Thursday, 19 October 2017

தொப்புளில் எண்ணை போடுங்கள்!

தொப்புளில் எண்ணை போடுங்கள்! நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்! அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும். காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும். நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது. நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும். தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது. கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்? நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் . ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

Sunday, 25 June 2017

சர்க்கரை நோய் காரணமாக நாடு முழுவதும் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிப்பு அப்போலோ மருத்துவமனை தகவல்

சர்க்கரை நோய் காரணமாக நாடு முழுவதும் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிப்பு அப்போலோ மருத்துவமனை தகவல் | நாடுமுழுவதும் சர்க்கரை நோயால் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அப்போலோ மருத்துவமனையின் செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி தெரி வித்தார். அப்போலோ மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நேற்று தொடங்கியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர். இந்த சர்வதேச கருத்தரங்கு குறித்து அப்போலோ மருத்துவமனையின் செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயால் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் சர்க்கரை நோய் வருவதற்கான ஆரம்ப நிலையில் உள்ளனர். சர்க்கரை நோய் மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளால் 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சர்க்கரை நோய் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தாக்குகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட இருப்பதை 70 சதவீதம் பேருக்கு முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம், பிற உறுப்புகள் பாதிக்கப்படுவதை தடுத்தல், விரைவில் நோய் கண்டறிதல் உள்ளிட்ட சர்க்கரை நோய் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்காக நாடுமுழுவதும் 55 அப்போலோ சர்க்கரை நோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2.5 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 6 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த 1.5 லட்சம் பேருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்

Tuesday, 6 June 2017

கடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி


கடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி | நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். Aska Svn ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது? அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம். கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்… "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

Sunday, 15 January 2017

கொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி

கொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல்ல முடியாது. காரணம் சமீபகாலமாகச் சிறிய கொசுக்கள் மிகப் பெரிய வேலையையும் திறம்படச் செய்துகொண்டிருக்கின்றன. சாதாரணக் காய்ச்சல் தொடங்கி டெங்கு, ஜிகா வரை உண்டாக்கும் மிகப் பெரிய காரணியாகச் சின்னஞ்சிறு கொசு உருமாறி இருக்கிறது. சில மாதங்களுக்கு மட்டும் தலை காட்டாமல் ஓய்வெடுத்துவிட்டு, பெரும்பாலான மாதங்களில் ஊரெங்கும் கொசுக்கள் ஒயிலாக வந்துகொண்டிருக்கின்றன. கொசுக்களை அழிக்கக் கொசுவர்த்திச் சுருள், லிக்விடேட்டர் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தும்போது, அவற்றிலுள்ள வேதியியல் பொருட்கள் காரணமாகத் தலைவலி, நுரையீரல் தொந்தரவுகள் உருவாகுவதற்கு அதிகச் சாத்தியம் உண்டு. இன்னும் சில வீடுகளில் எலி, கரப்பான் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தும் தெளிப்பான்களை, கொசுக்களை அழிக்க வீடு முழுவதும் தெளிக்கும் 'புத்திசாலித்தனம்' உயிரைப் பறிக்கும் அளவுக்கும் கொண்டு செல்லலாம். சரி, கொசுக் கடியிலிருந்து தப்பிக்க இயற்கை அமைத்துக் கொடுத்த வழிமுறைகள் என்ன? வாசனை குளியல் குளிக்கும்போது, நீரில் வாசனை அதிகம் தரும் கற்பூரவல்லி, கறிவேப்பிலை, துளசி, செம்பருத்தி இதழ்கள், எலுமிச்சை இலைகள், உலர்ந்த நெல்லி போன்றவற்றைக் கலந்து குளிக்கலாம். புதினா, திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி உடலில் தேய்த்த பின்னர் குளிக்கலாம். 'நலங்கு மாவு' போன்ற மணம்மிக்க இயற்கை குளியல் பொடிகளைப் பயன்படுத்துவதும் சிறந்தது. இயற்கையாக உடலில் வாசனை கமழும்போது கொசுக்கள் கடிப்பதற்குத் தயக்கம் காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலை, மாலை என இருவேளை நீராடி, உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும் நல்லது. மூலிகை புகை வீட்டுக்கு முன் வேப்பிலை, நொச்சி, மாவிலை, மா மரத்தின் பூக்களைக் கொண்டு புகை போடலாம். கிராமங்களில் பின்பற்றப்படும் இந்த முறை மனிதர்களோடு சேர்த்து, கால்நடைகளையும் கொசுக்கடியிலிருந்து காப்பாற்றும். மாலை வேளையில் வீட்டு அறைகளில் சாம்பிராணியோடு உலர்ந்த வேப்பிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலைகளைக் கொண்டு சிறிது நேரம் புகை காட்டலாம். அந்தக் காலத்தில் அரண்மனை விருந்தினர்களை வரவேற்க, அகில்கட்டை புகைதான் முதல் தேர்வு. வாய்ப்பு இருந்தால் அகில்கட்டை புகையூட்டி, வீடுகளைத் தூய்மைப்படுத்தலாம். வசம்பு சுட்ட கரி, தர்ப்பைப்புல், எலுமிச்சை புல், மா இலை / பூ, வேப்பிலை, நொச்சி, தேங்காய் சிரட்டை போன்றவற்றை ஒன்றாகக் கலந்து புகை போடலாம் அல்லது இவற்றை நீர்விட்டு அரைத்து வில்லைகளாக வைத்துக்கொண்டும் புகை போடலாம். வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க வேதியியல் கலவை நிறைந்த வாசனை திரவியங்களுக்குப் பதிலாக, சந்தனக் கலவையைப் பயன்படுத்துவது சிறந்தது. கற்பூரம், எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து அறைகளில் தெளிக்கலாம். சித்த மருந்தான கற்பூராதி எண்ணெயை லேசாக உடலில் தடவிக்கொண்டால், கொசுக்கடியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். காடுகளில் வாழும் மக்கள், கொசுக்கடி மற்றும் பாம்பு கடியிலிருந்து தப்பிக்க வேப்பெண்ணெயைத் தங்கள் உடலில் தடவிக்கொள்வது குறிப்பிடத்தக்கது. கொசு கடித்துவிட்டால்… வீட்டைச் சுற்றிச் சுகாதாரமான சூழலை உண்டாக்குவது, தேவையற்ற இடங்களில் நீர் தேங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாம். கொசு வலை அமைப்பதும் பாதுகாப்பான உத்தி. கொசு கடித்த பின் உண்டாகும் அரிப்புக்கு அருகன் தைலம், குங்கிலிய வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைத் தடவலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்குப் புண் ஏற்படாமல் இருக்க இந்த முறை நிச்சயம் உதவும். கொசு விரட்டும் தட்டான்கள் தட்டான்களும் பறவைகளும் நம்மருகே வாழ்வதற்கான சூழல் இருந்தபோது, கொசுக் கூட்டம் நம்மைச் சுற்றி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஏனென்றால், தட்டான்களுக்கும், சில பறவைகளுக்கும் முக்கிய உணவே கொசுதான். கொசுக்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டதற்கு நம் சுற்றுச்சூழல் சீரழிக்கப்பட்டதும் முக்கியக் காரணம். இனிமேலாவது, இயற்கையாகக் கொசுக்களை விரட்டும் கொசுவிரட்டி மூலிகைகளைப் பயன்படுத்திக் கொசுக்களின் ஆதிக்கத்தைத் தடுப்போம்! கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

வலி இல்லாத கட்டிகள் புற்றுநோயா?

வலி இல்லாத கட்டிகள் புற்றுநோயா? | என் உடலில் பல இடங்களில் கட்டிகள் உள்ளன. அவற்றால் எந்தத் தொந்தரவும் இல்லை. வலி இல்லாத கட்டிகள் என்றால் புற்றுநோயாக இருக்கும் என்று ஒரு பத்திரிகையில் படித்தேன். இது உண்மையா? உடலில் வளரும் கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகள், சாதாரணக் கட்டிகள் என இரண்டு வகை உண்டு. சாதாரணக் கட்டிகள் பொதுவாக எப்போதும் வலிப்பதில்லை. புற்றுநோய்க் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருக்கும். பின்னர், திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, அளவு கூடுவது, உடல் எடை குறைவது, பசி குறைவது போன்ற துணை அறிகுறிகளையும் ஏற்படுத்துவது உண்டு. சாதாரணக் கட்டிகளில் கொழுப்பு கட்டி (Lipoma), நார்க்கட்டி (Fibroma), நீர்க்கட்டி (Cyst), திசுக்கட்டி (Papilloma) எனப் பலவிதம் உண்டு. உங்களுக்குள்ள கட்டி எந்த வகை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். உடலில் பல இடங்களில் கட்டிகள் உள்ளன என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருப்பவை பெரும்பாலும் கொழுப்புக் கட்டிகளே! எந்தக் கட்டி? கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது பொதுவாக, தோலுக்கும் தசைக்கும் இடையில் வளரும்; மிக மிக மெதுவாகவே வளரும்; மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும்; கையால் தொட்டால் நகரக்கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது. உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங் களில் இவை ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம். ஒருவருக்கு ஒரு கட்டி மட்டும் வளரலாம்; ஒரே சமயத்தில் பல கட்டிகளும் வளரலாம். கொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான, தெளிவான காரணம் இன்றுவரை உறுதிப்படவில்லை. என்றாலும் பரம்பரைத் தன்மை, அதிகக் கொழுப்பு உணவு சாப்பிடுவது, உடல் பருமன், கட்டுப்படாத நீரிழிவு, மது அருந்துதல் போன்றவை இக்கட்டிகள் உருவாவதைத் தூண்டுகின்றன என்பது மட்டும் அறியப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் நடுத்தர வயதினரையும் ஆண்களையும் அதிக அளவில் பாதிக்கிறது. கொழுப்புக் கட்டிகள் சாதாரணக் கட்டிகளே! இவை புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. கட்டி வந்ததும் அதைக் குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை காண்பித்து, அது கொழுப்பு கட்டிதான் என்று உறுதி செய்துகொண்டு, அதை அப்படியே விட்டுவிடலாம். அகற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு வேறு சிகிச்சைகளும் தேவையில்லை. சிகிச்சை தேவையா? கட்டி உள்ள பகுதியில் வலி உண்டாகிறது, கட்டியின் வளர்ச்சி அதிகரிக்கிறது, நோய்த்தொற்று ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது, தோற்றத்தைக் கெடுக்கிறது என்றால் மட்டும் அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிடலாம். சாதாரணக் கட்டியை ஒருமுறை அகற்றிவிட்டால், அந்த இடத்தில் மறுபடியும் அது வளராது. சிலருக்கு மறுபடியும் அந்த வகை கட்டி வேறு இடத்தில் வளரலாம். அது அவரவர் உடல் வாகை பொறுத்தது. கட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது, கட்டிக்கு அருகில் உள்ள பகுதியில் நெறி கட்டுகிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய்க் கட்டியா, இல்லையா எனப் பரிசோதித்துத் தெரிந்து, அதற்கேற்பச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.