வலி இல்லாத கட்டிகள் புற்றுநோயா? | என் உடலில் பல இடங்களில் கட்டிகள் உள்ளன. அவற்றால் எந்தத் தொந்தரவும் இல்லை. வலி இல்லாத கட்டிகள் என்றால் புற்றுநோயாக இருக்கும் என்று ஒரு பத்திரிகையில் படித்தேன். இது உண்மையா? உடலில் வளரும் கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகள், சாதாரணக் கட்டிகள் என இரண்டு வகை உண்டு. சாதாரணக் கட்டிகள் பொதுவாக எப்போதும் வலிப்பதில்லை. புற்றுநோய்க் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருக்கும். பின்னர், திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, அளவு கூடுவது, உடல் எடை குறைவது, பசி குறைவது போன்ற துணை அறிகுறிகளையும் ஏற்படுத்துவது உண்டு. சாதாரணக் கட்டிகளில் கொழுப்பு கட்டி (Lipoma), நார்க்கட்டி (Fibroma), நீர்க்கட்டி (Cyst), திசுக்கட்டி (Papilloma) எனப் பலவிதம் உண்டு. உங்களுக்குள்ள கட்டி எந்த வகை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். உடலில் பல இடங்களில் கட்டிகள் உள்ளன என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருப்பவை பெரும்பாலும் கொழுப்புக் கட்டிகளே! எந்தக் கட்டி? கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது பொதுவாக, தோலுக்கும் தசைக்கும் இடையில் வளரும்; மிக மிக மெதுவாகவே வளரும்; மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும்; கையால் தொட்டால் நகரக்கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது. உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங் களில் இவை ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம். ஒருவருக்கு ஒரு கட்டி மட்டும் வளரலாம்; ஒரே சமயத்தில் பல கட்டிகளும் வளரலாம். கொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான, தெளிவான காரணம் இன்றுவரை உறுதிப்படவில்லை. என்றாலும் பரம்பரைத் தன்மை, அதிகக் கொழுப்பு உணவு சாப்பிடுவது, உடல் பருமன், கட்டுப்படாத நீரிழிவு, மது அருந்துதல் போன்றவை இக்கட்டிகள் உருவாவதைத் தூண்டுகின்றன என்பது மட்டும் அறியப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் நடுத்தர வயதினரையும் ஆண்களையும் அதிக அளவில் பாதிக்கிறது. கொழுப்புக் கட்டிகள் சாதாரணக் கட்டிகளே! இவை புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. கட்டி வந்ததும் அதைக் குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை காண்பித்து, அது கொழுப்பு கட்டிதான் என்று உறுதி செய்துகொண்டு, அதை அப்படியே விட்டுவிடலாம். அகற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு வேறு சிகிச்சைகளும் தேவையில்லை. சிகிச்சை தேவையா? கட்டி உள்ள பகுதியில் வலி உண்டாகிறது, கட்டியின் வளர்ச்சி அதிகரிக்கிறது, நோய்த்தொற்று ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது, தோற்றத்தைக் கெடுக்கிறது என்றால் மட்டும் அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிடலாம். சாதாரணக் கட்டியை ஒருமுறை அகற்றிவிட்டால், அந்த இடத்தில் மறுபடியும் அது வளராது. சிலருக்கு மறுபடியும் அந்த வகை கட்டி வேறு இடத்தில் வளரலாம். அது அவரவர் உடல் வாகை பொறுத்தது. கட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது, கட்டிக்கு அருகில் உள்ள பகுதியில் நெறி கட்டுகிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய்க் கட்டியா, இல்லையா எனப் பரிசோதித்துத் தெரிந்து, அதற்கேற்பச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.