Saturday 24 December 2016

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா?

 
இன்று திடீர் திடீரென்று உடல் நலப் பாதிப்புகள், வியாதிகளின் தாக்குதல் ஏற்படும் நிலையில், தாங்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.சிறு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், இது அந்த வியாதியின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகத்திலேயே மக்கள் அல்லல்படுகிறார்கள்.ஆனால் சில விஷயங்களை வைத்து, நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா, இல்லையா என்று அறிந்துகொள்ள முடியும். அந்த விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
நல்ல தூக்கம்
நாம் சுறுசுறுப்பாக இயங்குவதைப் போல, போதுமான ஓய்வு எடுப்பதும் முக்கியம். ஓய்வு என்பது உடலுக்கு அத்தியாவசியமான விஷயம். நாம் அலாரம் எதுவும் வைக்காமலே தினமும் காலையில் ஒரே நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலே சரியான அளவு தூங்குவதாகவும், உடல் உறுப்புகள் சீராக வேலை செய்வதாகவும் அர்த்தம். மன உளைச்சல் போன்ற பல்வேறு விஷயங்களால் சரியாகத் தூங்காதவர்களுக்கு நாளடைவில் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள், டாக்டர்கள்.
சிறுநீர் கழித்தல்
உடலில் இருந்து தினம் சரியான அளவு நீர் வெளியேற வேண்டியது அவசியமாகும். ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 குவளை தண்ணீர் அருந்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதே போல சிறுநீரானது தெளிந்த மஞ்சள் நிறத்தில் வந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகக் கொள்ளலாம்.
விரல் நகம்
விரல் நகங்களை வைத்துக்கூட ஒருவரின் ஆரோக்கியத்தை கணிக்கலாம். ஆரோக்கியமாக இருப்பவர்களின் விரல் நகமானது சீரான மேற்பரப்புடன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நகங்கள் பாதிக்கப்பட்டோ, மஞ்சள் போன்ற நிறங்களிலோ காணப்பட்டால், உஷாராக வேண்டும்.
கண்கள்
கண்களைப் பொறுத்தவரை கருப்பு கருவிழிகளுடன், வெள்ளை படர்ந்து எப்போதும் இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் ஆவர். கண்களானது வெள்ளை நிறத்திலிருந்து திடீரென மஞ்சளாகவோ, பழுப்பு நிறமாகவோ மாறினால் உடலில் ஏதோ பிரச்சினை இருப்பதாக அர்த்தம்.
நாக்கின் நிறம்
மெல்லிய வெள்ளை படர்ந்த நிறத்தில் நாக்கு இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகும். நல்ல சிவப்பு சிறத்தில் இருந்தால் வைட்டமின் பி குறைபாடு உள்ளதாகவும், நாக்கு அடிக்கடி வறட்சி அடைந்தால் அவர்களுக்கு மனழுத்தம் இருப்பதாகவும் அர்த்தமாகும்.
இதயத் துடிப்பு
சாதாரணமாக ஆரோக்கியமான ஒரு மனிதரின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 72-ல் இருந்து 80 வரை இருக்கலாம். இதயத் துடிப்பு 80-க்கு மேல் இருந்தால் அவர்கள் மருத்துவர்களை அணுகுவதுடன், சரியான அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.
சரியான திட்டமிட்ட உணவுகளை உண்பது, ஆரோக்கியமற்ற உணவுகள், உணவுமுறைகளைத் தவிர்ப்பது, போதுமான அளவு உடல் உழைப்பு, உடற்பயிற்சி, கவலைகளை தலையில் ஏற்றி வைக்காமல் இருப்பது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது இவற்றை எல்லாம் பின்பற்றினாலே நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.