட்ஸ் கலந்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். வாரம் ஒரு முறை செய்து வந்தால் போதும். மூக்கு பொலிவுடன் காட்சியளிக்கும். முட்டையின் வெள்ளைக்கருவை மூக்கில் விரல்களால் அழுத்தி தடவ வேண்டும். அது உலர்ந்ததும் மீண்டும் ஒருமுறை வெள்ளைக்கருைவ பூச வேண்டும். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். இரண்டு வாரம் தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகளுக்கு தீர்வு காணலாம்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Saturday, 23 June 2018

‘தலை’ காக்கும் பொடு‘தலை!’

‘தலை’ காக்கும் பொடு‘தலை!’ டாக்டர் வி. விக்ரம் குமார் வேதி களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கத்துக்கு முன்பு, வயல் வரப்புகளில் நிறைய சிறுசிறு மூலிகைகள் நிரம்பியிருந்தன. தற்போது அவற்றில் பெரும்பாலானவை காணாமல் போய்விட்டன. வேதிப்பொருட்களின் வீரியத்தைத் தாண்டி சில மூலிகைகள் வளர்ந்தாலும், அவற்றைக் களைச் செடிகள் என்று மக்கள் பிடுங்கி எறிந்துவிடுகின்றனர். அவ்வாறு பலராலும் தவறாகக் கருதப்படக்கூடிய மூலிகைதான் ‘பொடுதலை’. நோய்க்கான தீர்வைத் தனது பெயரிலேயே பொதிந்து வைத்திருக்கும் மூலிகை இது. தலையில் அரிப்புடன், வெள்ளை நிறப் பொக்கு உதிரும் பொடுகுத் தொல்லைக்கான அற்புதமான மருந்து பொடுதலை தாவரத்தில் இருக்கிறது. பெயர்க் காரணம்: பொடுகுத் தொந்தரவுக்கு இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பயன்படுவதால், ‘பொடுதலை’ எனும் பெயர் உருவானது. பொடுதிலை, பூற்சாதம், பூஞ்சாதம் ஆகிய வேறு பெயர்களும் பொடுதலைக்கு உண்டு. நீர் நிறைந்த பகுதிகளிலும் மழைக்காலத்திலும் தாராளமாக வளர்ந்து கிடக்கும் தரைபடர் பூண்டு வகை பொடுதலை. அடையாளம்: தண்டு முழுவதும் சிறிய ரோம வளரிகள் காணப்படும். விளிம்புகளில் வெட்டுகள் கொண்ட சிறிய இலைகளை உடையது. காயானது திப்பிலிபோல இருந்தாலும், அளவில் சிறியதாக இருக்கும். கணுப்பகுதியில் வேர் உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். கருஞ்சிவப்புடன் வெண்ணிறம் கலந்த அழகான மலர்களை உடையது. ‘வெர்பினாசியே’ (Verbenaceae) குடும்பத்தைச் சார்ந்த பொடுதலையின் தாவரவியல் பெயர் ‘ஃபைலா நோடிஃபுளோரா’ (Phyla nodiflora). டிரைடெர்பினாய்ட்ஸ் (Triterpenoids), நோடிஃபுளோரிடின் (Nodifloridin), லிப்பிஃபுளோரின் (Lippiflorin), ரூடின் (Rutin) போன்ற வேதிப்பொருட்களும் இருக்கின்றன. உணவாக: மூல நோய்க்கு இதன் இலையை நெய்யில் வதக்கி, உளுத்தம் பருப்பு சேர்த்துத் துவையலாகச் சாப்பிடலாம். மலமும் சிரமமின்றி வெளியேறும். இதன் இலைகளோடு சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட, சிறுநீர் எரிச்சல் குறையும். பழைய அரிசியுடன், இதன் காயைச் சேர்த்து ஒரு கொதி மட்டும் வேகவைத்து, பின் வெந்த அரிசியைக் காயவைத்து நொய்யாக்கி, வயிறு மந்தத்துடன் அவதிப்படும் குழந்தைகளுக்குக் கஞ்சியாக்கிக் கொடுக்க பலன் கிடைக்கும். பொடுதலை இலைகளுடன் புதினா, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துத் துவையல்போலச் செய்து, சோற்றுடன் பிசைந்து சாப்பிட சுவாசக் கோளாறுகள் மறையும். மருந்தாக: தோலில் ஏற்படும் கருநிறத் திட்டுகளை (Hyper pigmentation) குறைப்பதற்குப் பொடுதலை பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மெலனின் உற்பத்தியைத் தேவையான அளவுக்கு பொடுதலை முறைப்படுத்தும், பதற்றத்தைச் சாந்தப்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பது (Anxiolytic), கொசுப்புழுக்களை அழிக்கும் தன்மை போன்ற திறன்களும் பொடுதலைக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டு மருந்தாக: வறுத்த ஓமத்துடன் பொடுதலையைச் சேர்த்தரைத்து, நீர்விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, ஒரு சங்கு அளவு கொடுக்க, குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல், வயிற்றுவலி ஆகியவை கட்டுப்படும். பொடுதலைக் காயோடு மஞ்சள் சேர்த்து மையாக அரைத்து, அடிப்பட்ட புண்கள், கட்டிகள் மீது தடவலாம். சிறு கட்டிகளுக்கு, பொடுதலையைச் சிறிது நீர்விட்டு மசித்துக் கட்டலாம். பொடுதலையின் காய், இலையை இடித்துச் சாறு பிழிந்து, சம அளவு நல்லெண்ணெய் கூட்டி, சிறிது மிளகுத் தூள் சேர்த்து வெயிலில் வைத்து நன்றாக சுண்டச் செய்து, சாறு முழுவதும் வற்றியபின் எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். பொடுகுத் தொந்தரவு இருப்பவர்கள் இந்தத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்துவர பொடுகு, தடமின்றி மறையும். மேலும் முழுத் தாவரத்திலிருந்து சாறு எடுத்துபின், நல்லெண்ணெய் கூட்டி அடுப்பில் வைத்துக் காய்ச்சி, இறுதியில் மிளகுத் தூள் சேர்த்தும் கூந்தல் தைலமாகப் பயன்படுத்தலாம். பூஞ்சைத் தொற்றுக்களை எதிர்க்கும் ஆற்றல் பொடுதலைக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘தலை’க்கு வந்த நோயை விரட்டுவதால், மூலிகைக் குழுவுக்கு ‘தலை’மையேற்கும் பொறுப்பை பொடு‘தலை’க்கு வழங்கியுள்ளது இயற்கை எனச் சொல்லலாம்!

கல்விச்சோலை - kalvisolai health tips

யோகாவில் கரையும் சர்க்கரை!

யோகாவில் கரையும் சர்க்கரை! மருத்துவர் கு. சிவராமன் இந்தியாவில் பிறந்து இன்று உலகெங்கும் கோலோச்சிக்கொண்டிருக்கிறது, யோகா! சர்வதேச அளவில் யோகா, தியானம் போன்றவை கவனம் பெற்றதற்கு மகரிஷி மகேஷ் யோகி, பி.கே.எஸ். அய்யங்கார் போன்ற யோக ஆசான்கள் முக்கியக் காரணம். இவர்கள் தொடங்கி, உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகாவைக் கொண்டு சேர்த்தவர்கள் ஆன்மிகத்தின் வழி ஆரோக்கியம் பேசியவர்கள்தான். தமிழகத்தின் தென் எல்லையிலிருந்து ஹரித்வாருக்குச் சென்ற பத்தமடை சிவானந்த சுவாமிகள்தான், அதுவரை ஞான வழித்தேடலில் சென்றோருக்கு மட்டுமே இருந்த யோகக் கலையை, சாமானியனின் நலத்துக்காக வடிவமைத்தும் பரிந்துரைத்தும் செய்த ஆன்மிகக் குருக்களுள் முக்கியமானவர் எனலாம். எமனை விரட்டும் ஓகம் யோகா என்றவுடன் பதஞ்சலி முனிவரின் பங்களிப்பு இன்று அதிகம் பேசப்படுகிறது. அவர் மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த மூத்த 18 சித்தர்களுள் ஒருவரான திருமூலரும் ‘ஓகக் கலை’யை மிக நுட்பமாகப் பேசியிருக்கிறார். ‘காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்குக் கூற்றை உதைக்கும் குரியதுவாமே’ என பூரகம் - இரேசகம்- கும்பகத்தைக் கணக்கிட்டுப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்தால், எமனை உதைத்து விரட்டலாம் எனப் பொருள் கொண்ட திருமூலரின் ஓகப் புரிதல்கள், சித்த மருத்துவத் தத்துவங்களோடு நெடுங்காலம் நம்மோடு இருந்து வருபவை. ஓகம், காயகல்பம் எனும் சித்த மருத்துவத் துறையின் மிக முக்கியமான பயிற்சியும்கூட. கட்டுப்படும் நீரிழிவு யோகாவைக் கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இயலுமா என்றால், ‘ஆம்’ என்கின்றன பல ஆய்வு முடிவுகள். எந்த அளவில் உள்ள நீரிழிவு நோயாளிக்கு? நீரிழிவு நோயின் மற்ற சிக்கல்களுக்கு எப்படிப் பயனளிக்கும்? நீரிழிவு வராது தடுக்க உதவுமா? நீரிழிவு நோயரின் மன உளைச்சலைத் தவிர்க்குமா? எல்லா நீரிழிவு நோயரையும் வருத்தும் சோர்வை நீக்குமா எனப் பல தளங்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ‘ஜர்னல் ஆஃப் டயாபட்டீஸ் ரிசர்ச்’ எனும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ இதழில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் யோகாவின் பங்கு குறித்த கட்டுரை சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளில் மிக முக்கியமானது (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4691612/). இக்கட்டுரை உலகெங்கும் யோகாவில் நடைபெற்ற ஆய்வுகள் பலவற்றையும் தொகுத்து, அந்த ஆய்வுக் கட்டுரைகளின் போக்கு, நம்பகத்தன்மை, அவை எல்லாவற்றின் ஒருமித்த முடிவுகள் என்ன என அலசி ஆய்ந்து சொல்கிறது. வர்ஜீனியா பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் தேசிய மாற்று மருத்துவமுறை கவுன்சிலும் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவாக, ‘யோகா பண்ணுங்கப்பா… சர்க்கரையும் கட்டுப்படும். சர்க்கரையால் பின்னாளில் சிறுநீரக, இதய சங்கடங்கள் வருவதும் கணிசமாய்த் தடுக்கப்படும்’ என அறிவித்துள்ளது. 2,170 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை எல்லாம் அலசி ஆராய்ந்துதான், யோகாவின் பயன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பட்டியல் பார்த்துப் பயிற்சி யோகா, கணையத்தில் தொய்வடைந்த பீட்டா செல்களைத் தூண்டுவதையும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸைச் சீராக்குவதையும் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கூடவே மிக முக்கியமாக டீலாமரேஸ் (telomerase) என்ஸைமில் ஆட்சி செலுத்துவது மூலமாக டீலாமர் (telomere) நீளத்தை அதிகரித்து, வயோதிக மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதையும் உறுதிப்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள். சரி எந்த யோகாவைச் செய்வது? மூச்சுப் பயிற்சி எப்போது? ஆசனம் எப்போது? இப்படிப் பல கேள்விகள் நீரிழிவு நோயாளிகளுக்கு எழலாம். அதற்கு விடைதரும் விதமாக, பெங்களூரூவில் உள்ள யோகா பல்கலைக்கழகமும், மத்திய ஆயுஷ் துறையும் இணைந்து தினசரி செய்ய வேண்டும் என்று, கீழ்க்கண்டவாறு ஒரு மணி நேரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளன (பார்க்க பெட்டிச் செய்தி). இந்தப் பட்டியல் நோயரின் உடல்வாகு, நோய் வகையைப் பொறுத்து தேர்ந்த சித்த, யோக மருத்துவர் ஆலோசனைப்படி மாற்றியமைத்துச் செய்யலாம். வாட்ஸ் ஆப், கூகுள் குருக்களிடம் பயில்வது நல்லதல்ல. மரபு கொடுத்த பொக்கிஷம் நீரிழிவு நோய் கட்டுக்குள் வர மனத்தை ஆற்றுப்படுவதும் பரப்பரப்பில்லாத வாழ்க்கை முறையும் மிக மிக அவசியம். இவ்விரண்டுக்கும் மனதையும் உடலையும் ஒருமிக்க வைக்கும் பயிற்சியான யோகா மிக முக்கியமானது. மூளையின் சிம்பதடிக், பாராசிம்பதடிக் நரம்பு மண்டலத்தில் யோகாவும் மூச்சுப் பயிற்சியும் நடத்தும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, மூளை ஆசுவாசப்படுவதை அதன்மூலம் மன அழுத்த ஹார்மோன்கள் சீர்படுவதையெல்லாம் ஆராய்ந்து அறிந்து சொல்லிவிட்டனர். முறையான உணவுடனும் சரியான மருத்துவத்துடனும் எடுக்கப்படும் யோகா பயிற்சியானது நீரிழிவை முழுமையாகக் கட்டுப்படுத்த, நீரிழிவால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அச்சுறுத்தும் பின்விளைவுகளைத் தடுக்க, நம் மரபு கொடுத்த பொக்கிஷம்!

கல்விச்சோலை - kalvisolai health tips