Friday, 28 September 2018

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

காற்றில் உள்ள மாசுக்கள் காரணமாக (pollution) சருமத் துளைகளில் சேரும் மாசுக்கள், சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இத்தகைய மாசுக்களை அகற்றி, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சி பெறும் வகையில் சுத்தம்செய்யவும், சருமத்துளைகளில் வெளிப்படும் எண்ணெய்த்தன்மை காரணமாக முகம்பொலிவிழப்பதை தடுக்கவும், முகப்பரு ஏற்படும் தாக்கத்தை கட்டுக்குள் வைக்கவும், மூக்கின்மேல் சொரசொரப்பாக தோன்றும் கரும்புள்ளிகள் (blackheads) மற்றும் வெள்ளை புள்ளிகளும் (whiteheads) நீங்கி முகம் பளிச்சிடவும், முகத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராவதால் முதுமை தோற்றத்தை தள்ளி வைக்கவும், மேலும் மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்று சுவாசத்திற்கு சிரமம் தரக்கூடிய சில பிரச்சனைகளில் உடனடி தீர்வு தரக்கூடியது என ஆவி பிடிப்பதற்கு பல நல்ல பலன்கள் உண்டு. ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்கு கொதித்தவுடன், மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன் அளவுபோட்டு, உடனே கனத்த துண்டு, கொண்டு ஆவி முகத்தில் படும்படி, கண்களைமூடி, ஆவி பிடிக்கவும். மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மஞ்சள் நமது சுவாசப்பாதையை சரிசெய்வதுடன், சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள மாசுக்கள், மற்றும் பருக்களை உருவாக்கும் கிருமிகள் விரைவில் வெளியேற உதவுகிறது. மஞ்சள் மற்றும் கையளவு துளசியைப் போட்டும் ஆவி பிடிக்கலாம். எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு கலந்தும் ஆவி பிடிக்கலாம். வேப்பிலை கையளவு போட்டும் ஆவி பிடிக்கலாம். கடைசியில் ஐஸ் கட்டியை டவலில் சுற்றி முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஒற்றி, சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஒத்தடம் வைக்கலாம். அல்லது குளிர்ந்த நீரினால் முகத்தை அலசலாம்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday, 2 September 2018

உறவுக்குப் பின்னால் சில உபாதைகள்

உறவுக்குப் பின்னால் சில உபாதைகள் (தீர்வுகளை தெரிந்துகொள்வோம்) கணவன்- மனைவி இடையேயான தாம்பத்ய உறவு இன்பமானதாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு உறவுக்குப் பின்பு சின்னச் சின்ன உடல் உபாதைகளும், சிலருக்கு தீவிரமான பாதிப்புகளும் ஏற்படலாம். உறவு கொண்ட பின்பு, பொதுவாக ஏற்படும் சில உடல் உபாதைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆண்-பெண் இருபாலருக்கும் நல்லது. அடிக்கடி ஏற்படும் வலி பொதுவாக தாம்பத்ய உறவு முடிந்ததும் கணவனும்- மனைவியும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் அல்லது பேசிக் கொண்டிருப்பார்கள். பின்பு ஆண்கள் சீக்கிரமாக தூங்கிவிடுவார்கள். உடல் அசதி இருவருக்குமே இருந்தாலும், பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரம்ப கால உறவின்போது ஏற்படும் வலி என்பது வேறு. வழக்கமான உறவுக்குப் பின்பு வலி ஏற்படுவது கவனிக்க வேண்டியதாகும். வித்தியாசமான உறவு செயல்பாடுகளால் வலி உண்டாகலாம். தீவிர ஆர்வத்தால், வினோத புணர்வு இன்பத்தால் பிறப்பு உறுப்பில் தோல் கிழிவது, புண்ணாவது, நகங்கள் படுவது போன்ற காரணங்களால் இருபாலருக்குமே காயம் ஏற்படவும் வலி உண்டாகும் வாய்ப்பும் உண்டு. உடல் ஆரோக்கிய குறைபாடு காரணமாகவும் வலி உண்டாகலாம். மாறுபட்ட முயற்சி மற்றும் முரட்டுத்தனமான புணர்ச்சியாலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகலாம். சாதாரண வலி என்றால் அதனை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரோக்கிய குறைபாடு மற்றும் தொடர் வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் ஒவ்வொரு முறை உடலுறவுக்குப் பின்பும் வலி ஏற்படுவது, கட்டி, புண்கள் வளர்வதற்கான அறிகுறியாகவும், வேறு நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். வலி ஏற்படாமல் இருக்க நிதானமான தாம்பத்ய செயல்பாடுகள் அவசியம். நீண்ட நேர எரிச்சல் வலியைப் போலவே பலருக்கும் உடலுறவுக்குப் பின்பு எரிச்சல் உணர்வு உண்டாகலாம். நகக் கீறல், பற்குறி, அசுர வேகம் உள்ளிட்ட காரணங்களால் தோலில் ஏற்படும் கிழிசலாலும், அதிக அழுத்தம் காரணமாக ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டும் எரிச்சல் ஏற் படலாம். உறவுக்குப்பின்பு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எரிச்சல் நின்றுபோனால் அது சாதாரணமானது. எப்போதும் தொடர்ந்து எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். நிதானமான உறவு செயல்பாடு வலியையும், எரிச்சலையும் தவிர்க்கும். வாய் மற்றும் பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்வதும் அவசியமாகும். இருவருமே அந்தரங்க சுத்தத்தை மேற்கொண்டால் எரிச்சலை பெருமளவு தவிர்க்கலாம். ரத்தக்கசிவு முதல் உறவின்போது மட்டுமே கன்னித்திரை கிழிவதால் லேசான ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது பெண்களின் விளையாட்டு, உடல் இயக்கம், வாழ்வியல் முறைகளால் அத்தகைய ரத்தக் கசிவு நிலை அனேகமாக ஏற்படுவதில்லை. மாதவிலக்கு முடிந்த அடுத்த நாட்களில் உறவு வைத்துக் கொண்டால், சில பெண்களுக்கு எஞ்சிய ரத்தத்துளிகள்கூட கசிந்துவரக்கூடும். மற்ற நேரங்களில் சாதாரண உறவு நிலையில் ரத்தம் கசிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். முரட்டுத்தனம் மற்றும் அவசரத்தால் ஏற்பட்ட ரத்தக்கசிவு என்றால் மருந்துகளை உபயோகித்து சரி செய்துவிடலாம். உறவுக்குப் பின்பு தொடர்ந்து ரத்தம் கசிவது, ஒவ்வொரு உறவின்போதும் இதே பிரச்சினை ஏற்படுவது, பிறப்பு உறுப்பின் உட்பகுதியில் புண் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு அவசியம் மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள். நமைச்சலும் அரிப்பும் உறவுக்குப் பின்பு பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அரிப்பு ஏற்பட்டால் அந்தரங்க சுத்தமின்மை காரணமாக இருக்கலாம். உறவுக்கு முன்னும் பின்னும் உறுப்புகளை சுத்தமாக கழுவுவது நல்லது. ஆணுறை உபயோகிப்பது, வழுவழுப்பு தன்மைக்காக ஏதேனும் கிரீம்களை உபயோகிப்பது, உதட்டுச் சாய ரசாயனங்களின் விளைவு உள்ளிட்ட காரணங்களாலும் அரிப்பு ஏற்படலாம். உறுப்புகளை கடந்து உடலிலும் அரிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவியை பெறுவது அவசியம். உடலுறவால் சிலருக்கு சிறுநீர்ப்பை நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. குடல் பகுதியில் இருந்து பாக்டீரியா நுண்கிருமிகள் பிறப்பு உறுப்புகளின் வழியே நுழைவது சிறுநீர்ப்பை நோய்த் தொற்றை உருவாக்கும். உடலுறவுக்கு முன்பு அல்லது உடலுறவு முடித்த உடன் சிறுநீர் கழிப்பதை தவிர்த்தால் சிறுநீர்ப்பை நோய்த் தொற்றை தவிர்க்கலாம். அவசர உபாதைகள் தாம்பத்ய உறவு கொண்டதும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் அல்லது மலம் கழிக்கும் அவசரம் ஏற்படுவதுபோல தோன்றலாம். இது முழு விருப்பம் இல்லாமல், பலவித மனநெருக்கடிக்கு இடையில் உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். ஆண்களில் சிலருக்கு உறவுக்குப் பின்பு, திரவம் கசிவதுபோல இருக்கலாம். அது எஞ்சிய திரவமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் கருவுற்ற நிலையில் உறவு கொண்டாலோ அல்லது கருத்தடை சாதனங்களை பயன்படுத்திக் கொண்டு உறவு கொண்டாலோ உட்சென்ற விந்துத்திரவம் சிறிது நேரத்தில் வெளித்தள்ளப்படக்கூடும். இது இயற்கையானதுதான். அந்தரங்க சுத்தமும், நிதானமான செயல்பாடுகளும் இருந்தால் பெரும்பாலும் உடலுறவுக்குப் பின்னால் அவஸ்தைகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பதை ஆண்களும், பெண்களும் கவனத்தில்கொள்வது மிக அவசியம்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday, 5 August 2018

ரத்தத்திற்கு ஏற்றது வெல்லம்

சீரான ரத்த ஓட்டம் உடலியக்கத்திற்கு மிக அவசியம். சுவாசத்திற்கு அவசியமான ஆக்சிஜனை கடத்துவதற்கும், ஹார்மோன்கள், சர்க்கரை, கொழுப்புகள், செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், தவறான உணவு பழக்கங்கள் போன்றவற்றால் உடலில் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கமுடியாதது. அவைகளை அப்புறப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது. அதற்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் அதனை சுத்திகரிப்பதும் முக்கியமானது. நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்கின்றன. எனினும் ரத்த சுத்திகரிப்பு செயல்முறையை தூண்ட உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய உணவுவகைகள்!

* உடலில் உள்ள நச்சுக் களை அகற்ற உதவும் இயற்கை சுத்திகரிப் பானாக பிராக்கோலி விளங் குகிறது. இது காய்கறி வகையை சேர்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள நச்சுக் களை நீக்கவும் பிராக் கோலி உதவுகிறது. பிராக்கோலியை காய்கறி சாலட்டாக தயாரித்தோ, சமையலில் சேர்த்தோ சாப்பிடலாம்.

* ஆப்பிள், பிளம்ஸ், பேரிக்காய், கொய்யாப் பழம் போன்றவை ரத்தத்தை சுத்திகரிக்கும் பழ வகைகள். இவை ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புக்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், கழிவுகளை நீக்கும் பணியையும் செய்கின்றன.

* தக்காளி பழத்தில் இருக்கும் லைகோபின், குளுதாதயோன் போன்றவையும் உடலிலுள்ள கழிவுகள், ரசாயனங்களை நீக்கும் தன்மை கொண்டவை.

* ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பெர்ரி இன பழங்களையும் சாப்பிட்டு வருவது நல்லது. அவை கல்லீரலின் ஆரோக்கியத்தை காக்க உதவும்.

* கீரை வகைகள் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு துணை நிற்பவை. கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகரிக்கவும், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவி புரியும்.

* பீட்ரூட் சாறு இயற்கை யாகவே உடலில் நச்சுத் தன்மையற்ற நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கல்லீரல் வீக்க பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். ஆதலால் பீட்ரூட்டை ஜூசாகவோ, சாலட்டா கவோ, பொரியலாகவோ தயார் செய்து சாப்பிடுவது நல்லது.

* சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது சிறந்தது. இதில் இரும்பு சத்து அதிகமிருக்கிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, ரத்த ஓட்டத்தையும் சீராக பராமரிக்கவும், ரத்தத்தை தூய்மைப் படுத்தவும் வெல்லம் உதவுகிறது.

* குடிநீர், இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்கிறது. சிறுநீரகம் மூலம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளி யேற்றுகிறது. இரவு முழுவதும் செப்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இவ்வாறு செய்து வருவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.

* முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படுவதற்கு, ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக இருக்கின்றன. ரத்தத்தை சுத்திகரித்து தூய்மைப்படுத்துவதன் மூலம் தலைவலி, ஒவ்வாமை, குமட்டல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைக ளுக்கும் தீர்வு காணலாம்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Tuesday, 10 July 2018

குழந்தையின்மைக்கு தைராய்டு காரணமா?

உடல் பருமன், நமது உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில், தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது. தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும். அதேபோல குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணம் என்று சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாலோ, குறைவாலோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களாலோ பெண்கள் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Tuesday, 26 June 2018

ஆபத்தாகும் கல்லீரல் நோய்

ஆபத்தாகும் கல்லீரல் நோய்: அரசு கவனம் செலுத்துமா? தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கு.கணேசன் உ லக சுகாதார நிறுவனம் 2030-க்குள் ‘ஹெபடைடிஸ்’ (Hepatitis) எனும் கல்லீரல் நோயை உலக அளவில் ஒழித்துவிட வேண்டும் என்னும் முனைப்புடன் செயல்படுகிறது. ‘எளிதில் தடுத்துவிட முடியும்; ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியும்’ என்னும் நிலையில் உள்ள இந்நோயை, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் வளரவிட்டு வேடிக்கைபார்ப்பதாகக் குற்றம்சாட்டுகிறது, அந்நிறுவனம். இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ‘ஹெபடைடிஸ்-சி’ எனும் கல்லீரல் நோய் பாதிப்பு இருக்கிறது. இது, இங்குள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட ஆறு மடங்கு அதிகம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டுதோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் கல்லீரல் நோயால் இறக்கின்றனர். தொற்றுநோய் வரிசையில் காசநோய்க்கு அடுத்தபடியாக அதிகம் உயிர்ப் பலி கேட்கும் நோயாக இது வளர்ந்துவருகிறது. வருடத்துக்கு வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் உலக சுகாதார நிறுவனம், ‘காலத்தோடு இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் சுருக்க நோய் போன்ற கொடுமையான நோய்கள் இதன் பின்விளைவாக வருவதும் அதிகரித்துவிடும். அதன் விளைவால், இளமையில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அப்போது நாட்டின் பொது சுகாதாரத்துக்கு மட்டுமன்றி, பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்’ என்று எச்சரித்துள்ளது. உயிர்க்கொல்லி நோய்கள் கல்லீரல் அழற்சி ஆவதை ‘ஹெபடைடிஸ்’ என் கிறோம். பாக்டீரியா/வைரஸ் தொற்று, மது அருந்துவது, தேவையில்லாமல் மாத்திரை, மருந்துகளைச் சாப்பிடு வது போன்றவற்றால் கல்லீரல் அழற்சி ஆகிறது. இவற்றில் ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, ஈ எனும் வைரஸ் தொற்றுகளால் கல்லீரல் பாதிப்படைவதுதான் அதிகம். ஹெபடைடிஸ்-பி மற்றும் சி வைரஸ்களால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்குரிய சான்று. ஹெபடைடிஸ்-ஏ மற்றும் ஈ வைரஸ் தொற்றுகள் சுகாதாரமற்ற குடிநீரின் மூலமும் அசுத்தமான உணவு வழியாகவும் நமக்கு நோயைத் தருகின்றன. இவற்றால் மனித உயிருக்கு அவ்வளவாக ஆபத்தில்லை. ஆனால், ஹெபடைடிஸ்-பி, சி மற்றும் டி வைரஸ் தொற்றுகள் ஆபத்து மிகுந்தவை. இவை பரிசோதிக்கப்படாத ரத்தம் மூலமும், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்கள் வழியாகவும் அடுத்தவர்களுக்குப் பரவுகின்றன. கர்ப்பிணிக்கு / பாலூட்டும் தாய்க்கு இந்த நோய்கள் இருந்தால் குழந்தைக்கும் ஏற்படும். பாதுகாப்பற்ற/தகாத உடலுறவு மூலம் இவை மற்றவர் களுக்குப் பரவுகின்றன. இந்த நோய்களின் பொதுவான அறிகுறி மஞ்சள் காமாலை. பசி குறைவது, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அதீத களைப்பு, எலும்புகளில் கடுமையான வலி போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இவை எல்லாமே சில வாரங்களில் மறைந்து விடும். ஆனால், நோய் உள்ளுக்குள் மறைந்திருக்கும். தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமலேயே இந்த நோயாளிகள் மற்றவர்களுக்கும் பரப்புவார்கள். நாட்கள் ஆக ஆக இவர்களுக்குக் கல்லீரல் சுருங்கிப் புற்றுநோய் வரும். ஆகவேதான் இவற்றை ‘உயிர்க்கொல்லி நோய்கள்’ என்கிறோம். தடுக்க வழியுண்டா? சுத்தமான குடிநீரை அருந்துவது, சுகாதாரம் மிகுந்த உணவைச் சாப்பிடுவது ஆகியவற்றின் வழியாக ஹெபடைடிஸ்-ஏ மற்றும் ஈ வைரஸ் தொற்றுகளை எளிதில் தடுத்துவிடலாம். மேலும், ஹெபடைடிஸ்-ஏ, ஹெபடைடிஸ்-பி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கத் தடுப்பூசிகளும் உள்ளன. ஹெபடைடிஸ்-சி நோய்க்குத் தடுப்பூசி இல்லை என்றாலும், அதைப் பூரணமாகக் குணப்படுத்துவதற்கு நவீன மருத்துவத்தில் நல்ல மருந்துகள் வந்துள்ளன. ஆனால், சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சுமார் 95 % ஹெபடைடிஸ் நோயாளிகள் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமல் சிகிச்சைக்கே வராமல் இருக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்களிடம் இந்த நோய்கள் குறித்தும் தடுப்புவழிகள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும், நம் சுகாதார அமைப்புகள் அதிக கவனமாக இயங்கவில்லை என்பதையும்தான் இது வெளிப்படுத்துகிறது. அரசு என்ன செய்யலாம்? இன்றைய நிலையில் கல்லீரல் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசியத் திட்டங்கள் வலுவாக இல்லை என்பது நிதர்சனம். குழந்தைகள்கூடப் பாதிக்கப்படுகிறார்கள் எனும் நிலையில், இந்த நோய்க்கு எதிராக முனைப்புடன் போராட இந்தியா தயாராக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். இதற்கு முதல் படியாக, கல்லீரல் நோய்க்கான ‘முன்னறிதல் பரிசோதனை வசதி’களை (ஸ்க்ரீனிங் டெஸ்ட்) எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுக்க வழிசெய்வதும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதும், ஏற்கெனவே சிகிச்சையில் உள்ளவர்கள் அதைத் தொடர்ந்து எடுக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதும் மிக முக்கியம். மேலும், இந்த நோயுள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைத்து, வயிறு மற்றும் குடல்நோய் சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தால், நோய் முழுவதுமாகக் குணமாகும். அடுத்து, ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் மூலம் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, ஹெபடைடிஸ் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இவற்றுக்குள்ள தடுப்பூசிகளை எல்லோருக்கும் இலவசமாகப் போடுவது ஆகியவையும் இன்றைய அவசரத் தேவைகள். மக்களுக்குச் சுத்த மான குடிநீர் கிடைக்க வழிசெய்ய வேண்டியது மக்களாட்சி செய்யும் ஓர் அரசின் தார்மீகக் கடமை. ரத்தம் மற்றும் அதன் தொடர்பான பொருட்களை நோயாளி களுக்கு வழங்குவதில் எவ்வித முறைகேடுகளும் நேராமல் இருக்க ரத்த வங்கிகளை முறையான இடைவெளிகளில் சோதிப்பதும், நாட்டில் போலி மருத்துவர்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். இறுதியாக ஒன்று, ஹெபடைடிஸ்-சி நோய்க்கான மாத்திரை விலை மிகமிக அதிகம். இதனாலேயே பல நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதில்லை. இந்த நோயுள்ளவர்கள் அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டுமானால், இந்த மருந்தின் விலையைக் கட்டுப்படுத்துவதும், அரசு மருத்துவமனைகளில் எப்போதும் இது தாராளமாகக் கிடைக்க வழிசெய்வதும் அவசியம். இத்தனை வழி களையும் திறந்து வைத்தால்தான், 2030-க்குள் ‘ஹெபடைடிஸ்’ நோயை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க முடியும்; உலக சுகாதார நிறுவனத்தின் கனவும் நனவாகும். அதற்குத் தேவையான செயல் திட்டங்களைத் தேசிய அளவில் புதிதாகக் கொண்டுவந்து, போதுமான நிதியை ஒதுக்கி, அரசு இயந்திரங்கள் முனைப்புடன் செயல்பட மத்திய அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். மனது வைக்குமா மத்திய அரசு? - கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

கல்விச்சோலை - kalvisolai health tips