வெற்றிலையின் மருத்துவ மகிமை சித்தவைத்தியர் பி.அருச்சுனன், வேலூர். நமது நாட்டின் பண்பில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முடிந்தவுடன் வெற்றிலை கொடுப்பது வழக்கம். இது அந்த செயல் வெற்றி பெற்றது என்பதற்கு அடையாளமாக தருவதாகும். ஒரு மாணவன் கல்வி கற்கச்செல்லும் போதும், நமது நாட்டின் கலைகளை கற்கச்செல்லும் போதும்,வெற்றிலையை கொடுத்தே ஆரம்பிப்பர். தான் மேற்கொள்ளும் பயிற்சியின் தொடக்கத்திலேயே வெற்றிப்பெறும் அடையாளமாக வெற்றிலையை கொடுப்பது வழக்கம்.அதே போல் நாட்டின் பண்புப்படி திருமணம் செய்வதற்கு முன்பு பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் இருவரும் தன் சுற்றத்தாரும், நண்பர்களுடனும் சேர்ந்து பேசி முடித்தப்பின்பு வெற்றிலை பாக்கை மாற்றிக்கொள்வது பேசியது வெற்றி பெற்றதைக் குறிப்பதாகும். இதோடு மட்டுமல்லாமல் பெண் கொடுத்தவரும், பிள்ளை கொடுத்தவரும் சமபந்தி என்பர். இப்படி சமபந்தி என்பது நான் பெண் கொடுத்தேன், நீங்கள் பிள்ளை கொடுத்தீர்கள் என்பதால் சமமாக அமர்ந்து உணவு உண்ணும் நிலையில் உள்ளவர்கள் என்று பொருள்.ஆனால் இன்று சமபந்தி என்ற சொல் மருவி சம்மந்தி என்று ஆகி விட்டது. இந்த வெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது. இந்த மூன்று ரகத்தையும் தனித்தனியே பார்க்கும் போது இதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். கருப்பு நிறம் இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர்.இது மணமாக இருக்கும். கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர். கற்பூர மணம் உள்ள வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும்.இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர். இந்த மூன்று விதமான வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பு பொருந்திய கார்ப்புத்தன்மை உடையதாகும். கம்மாறு வெற்றிலைச் சாறை தினமும் காலை உணவிற்கு பிறகு அரை ‘அவுன்ஸ்’ வீதம் மூன்று நாள் குடித்து வந்தால் வாத, பித்த கபத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை குறைக்கும். உடலில் நீர் ஏற்றம், தலையில் நீர் ஏற்றம், தலை பாரம் உணவு செரியாமை,மந்தம், குரல் கம்மல் வயிற்றுவலி, வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கும். இந்த வெற்றிலையை பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து உபயோகிக்கும் போது தாம்பூலம் என்கிறோம். இந்த தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும்,நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது. அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏன் என்றால் பாக்கு துவர்ப்புத் தன்மை உடையது. இத்தன்மையால் உமிழ்நீர் சுரக்காது. எனவே ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும்.அப்படி இல்லாமல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,இவைகளை ஒன்றாக மெல்லும் போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும்,ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தத்தோடும், அக்கினி மந்தம், ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்கிவிட வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் உண்ணும் முறையாகும். காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும். பசி இல்லாதவர்கள் மதிய உணவுக்கு பின்பு இவ்விதமாக உண்டால் ஆரோக்கியமான பசி உண்டாகும். மாலையில் வெற்றிலை அதிகமாகவும் பாக்கு, சுண்ணாம்பு, குறைவாகவும் மெல்வதால் வாயிலுள்ள ரணங்கள் குணமாகும். வயிற்று ரணத்தால் வாயில் வீசும் துர்வாடை நீங்கி நல்ல மணம் வீசும். இப்படி நோய்க்கேற்றவாறு வெற்றிலை, பாக்குகளை கூட்டிக்குறைக்கும் போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.வெற்றிலையை இளம் சூட்டில் வதக்கி சாறு எடுத்து அச்சாற்றை மூக்கில் இரண்டு துளி விட தலை நோய், தலைபாரம், தலையில் நீர்தேக்கம் ஆகியவை நீங்கும். இரண்டு வெற்றிலையுடன் 50 கிராம் ஊற வைத்த சிவப்பு அரிசியை சேர்த்து உண்டால் கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். சிறுவர்களுக்கு மலக்குற்றம் நீங்கும். அதோடு இருமல், மூச்சுதிணறல், கோழைக்கட்டு ஆகியவை நீங்குவதோடு இதை பெண்கள் உண்டால் ஆண்கள் மீது பற்றும் ஆண்கள் உண்டால் பெண்களின் மீது பற்றும் உண்டாகும்.
Monday, 9 April 2018
Saturday, 31 March 2018
கொலஸ்ட்ரால்... பாதிப்புகளும், தப்பிக்கும் வழிகளும்
மாம்பழத்தின் மகிமை
மாம்பழத்தின் மகிமை
பழக்கடைகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது ருசியால் ஈர்ப்பது மாம்பழம்.
சுவையில் மட்டுமின்றி, தனது மருத்துவக் குணங்களாலும் மகிமை பெற்றுத் திகழ்கிறது, முக்கனிகளில் முதல் கனி.
ஒரு ‘கப்’ மாம்பழத் துண்டுகளில், 100 கலோரிகள், 1 கிராம் புரதம், 0.5 கிராம் கொழுப்பு, 24 கிராம் சர்க்கரை, 3 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளைக்குத் தேவையான 100 சதவீத வைட்டமின் சி, 35 சதவீத வைட்டமின் ஏ, 20 சதவீத போலேட், 10 சதவீத வைட்டமின் பி6, 8 சதவீத வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் தாமிரம், கால்சியம், இரும்புச் சத்துகளும், ஸீசாந்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்டுகளும் அடங்கியிருக்கின்றன.
இப்படி சத்துகளின் பெட்டகமாக உள்ள மாம்பழம், புற்றுநோய், குடல் இறக்கம், இதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகக் கருதப்படுகிறது.
மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும். நரம்புத் தளர்ச்சியை இப்பழம் போக்கும்.
மாம்பழச்சாறு பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும். இப்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.
தொடர்ந்து மாம்பழம் சாப்பிடுவதால் ரத்தஓட்டம் சீராகும், கர்ப்பக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.
தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களைத் தீர்க்கும் தன்மையும் மாம்பழத்துக்கு உண்டு.
Sunday, 4 March 2018
புரதம் நிறைந்த வெள்ளைக்கரு
புரதம் நிறைந்த வெள்ளைக்கரு | காலை உணவுடன் முட்டையையும் சேர்த்துக் கொள்வது நல்லது. ஊட்டச்சத்து மிகுந்த முட்டை, உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. உடலுக்கு தேவையான ஆற்றலை அது தருகிறது. முட்டையை ஆம்லெட்டாகவோ, வேகவைத்தோ, பொரித்தோ சாப்பிடலாம். இளம் வயதைக் கடந்தவர்கள் வேகவைத்த முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வரலாம். முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! மஞ்சள் கருவை நீக்கி விட்டால் முட்டையில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்துபோய்விடும். கொழுப்பை விரும்பாதவர்கள், அதிக கொழுப்பு அளவை கொண்டிருப்பவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. முட்டையில் அதிக புரதம் உள்ளது. குறிப்பாக வெள்ளைக்கருவில் உடலுக்கு நன்மை தரும் குறைந்த கொழுப்பு கொண்ட புரதம் நிரம்பியிருக்கிறது. அதனால் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைத்துவிடும். கெட்ட கொழுப்பும் குறையும். முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கலோரி இருக்கிறது. அதனை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் குறைந்த கலோரிகளே உடலுக்கு கிடைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளைக்கருவில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். இதயத்துக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும். ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவும். வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ, பி 12 மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. வைட்டமின் பி12 தசை சிதைவு, கண் புரை, ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்க துணைபுரியும். வெள்ளைக்கருவை சாப்பிடும் வேளையில் மஞ்சள் கருவை அறவே ஒதுக்கிவிடவும் கூடாது. அதிலும் ஊட்டச்சத்துகள் உள்ளன. முக்கியமாக கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வெள்ளைக்கருவைவிட மஞ்சள் கருவில் அதிகம் இருக்கின்றன. எனினும் அதிக கொழுப்பு, உடல் எடை பிரச்சினை, சர்க்கரை நோய், ஜீரணம் தொடர்புடைய பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு வெள்ளைக்கரு சாப்பிடுவதே சிறந்த தீர்வாக அமையும்.
Saturday, 3 March 2018
சுண்டைக்காயின் சிறப்பு
சுண்டைக்காயின் சிறப்பு சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் பெரியது. இதன் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பாகின்றன. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சுண்டைக்காயை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடல்சோர்வு நீங்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக்கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். சுண்டைக்காய் மட்டுமல்ல, அதன் இலைகள், வேர், கனி என முழுத் தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கக்கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் செரிமானத் தன்மையை சிறப்பாக்கும். சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச் சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகின்றன. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். அது மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கிச் சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள கசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வு, வயிற்றுப் பொருமல் போன்றவை நீங்கும். சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் தயாரித்து அருந்தி வந்தால் ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.
Subscribe to:
Posts (Atom)



