Thursday, 29 December 2016

ஜாதிக்காயை மருந்தாக்குவது எப்படி?


பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:

ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.

முகத்தை அழகாக்கும்:

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது

அம்மை கொப்புளங்கள் சரியாகும்:

அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்:

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தசைப்பிடிப்பை நீக்கும்:

ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்­ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.

Tuesday, 27 December 2016

அல்சர் பற்றி அறிய வேண்டியவை



செரிமான மண்டலத்தின் வி.ஐ.பி. உறுப்பு, இரைப்பை! பசியைத் தூண்டி, சாப்பிட வைத்து, உணவைச் செரிக்க வைத்து, உணவுச் சத்துகளை ரத்தத்தில் கலக்க வைத்து, உடல் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் வழி அமைக்கும் முக்கியமான உறுப்பு இது. நம் ஆரோக்கியத்தின் வழிகாட்டியும் இதுதான். நேரத்துக்குப் பசி எடுத்து, தேவையான உணவைச் சரியான அளவில் ஒருவர் சாப்பிடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம்!வயிற்றின் மேற்புறம் சற்றே இடது பக்கமாகச் சாய்ந்து ஒரு பேரிக்காய் வடிவத்தில் இருக்கிறது, இரைப்பை. இது உணவுக்குழாய் முடியும் இடத்தில் தொடங்குகிறது. முன்சிறுகுடலில் முடிகிறது. இதன் கொள்ளளவு சுமார் இரண்டரை லிட்டர். இது உணவு இல்லாதபோது காற்றிழந்த பலூன் போல சுருங்கி இருக்கும். உணவு உள்ளே வரும்போது தேவைக்கேற்ப விரிந்து கொள்ளும். இரைப்பைச் சுவரில் மியூக்கஸ் சவ்வு (Mucus layer) இருக்கிறது. இதன் சுரப்பிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் பெப்சின் என்சைமையும் சுரக்கின்றன. இவையே உணவுச் செரிமானத்துக்கு உதவுகின்றன. உணவுக்குழாய் மூலம் உணவு இரைப்பைக்குள் வந்ததும் இரைப்பை ஒரு மிக்ஸி மாதிரி வேலை செய்து, உணவை உடைத்துக் குழைத்து கூழ் போல் ஆக்குகிறது. அப்போது உணவில் உள்ள புரதம் செரிமானமாகிறது. இந்த உணவுக் கூழை சிறிது சிறிதாக முன்சிறுகுடலுக்கு அனுப்புகிறது இரைப்பை. இது சமச்சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. கண்ட நேரத்தில் சாப்பிடுவது, அதிகமாக சாப்பிடுவது, அடிக்கடி துரித உணவு சாப்பிடுவது அல்லது ஒருவேளை உணவைச் சாப்பிடாமல் புறக்கணிப்பது என்று நாம் 'சேட்டை' செய்தால், இரைப்பைக்குக் கோபம் வந்து எதிர்வினையைக் காட்டும். அதில் ஒன்று ஏப்பம்! அவசரமாக சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும்போதும், ஸ்ட்ரா மூலம் மென்பானங்களை உறிஞ்சும்போதும் காற்றையும் சேர்த்தே விழுங்குகிறோம். இந்தக் காற்று இரைப்பையைத் தாண்டி, சிறுகுடல், பெருங்குடலுக்குச் சென்றால், வயிறு உப்புதல், வாயு பிரிதல் எனப் பல அவஸ்தைகளை ஏற்படுத்தும். இதைத் தடுக்க இயற்கை ஏற்படுத்தியிருக்கிற வசதிதான் ஏப்பம்! இது ஒரு அனிச்சைச் செயலாக நிகழ்கிறது. தினசரி அதிகபட்சமாக 20 முறை சிறு ஏப்பம் விடுவது சரிதான். ஆனால், நெஞ்சு எரிச்சலுடன் அடிக்கடி ஏப்பம் வந்தால், அது 'இரைப்பையில் பிரச்னை இருக்கிறது' எனச் சொல்லும் அலாரம்!ஏப்பத்தில் வித்தியாச வகை ஒன்று இருக்கிறது. நோயாளிகள் அவர்களுக்குத் தெரியாமலே ஏப்பத்தை உருவாக்குவார்கள். இவர்கள், காற்றை உணவுக்குழாய்க்குள் உறிஞ்சி, 'ஆவ்வ்வ்' என்று சத்தமாக ஏப்பம் விடுவார்கள். இவர்களுக்கு உடலில் நோய் எதுவும் இருக்காது. கவலை, மன அழுத்தம் போன்ற மனக்கோளாறுகளின் புறவெளிப்பாடாக இது இருக்கும். இதற்காக இவர்கள் நாடுவது சோடா! என்னிடம் ஒரு நோயாளி வந்தார். "டாக்டர், ஆரம்பத்தில் ஏப்பம் விட்டால் இதமாக இருக்கிறது என்று சோடா குடித்துப் பழகி விட்டேன். இப்போது இதம் போய் வேதனையாகிவிட்டது. ஆனால், சோடாவை விடமுடியவில்லை!" என்றார். சோடா குடித்து ஏப்பத்தை வரவழைப்பது தவறான பழக்கம் என்பதைப் புரியவைத்து, மனநல மாத்திரைகளைக் கொடுத்து சரி செய்தேன். இவரைப்போல் இன்னும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.இரைப்பை காட்டும் அடுத்த எதிர்வினை, எதுக்களித்தல்! 'கேஸ்ட்ரோ ஈசோஃபீஜியல் ரிஃப்ளக்ஸ் டிசீஸ்' (Gastro esophageal reflux disease-GERD) என்பது மருத்துவப் பெயர். 'நெஞ்செரிச்சல் நோய்' (Heart burn) என்பது பட்டப் பெயர். உணவுக்குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் ஒரு வால்வு இருக்கிறது. இது இறுக்கமாக இருந்தால் இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேலெழும்பி உணவுக்குழாய்க்குள் செல்ல முடியாது.மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், தினமும் மது குடித்தால், புகை பிடித்தால் இந்த வால்வு வயதாகிப் போன சல்லடை வலை போல் தொங்கிவிடும். இதனால், காப்பாளன் இல்லாத கோட்டைக்குள் எளிதாக நுழைகிற மாதிரி இரைப்பை அமிலம், பெப்சின், பித்தநீர் இம்மூன்றும் உணவுக்குழாய் வழியாக வாய்க்கு வந்துவிடும். அப்போது இதிலுள்ள அமிலம் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இதுதான் எதுக்களித்தல்!இது நாட்பட்டு நீடிக்கக்கூடாது. உணவு அடிக்கடி எதுக்களிக்கும்போது, உணவுக்குழாய் சுவர் தடிமனாகி விடுகிறது. இதற்கு 'பேரட் உணவுக்குழாய்' (Barret's esophagus) என்று பெயர். இது புற்றுநோயாக மாறவும் கூடும். பயப்பட வேண்டாம்! ஆயிரத்தில் மூன்று பேருக்குத்தான் இப்படி புற்றுநோய் வருகிறது. அதற்குள் இதைச் சரி செய்துவிடலாம். அளவான எடையுடன் இருப்பது, முக்கால் வயிற்றுக்குச் சாப்பிடுவது, உணவுமுறையை மாற்றிக்கொள்வது, இடதுபுறமாகப் படுப்பது, படுக்கையின் தலைப்பகுதியை உயர்த்திக்கொள்வது போன்றவற்றால் எதுக்களித்தல் பிரச்னைக்கு 'டாடா' காட்டிவிடலாம்!இரைப்பைக்குக் கடுங்கோபம் வரும்போது ஏற்படும் முக்கியமான எதிர்வினை, வயிற்றுவலி! செரிமான மண்டலத்தின் முதன்மையான பிரச்னை இது. உணவுமுறை மாறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள பிரச்னையும் இதுவே. 100ல் 30 பேருக்கு இப்பிரச்னை உள்ளது என்றால், இதன் கொடுமையைப் புரிந்துகொள்ளுங்கள். வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் உடனடியாக நினைவுக்கு வருவது, அல்சர்! 'அல்சர்' எனப்படும் புண் எப்படி வருகிறது? இரைப்பையில் சுரக்கும் அமிலம், நெருப்பு மாதிரி வீரியம் வாய்ந்தது. இதை விரலால் தொட்டால் விரலே வெந்துவிடும்! ஆனால், இதைச் சுரக்கிற இரைப்பையை இதனால் ஒன்றும் செய்யமுடியாது. அந்த அளவுக்கு இரைப்பைச் சுவர் கடுமையான தற்காப்பு உடையது.ஆனால் நீரூற்று போல் சீராகச் சுரக்க வேண்டிய அமிலம் புயல்மழை போல் பொழிந்தால், இரைப்பைச் சுவர் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறும். அப்படித் திணறும் இடத்தில் புண் உண்டாகும். இதுதான் அல்சர்! இது இரைப்பையில் ஏற்பட்டால் 'கேஸ்ட்ரிக் அல்சர்'. முன் சிறுகுடலில் ஏற்பட்டால் 'டியோடினல் அல்சர்'. இரண்டிலும் இருந்தால் 'பெப்டிக் அல்சர்'. சரி, அமில மழைக்கு என்ன காரணம்? காரம்/மசாலா/புளிப்பு சாப்பிட்டால், எண்ணெயில் குளித்த பண்டங்களைச் சாப்பிட்டால், புகை பிடித்தால், மது குடித்தால் இரைப்பையில் அமிலம் கொட்டும். இன்னொரு முக்கியக் காரணம், மனசு! மனப் பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் அமில மழை பொழியும்! ஆக, Hurry, Worry, Curry இந்த மூன்றும்தான் அல்சருக்கு அழைப்பிதழ் அனுப்பும் முக்கியமான தீயசக்திகள்! இரைப்பைக்கு அடுத்த எதிரி, மாத்திரைகள். முக்கியமாக மூட்டுவலி மாத்திரைகளையும் ஸ்டீராய்டு மாத்திரைகளையும் அளவுக்கு மீறி சாப்பிட்டால், இரைப்பைச் சுவர் பலவீனமாகி, விரிசல் விழும். அதில் அமிலம் பட்டு புண்ணாகிவிடும். இரைப்பைச் சுவர் பலவீனமாவதற்கு இன்னொரு காரணம், 'ஹெலிக்கோபாக்டர் பைலோரி' (Helicobacter pylori) எனும் கிருமி. இது அசுத்த தண்ணீர் மற்றும் உணவு மூலம் இரைப்பைக்கு வந்து இரைப்பைச் சுவரில் ஒட்டிக்கொள்ளும். நெருப்பு மாதிரியான அமிலம் சுரந்து வரும்போது இது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இரைப்பைச் சுவரைத் துளைத்துக்கொண்டு பதுங்கிவிடும்.இது நீண்ட நாள் தங்கிவிட்டால் இரைப்பையில் புற்றுநோயும் வந்துவிடும். புகையிலை, பான் மசாலா, கோலா, காபி, டீ ஆகியவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும். அல்சரின் ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் வரும். பசி இருக்காது. கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய மாதிரி இருக்கும். சில நேரம் நெஞ்சில் பந்து வந்து அடைப்பது போலிருக்கும். இது ஏப்பம் விட்டதும் சரியாகும். அடுத்து வயிற்று வலியும் வாந்தியும் வரும். கேஸ்ட்ரிக் அல்சராக இருந்தால் பசிக்கிற நேரத்தில் வலி வயிற்றைக் கவ்விப் பிடிக்கும். சாப்பிட்டதும் வலி அதிகமாகும். டியோடினல் அல்சராக இருந்தால் சாப்பிட்டதும் வயிற்று வலி குறையும். கவனிக்காதபோது, அல்சர் வடுவாக மாறி, அடைப்பு ஏற்படலாம்; அல்லது இரைப்பையில் துளை விழுந்து நோயாளியின் நிலைமை மோசமாகலாம். இந்த இரண்டுக்கும் சர்ஜரிதான் கைகொடுக்கும். இரைப்பையில் இருப்பது புண்தானா என்பதை உறுதி செய்ய 'இரைப்பை எண்டோஸ்கோப்பி' (Gastro endoscopy) உதவுகிறது. ஒரு ரப்பர் போன்ற குழாயை வாய் வழியாக உணவுப்பாதையில் செலுத்தி, எண்டோஸ்கோப் கருவி மூலம் பார்த்தால், புண் எங்கே, எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று தெரிந்துவிடும். புண்ணின் சிறு பகுதியைக் கிள்ளியெடுத்து 'பயாப்சி' செய்தால் ஹெச். பைலோரி பாதிப்பா, புற்றுநோய் பாதிப்பா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.முன்பெல்லாம் அல்சருக்கு சர்ஜரிதான் ஒரே தீர்வாக இருந்தது. இப்போது ஆன்டிபயாட்டிக், அமிலத்தடை ஊசி, மாத்திரைகள் எனப் பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இவை அமிலம் சுரக்கும் நதி மூலத்தையே மூடிவிடும். இதன் பலனால் அல்சரை ஒரு மாதத்தில் முழுமையாகக் குணப்படுத்தி விடலாம். எத்தனை சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், மது, சிகரெட் போன்ற பழக்கம் இருந்தால், இரைப்பைக்கு இதமாக நடந்துகொள்ளவில்லை0 என்றால், எந்த மருந்தும் கேட்காது!

இரைப்பை இதமாக இருக்க...!

* நேரத்துக்குச் சாப்பிடுங்கள். முக்கால் வயிறு சாப்பிட்டால் போதும்.

* அதிக சூடாக சாப்பிடாதீர்கள்.

* காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட சீரான இடைவெளியில் பிரித்துச் சாப்பிடுங்கள்.

* காற்றடைத்த பானம்/ மென்பானம் அடிக்கடி வேண்டாம்.

* ஆவியில் அவித்த உணவு நல்லது.

* அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு.

* உணவு சாப்பிட்டதும் வயிற்றின்மேல் அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க, ஆடைகள், பெல்ட் போன்றவை இறுக்கமாக இருந்தால், தளர்த்திக்கொள்ளவும்.

* சாப்பிட்ட உடனே குனிந்து வேலை செய்யக் கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது.

* மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது.

* சாப்பிட்டு மூன்று மணி நேரத்துக்குள் நொறுக்குத் தீனிகள் வேண்டாம்.

* அசைவ உணவு சாப்பிட்டதும் குளிர் பானங்கள், கோலா பானங்கள் மற்றும் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கவும்.

* காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்.

* இரவில் எளிதாக செரிக்கக்கூடிய உணவைச் சாப்பிடுங்கள்.

* சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டாம்.

* சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து படுக்கச் செல்லுங்கள்.

* புகை, மது, பான் வேண்டாம்.

* தியானம், யோகாசனம் பழகி மன அமைதிக்கு வழி தேடுங்கள்.

Monday, 26 December 2016

நடைபயிற்சி உடற்பயிற்சியாகுமா

உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சி செய்யலாம். நடப்பதும் நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று.நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை.இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன.ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் கண்டிப்பாக வாரம் 5 நாட்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.உடலைப் பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும். ஆனால், இன்றைய வாழ்க்கை சூழலில், உயரத்துக்கு ஏற்ற எடையை விட மிக அதிகமாக இருக்கின்றனர். உடல் எடையைக் குறைத்து, பிட்டாக இருக்க ஜிம்முக்குப் போய்க் கடினமாக வொர்க் அவுட்ஸ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எளிமையாக நடைபயிற்சி மற்றும் உணவுகட்டுபாடுகளைக் கடைபிடித்தாலே ஜிம்முக்குப் போகாமலேயே உடலை 'ஜம்' என்று வைத்துக் கொள்ளலாம்" என்கிறார் திருச்சியைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் ஜேசு சவரிமுத்து.உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்க எளிமையான வழி ந‌டைபயிற்சி தான். அட்டவணை ஒன்றை தயார் செய்து கொண்டு அதற்கேற்ப‌ நடக்கத் தொடங்குங்கள். தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி போதுமானது. தொடர்ந்து 3 மாதம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பதை ஒரு கோர்ஸ் போல எடுத்துக் கொள்ளலாம். இதுவரை எந்தவித உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்யாதவர்களும் கூட முதல் நாள் மெதுவாக நடைபயிற்சியைத் தொடங்கலாம். ஆர்வக்கோளாறில் சிலர் திடீரென்று 4 கிலோமீட்டர் வரை கூட நடந்துவிட்டு அதன் பிறகு சோர்ந்து போய், நடைபயிற்சியை விட்டு விடுவார்கள். முதலில் மெல்லமாக நடக்கத் தொடங்க வேண்டும். ந‌டைப்பயிற்சி ஆரம்பித்த முதல் வாரம் வழக்கமாக எவ்வளவு சாப்பிடுவீர்களோ அனைத்தையும் சாப்பிடலாம். ஆனால், 45 நிமிடம் நடக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து உங்கள் நடையில் படிப்படியாக வேகம், தூரம் இரண்டையும் கூட்ட வேண்டும். அதே சமயம் உணவிலும் படிப்படியாகக் கவனம் செலுத்தி எண்ணெய் மற்றும் கொழுப்புச்சத்துள்ள உணவு பொருள்களைத் தவிர்க்க ஆரம்பிக்கவேண்டும். ஒரு வாரம் நடந்தவுடனேயே எனக்கு உடல் எடை குறையவில்லையே என்று சோர்வடைந்துவிடக்கூடாது. 3 மாதம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

நடைபயிற்சிக்கான அட்டவணை:

முதல் 15 நாட்கள் - நடக்க முடியும் தொலைவு மெதுவாக நடக்க வேண்டும். ஆனால் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும்.

16-30 வது நாள் வரை - ஏற்கனவே நடந்த தொலைவை விட அதிகமாக 45 நிமிடத்துக்குள் நடக்க வேண்டும்.

30 - 45 நாள் வரை- ஒரு நிமிடம் வேகமான நடை 2 நிமிடம் மெதுவான நடை. இதை 5 முறை தொடர்ந்து செய்த பிறகு ரெஸ்ட் எடுக்காமல் மிக மெதுவாக 5 நிமிடத்துக்கு நடக்கவேண்டும். பிறகு, மீண்டும் ஒரு நிமிடம் வேகமான நடை இரண்டு நிமிடம் மெதுவான நடை, 5 நிமிடம் மிக மெதுவான நடைபோட வேண்டும் இந்தச் சுழற்சியை 45 நிமிடங்கள் வரைக்கும் செய்ய வேண்டும்.

45 - 60 வது நாள் வரை - ஒரு நிமிடம் வேக நடை ஒரு நிமிடம் மெதுவான நடை இதே போல 45 நிமிடம் நடக்க வேண்டும்.

60 - 75 வது நாள் வரை - இரண்டு நிமிடம் வேகமான நடை ஒரு நிமிடம் மெதுவான நடை இதைத் தொடர்ச்சியாக 45 நிமிடம் செய்ய வேண்டும்.

75 வது நாள் முதல் 90 வது நாள் வரை - ஒரு நிமிடம் மிதமான ஜாக்கிங் மற்றும் ஒரு நிமிடம் மெதுவான நடை போட வேண்டும்.

இந்த 90 நாட்கள் முறையாகச் செய்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மிதமான வேகத்தில் ஜாக்கிங் செய்வதை அதிகரித்து 20 நிமிடம் ஜாக்கிங் 25 நிமிடம் நடைபயிற்சி என்ற நடைமுறைக்குக் கொண்டு வந்து தொடர்ந்து தினமும் இதே வகையில் வாக்கிங், ஜாக்கிங் செய்வது உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க உதவும்.
 
கவனிக்க வேண்டியவை

* கண்டிப்பாகக் கைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கைபேசியைச் சைலண்டில் போட்டுவிடலாம்.

* நடக்க ஆரம்பிப்பதற்கு முன் 3 நிமிடம் வார்ம் அப் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இதனால், தசைகளில் சுருக்கம், வலி ஏற்படாமல் எளிதில் நடக்க ஏதுவாக இருக்கும்.

* நடந்து கொண்டிருக்கும்போது, அடிக்கடி நாக்கு உலர்ந்து போகலாம். அந்தச் சமயத்தில், சிறிதளவு தண்ணீர் மட்டும் அருந்த வேண்டும். 45 நிமிடம் நடைபயிற்சி செய்தவுடன் தேவையான அளவு தண்ணீரை அருந்த‌லாம். 20 நிமிடம் கழித்து உணவு உண்ணலாம்.

* காலை, மதியம், மாலை, இரவு என எந்த நேரத்திலும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். எனினும் காலை நேரத்தில் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் நடைபயிற்சி செய்வது மிகவும் உற்சாகத்தைத் தரும்.

இனியும் தாமதிக்காமல், வீரு நடை போட்டுக் கொழுப்பை குறைங்க! வெயிட் தன்னால இறங்கிடும்.

Saturday, 24 December 2016

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா?

 
இன்று திடீர் திடீரென்று உடல் நலப் பாதிப்புகள், வியாதிகளின் தாக்குதல் ஏற்படும் நிலையில், தாங்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.சிறு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், இது அந்த வியாதியின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகத்திலேயே மக்கள் அல்லல்படுகிறார்கள்.ஆனால் சில விஷயங்களை வைத்து, நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா, இல்லையா என்று அறிந்துகொள்ள முடியும். அந்த விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
நல்ல தூக்கம்
நாம் சுறுசுறுப்பாக இயங்குவதைப் போல, போதுமான ஓய்வு எடுப்பதும் முக்கியம். ஓய்வு என்பது உடலுக்கு அத்தியாவசியமான விஷயம். நாம் அலாரம் எதுவும் வைக்காமலே தினமும் காலையில் ஒரே நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலே சரியான அளவு தூங்குவதாகவும், உடல் உறுப்புகள் சீராக வேலை செய்வதாகவும் அர்த்தம். மன உளைச்சல் போன்ற பல்வேறு விஷயங்களால் சரியாகத் தூங்காதவர்களுக்கு நாளடைவில் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள், டாக்டர்கள்.
சிறுநீர் கழித்தல்
உடலில் இருந்து தினம் சரியான அளவு நீர் வெளியேற வேண்டியது அவசியமாகும். ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 குவளை தண்ணீர் அருந்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதே போல சிறுநீரானது தெளிந்த மஞ்சள் நிறத்தில் வந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகக் கொள்ளலாம்.
விரல் நகம்
விரல் நகங்களை வைத்துக்கூட ஒருவரின் ஆரோக்கியத்தை கணிக்கலாம். ஆரோக்கியமாக இருப்பவர்களின் விரல் நகமானது சீரான மேற்பரப்புடன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நகங்கள் பாதிக்கப்பட்டோ, மஞ்சள் போன்ற நிறங்களிலோ காணப்பட்டால், உஷாராக வேண்டும்.
கண்கள்
கண்களைப் பொறுத்தவரை கருப்பு கருவிழிகளுடன், வெள்ளை படர்ந்து எப்போதும் இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் ஆவர். கண்களானது வெள்ளை நிறத்திலிருந்து திடீரென மஞ்சளாகவோ, பழுப்பு நிறமாகவோ மாறினால் உடலில் ஏதோ பிரச்சினை இருப்பதாக அர்த்தம்.
நாக்கின் நிறம்
மெல்லிய வெள்ளை படர்ந்த நிறத்தில் நாக்கு இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகும். நல்ல சிவப்பு சிறத்தில் இருந்தால் வைட்டமின் பி குறைபாடு உள்ளதாகவும், நாக்கு அடிக்கடி வறட்சி அடைந்தால் அவர்களுக்கு மனழுத்தம் இருப்பதாகவும் அர்த்தமாகும்.
இதயத் துடிப்பு
சாதாரணமாக ஆரோக்கியமான ஒரு மனிதரின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 72-ல் இருந்து 80 வரை இருக்கலாம். இதயத் துடிப்பு 80-க்கு மேல் இருந்தால் அவர்கள் மருத்துவர்களை அணுகுவதுடன், சரியான அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.
சரியான திட்டமிட்ட உணவுகளை உண்பது, ஆரோக்கியமற்ற உணவுகள், உணவுமுறைகளைத் தவிர்ப்பது, போதுமான அளவு உடல் உழைப்பு, உடற்பயிற்சி, கவலைகளை தலையில் ஏற்றி வைக்காமல் இருப்பது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது இவற்றை எல்லாம் பின்பற்றினாலே நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

Saturday, 17 December 2016

வாழைப்பழம் வழங்கும் நன்மைகள்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம், சத்துகள் நிறைந்த பழமாகத் திகழ்கிறது. பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கு இது தீர்வு அளிக்கிறது. பழுத்த வாழைப்பழம், பழுக்காத வாழைப்பழத்தைவிட நார்ச்சத்து மிகுந்த ஆகாரமாகவும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்ததாகவும் உள்ளது. பழுத்த வாழைப்பழம், அதிக வைட்டமின்களையும், புரதங்களையும், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடென்டுகளையும் அளிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நன்கு பழுத்த வாழைப்பழங்களின் மீது காணப்படும் கரும்புள்ளிகள், டி.என்.எப். எனப்படும் டியூமர் நேசிரோசிஸ் பாக்டர் எனப்படும் ஒரு வேதிப்பொருளை உருவாக்குகின்றன. இது புற்றுச் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. சாதாரணமாக ஒரு வாழைப்பழம் குறைந்தது சுமார் .55 மில்லிகிராம் அளவு வைட்டமின் பி 6-ஐ கொண்டுள்ளது. இது ஒரு வளர்ந்த மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் வைட்டமின் பி 6 அளவில் 42 சதவீதம் ஆகும். தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வருவது, ருமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஒரு பழுத்த வாழைப்பழத்தில், சக்திவாய்ந்த எலும்புகளையும், தசைகளையும் உற்பத்தி செய்ய மனித உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவீதம் உள்ளது. தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவந்தால் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி, எலும்புச்சிதைவு மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். இவை தவிர, பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள், சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும் தடுக்கும். தினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.