Tuesday, 27 December 2016

அல்சர் பற்றி அறிய வேண்டியவைசெரிமான மண்டலத்தின் வி.ஐ.பி. உறுப்பு, இரைப்பை! பசியைத் தூண்டி, சாப்பிட வைத்து, உணவைச் செரிக்க வைத்து, உணவுச் சத்துகளை ரத்தத்தில் கலக்க வைத்து, உடல் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் வழி அமைக்கும் முக்கியமான உறுப்பு இது. நம் ஆரோக்கியத்தின் வழிகாட்டியும் இதுதான். நேரத்துக்குப் பசி எடுத்து, தேவையான உணவைச் சரியான அளவில் ஒருவர் சாப்பிடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம்!வயிற்றின் மேற்புறம் சற்றே இடது பக்கமாகச் சாய்ந்து ஒரு பேரிக்காய் வடிவத்தில் இருக்கிறது, இரைப்பை. இது உணவுக்குழாய் முடியும் இடத்தில் தொடங்குகிறது. முன்சிறுகுடலில் முடிகிறது. இதன் கொள்ளளவு சுமார் இரண்டரை லிட்டர். இது உணவு இல்லாதபோது காற்றிழந்த பலூன் போல சுருங்கி இருக்கும். உணவு உள்ளே வரும்போது தேவைக்கேற்ப விரிந்து கொள்ளும். இரைப்பைச் சுவரில் மியூக்கஸ் சவ்வு (Mucus layer) இருக்கிறது. இதன் சுரப்பிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் பெப்சின் என்சைமையும் சுரக்கின்றன. இவையே உணவுச் செரிமானத்துக்கு உதவுகின்றன. உணவுக்குழாய் மூலம் உணவு இரைப்பைக்குள் வந்ததும் இரைப்பை ஒரு மிக்ஸி மாதிரி வேலை செய்து, உணவை உடைத்துக் குழைத்து கூழ் போல் ஆக்குகிறது. அப்போது உணவில் உள்ள புரதம் செரிமானமாகிறது. இந்த உணவுக் கூழை சிறிது சிறிதாக முன்சிறுகுடலுக்கு அனுப்புகிறது இரைப்பை. இது சமச்சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. கண்ட நேரத்தில் சாப்பிடுவது, அதிகமாக சாப்பிடுவது, அடிக்கடி துரித உணவு சாப்பிடுவது அல்லது ஒருவேளை உணவைச் சாப்பிடாமல் புறக்கணிப்பது என்று நாம் 'சேட்டை' செய்தால், இரைப்பைக்குக் கோபம் வந்து எதிர்வினையைக் காட்டும். அதில் ஒன்று ஏப்பம்! அவசரமாக சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும்போதும், ஸ்ட்ரா மூலம் மென்பானங்களை உறிஞ்சும்போதும் காற்றையும் சேர்த்தே விழுங்குகிறோம். இந்தக் காற்று இரைப்பையைத் தாண்டி, சிறுகுடல், பெருங்குடலுக்குச் சென்றால், வயிறு உப்புதல், வாயு பிரிதல் எனப் பல அவஸ்தைகளை ஏற்படுத்தும். இதைத் தடுக்க இயற்கை ஏற்படுத்தியிருக்கிற வசதிதான் ஏப்பம்! இது ஒரு அனிச்சைச் செயலாக நிகழ்கிறது. தினசரி அதிகபட்சமாக 20 முறை சிறு ஏப்பம் விடுவது சரிதான். ஆனால், நெஞ்சு எரிச்சலுடன் அடிக்கடி ஏப்பம் வந்தால், அது 'இரைப்பையில் பிரச்னை இருக்கிறது' எனச் சொல்லும் அலாரம்!ஏப்பத்தில் வித்தியாச வகை ஒன்று இருக்கிறது. நோயாளிகள் அவர்களுக்குத் தெரியாமலே ஏப்பத்தை உருவாக்குவார்கள். இவர்கள், காற்றை உணவுக்குழாய்க்குள் உறிஞ்சி, 'ஆவ்வ்வ்' என்று சத்தமாக ஏப்பம் விடுவார்கள். இவர்களுக்கு உடலில் நோய் எதுவும் இருக்காது. கவலை, மன அழுத்தம் போன்ற மனக்கோளாறுகளின் புறவெளிப்பாடாக இது இருக்கும். இதற்காக இவர்கள் நாடுவது சோடா! என்னிடம் ஒரு நோயாளி வந்தார். "டாக்டர், ஆரம்பத்தில் ஏப்பம் விட்டால் இதமாக இருக்கிறது என்று சோடா குடித்துப் பழகி விட்டேன். இப்போது இதம் போய் வேதனையாகிவிட்டது. ஆனால், சோடாவை விடமுடியவில்லை!" என்றார். சோடா குடித்து ஏப்பத்தை வரவழைப்பது தவறான பழக்கம் என்பதைப் புரியவைத்து, மனநல மாத்திரைகளைக் கொடுத்து சரி செய்தேன். இவரைப்போல் இன்னும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.இரைப்பை காட்டும் அடுத்த எதிர்வினை, எதுக்களித்தல்! 'கேஸ்ட்ரோ ஈசோஃபீஜியல் ரிஃப்ளக்ஸ் டிசீஸ்' (Gastro esophageal reflux disease-GERD) என்பது மருத்துவப் பெயர். 'நெஞ்செரிச்சல் நோய்' (Heart burn) என்பது பட்டப் பெயர். உணவுக்குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் ஒரு வால்வு இருக்கிறது. இது இறுக்கமாக இருந்தால் இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேலெழும்பி உணவுக்குழாய்க்குள் செல்ல முடியாது.மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், தினமும் மது குடித்தால், புகை பிடித்தால் இந்த வால்வு வயதாகிப் போன சல்லடை வலை போல் தொங்கிவிடும். இதனால், காப்பாளன் இல்லாத கோட்டைக்குள் எளிதாக நுழைகிற மாதிரி இரைப்பை அமிலம், பெப்சின், பித்தநீர் இம்மூன்றும் உணவுக்குழாய் வழியாக வாய்க்கு வந்துவிடும். அப்போது இதிலுள்ள அமிலம் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இதுதான் எதுக்களித்தல்!இது நாட்பட்டு நீடிக்கக்கூடாது. உணவு அடிக்கடி எதுக்களிக்கும்போது, உணவுக்குழாய் சுவர் தடிமனாகி விடுகிறது. இதற்கு 'பேரட் உணவுக்குழாய்' (Barret's esophagus) என்று பெயர். இது புற்றுநோயாக மாறவும் கூடும். பயப்பட வேண்டாம்! ஆயிரத்தில் மூன்று பேருக்குத்தான் இப்படி புற்றுநோய் வருகிறது. அதற்குள் இதைச் சரி செய்துவிடலாம். அளவான எடையுடன் இருப்பது, முக்கால் வயிற்றுக்குச் சாப்பிடுவது, உணவுமுறையை மாற்றிக்கொள்வது, இடதுபுறமாகப் படுப்பது, படுக்கையின் தலைப்பகுதியை உயர்த்திக்கொள்வது போன்றவற்றால் எதுக்களித்தல் பிரச்னைக்கு 'டாடா' காட்டிவிடலாம்!இரைப்பைக்குக் கடுங்கோபம் வரும்போது ஏற்படும் முக்கியமான எதிர்வினை, வயிற்றுவலி! செரிமான மண்டலத்தின் முதன்மையான பிரச்னை இது. உணவுமுறை மாறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள பிரச்னையும் இதுவே. 100ல் 30 பேருக்கு இப்பிரச்னை உள்ளது என்றால், இதன் கொடுமையைப் புரிந்துகொள்ளுங்கள். வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் உடனடியாக நினைவுக்கு வருவது, அல்சர்! 'அல்சர்' எனப்படும் புண் எப்படி வருகிறது? இரைப்பையில் சுரக்கும் அமிலம், நெருப்பு மாதிரி வீரியம் வாய்ந்தது. இதை விரலால் தொட்டால் விரலே வெந்துவிடும்! ஆனால், இதைச் சுரக்கிற இரைப்பையை இதனால் ஒன்றும் செய்யமுடியாது. அந்த அளவுக்கு இரைப்பைச் சுவர் கடுமையான தற்காப்பு உடையது.ஆனால் நீரூற்று போல் சீராகச் சுரக்க வேண்டிய அமிலம் புயல்மழை போல் பொழிந்தால், இரைப்பைச் சுவர் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறும். அப்படித் திணறும் இடத்தில் புண் உண்டாகும். இதுதான் அல்சர்! இது இரைப்பையில் ஏற்பட்டால் 'கேஸ்ட்ரிக் அல்சர்'. முன் சிறுகுடலில் ஏற்பட்டால் 'டியோடினல் அல்சர்'. இரண்டிலும் இருந்தால் 'பெப்டிக் அல்சர்'. சரி, அமில மழைக்கு என்ன காரணம்? காரம்/மசாலா/புளிப்பு சாப்பிட்டால், எண்ணெயில் குளித்த பண்டங்களைச் சாப்பிட்டால், புகை பிடித்தால், மது குடித்தால் இரைப்பையில் அமிலம் கொட்டும். இன்னொரு முக்கியக் காரணம், மனசு! மனப் பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் அமில மழை பொழியும்! ஆக, Hurry, Worry, Curry இந்த மூன்றும்தான் அல்சருக்கு அழைப்பிதழ் அனுப்பும் முக்கியமான தீயசக்திகள்! இரைப்பைக்கு அடுத்த எதிரி, மாத்திரைகள். முக்கியமாக மூட்டுவலி மாத்திரைகளையும் ஸ்டீராய்டு மாத்திரைகளையும் அளவுக்கு மீறி சாப்பிட்டால், இரைப்பைச் சுவர் பலவீனமாகி, விரிசல் விழும். அதில் அமிலம் பட்டு புண்ணாகிவிடும். இரைப்பைச் சுவர் பலவீனமாவதற்கு இன்னொரு காரணம், 'ஹெலிக்கோபாக்டர் பைலோரி' (Helicobacter pylori) எனும் கிருமி. இது அசுத்த தண்ணீர் மற்றும் உணவு மூலம் இரைப்பைக்கு வந்து இரைப்பைச் சுவரில் ஒட்டிக்கொள்ளும். நெருப்பு மாதிரியான அமிலம் சுரந்து வரும்போது இது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இரைப்பைச் சுவரைத் துளைத்துக்கொண்டு பதுங்கிவிடும்.இது நீண்ட நாள் தங்கிவிட்டால் இரைப்பையில் புற்றுநோயும் வந்துவிடும். புகையிலை, பான் மசாலா, கோலா, காபி, டீ ஆகியவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும். அல்சரின் ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் வரும். பசி இருக்காது. கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய மாதிரி இருக்கும். சில நேரம் நெஞ்சில் பந்து வந்து அடைப்பது போலிருக்கும். இது ஏப்பம் விட்டதும் சரியாகும். அடுத்து வயிற்று வலியும் வாந்தியும் வரும். கேஸ்ட்ரிக் அல்சராக இருந்தால் பசிக்கிற நேரத்தில் வலி வயிற்றைக் கவ்விப் பிடிக்கும். சாப்பிட்டதும் வலி அதிகமாகும். டியோடினல் அல்சராக இருந்தால் சாப்பிட்டதும் வயிற்று வலி குறையும். கவனிக்காதபோது, அல்சர் வடுவாக மாறி, அடைப்பு ஏற்படலாம்; அல்லது இரைப்பையில் துளை விழுந்து நோயாளியின் நிலைமை மோசமாகலாம். இந்த இரண்டுக்கும் சர்ஜரிதான் கைகொடுக்கும். இரைப்பையில் இருப்பது புண்தானா என்பதை உறுதி செய்ய 'இரைப்பை எண்டோஸ்கோப்பி' (Gastro endoscopy) உதவுகிறது. ஒரு ரப்பர் போன்ற குழாயை வாய் வழியாக உணவுப்பாதையில் செலுத்தி, எண்டோஸ்கோப் கருவி மூலம் பார்த்தால், புண் எங்கே, எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று தெரிந்துவிடும். புண்ணின் சிறு பகுதியைக் கிள்ளியெடுத்து 'பயாப்சி' செய்தால் ஹெச். பைலோரி பாதிப்பா, புற்றுநோய் பாதிப்பா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.முன்பெல்லாம் அல்சருக்கு சர்ஜரிதான் ஒரே தீர்வாக இருந்தது. இப்போது ஆன்டிபயாட்டிக், அமிலத்தடை ஊசி, மாத்திரைகள் எனப் பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இவை அமிலம் சுரக்கும் நதி மூலத்தையே மூடிவிடும். இதன் பலனால் அல்சரை ஒரு மாதத்தில் முழுமையாகக் குணப்படுத்தி விடலாம். எத்தனை சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், மது, சிகரெட் போன்ற பழக்கம் இருந்தால், இரைப்பைக்கு இதமாக நடந்துகொள்ளவில்லை0 என்றால், எந்த மருந்தும் கேட்காது!

இரைப்பை இதமாக இருக்க...!

* நேரத்துக்குச் சாப்பிடுங்கள். முக்கால் வயிறு சாப்பிட்டால் போதும்.

* அதிக சூடாக சாப்பிடாதீர்கள்.

* காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட சீரான இடைவெளியில் பிரித்துச் சாப்பிடுங்கள்.

* காற்றடைத்த பானம்/ மென்பானம் அடிக்கடி வேண்டாம்.

* ஆவியில் அவித்த உணவு நல்லது.

* அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு.

* உணவு சாப்பிட்டதும் வயிற்றின்மேல் அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க, ஆடைகள், பெல்ட் போன்றவை இறுக்கமாக இருந்தால், தளர்த்திக்கொள்ளவும்.

* சாப்பிட்ட உடனே குனிந்து வேலை செய்யக் கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது.

* மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது.

* சாப்பிட்டு மூன்று மணி நேரத்துக்குள் நொறுக்குத் தீனிகள் வேண்டாம்.

* அசைவ உணவு சாப்பிட்டதும் குளிர் பானங்கள், கோலா பானங்கள் மற்றும் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கவும்.

* காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்.

* இரவில் எளிதாக செரிக்கக்கூடிய உணவைச் சாப்பிடுங்கள்.

* சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டாம்.

* சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து படுக்கச் செல்லுங்கள்.

* புகை, மது, பான் வேண்டாம்.

* தியானம், யோகாசனம் பழகி மன அமைதிக்கு வழி தேடுங்கள்.