Tuesday 21 January 2020

மூன்று முறை பல் துலக்குங்கள்..


  • தினமும் மூன்று தடவைக்கு மேல் பல் துலக்குவது ஒழுங்கற்ற இதய துடிப்பு, இதய செயலிழப்பு போன்ற அபாயங்களை குறைக்க வழிவகை செய்யும் என்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
  • தென்கொரியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 286 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் 40 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள். 
  • அவர்களின் உயரம், எடை, தாக்கிய நோய்கள், வாழ்க்கை முறை, வாய்வழி சுகாதாரம் உள்ளிட்ட தகவல்களை பரிசோதனை மூலம் சேகரித்திருக்கிறார்கள். 
  • தினமும் அவர்கள் பல் துலக்குவதையும் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள். பற்களை எந்த அளவுக்கு தூய்மையாக பராமரிக்கிறார்கள், வாய் சுகாதாரம் பற்றி எந்த அளவுக்கு விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
  • 10 ஆண்டுகள் அவர்களை பரிசோதனை செய்து வந்ததில் முறையாக பல் துலக்காதவர்களில் 4,911 பேர் ஒழுங்கற்ற இதய துடிப்பு பிரச்சினைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. 
  • அதுபோல் 7,971 பேர் இதய செயலிழப்பு பாதிப்பையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். 
  • அதேவேளையில் பல் துலக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியவர்களுக்கு பாதிப்பு ஏற்படாததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • தினமும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பல் துலக்குபவர்களுக்கு ஒழுங்கற்ற இதய துடிப்பு ஏற்படுவதற்கான அபாயம் 10 சதவீதம் குறைவாக இருக்கிறது. 
  • அதுபோல் இதயம் செயலிழப்புக்கான அபாயமும் 12 சதவீதம் குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
  • இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட தென்கொரியாவில் உள்ள ஈவா பெண்கள் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி டே-ஜின் சாங், ‘‘நாங்கள் ஒரு பெரிய குழுவை நீண்ட காலமாக ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தோம். எங்களது முயற்சிக்கு தக்க பலன் கிடைத்துள்ளது’’ என்கிறார்.

No comments: