Sunday 28 January 2018

வாய்ப்புண் தொல்லை இனி இல்லை

வாய்ப்புண் தொந்தரவால் அவதிப்படாதவர் இருக்க முடியாது. வாய்ப்புண் ஏன் வருகிறது எப்படி வருகிறது என தெரியாமல், பலர் கஷ்டப்படுகின்றனர். வாய்புண் வருவதற்கான காரணத்தையும், அதற்கான தீர்வை தெரிந்து கொண்டால், வாய்ப்புண் வருவதை தடுக்கலாம். வாய் பகுதியிலுள்ள, மென்மையான தோல் பகுதியில் வாய்ப்புண் ஏற்படுகிறது. வாய்புண் வந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

எந்த உணவையும், இயல்பாக சாப்பிட முடியாது. புண் உள்ள பகுதியில் உணவுப்பொருட்கள் படும் போது வலியும், எரிச்சலும் ஏற்படும்.
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியா தாக்குதலால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாக உள்ளவர்களை, இது அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, வைட்டமின் பி12, இரும்புச் சத்து மற்றும் போலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகிறது.

வாய்ப்புண் வருவது ஏன்?
மருந்து மாத்திரைகள் அதிகம் உண்பவர்களுக்கு வாய்ப்புண் வரும். ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக, மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கிறது. பிரசவ காலங்களிலும், இறுதி மாதவிடாயின் போதும், ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், பெண்களுக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறது. முரட்டுத்தனமாக பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷை கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும், மெல்லியக் காயங்கள் மூலமும், வாய்ப்புண் ஏற்படும்.

வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள், வாய்ப்புண்ணை உருவாக்கும். அதிகம் உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வாய்ப்புண் வரக்காரணமாகிறது. மேலும், முட்டை, காபி, சீஸ், ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை, அதிகம் சாப்பிடுதல், புகைப்பிடித்தல் ஆகியவையும் காரணமாகிறது. சில தரம் குறைந்த பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் வரும்.

தடுக்கும் வழிகள்: சில வழி முறைகளை கடைப்பிடிப்பது மூலம், வாய்புண் வராமல் தடுக்கலாம். நல்ல உணவுப் பழக்கம், மிதமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பது, நல்ல தூக்கம் ஓய்வு மூலம் தடுக்கலாம். மேலும், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்க கூடிய, ஆன்ட்டி பாக்டீரியா மவுத்வாஷ் கொண்டு, வாயைக் கொப்பளிப்பதன் மூலம் தடுக்கலாம். தினமும் காலையிலும், இரவு உறங்குவதற்கு முன் பல் துலக்குவதன் மூலம் வாய்ப்புண்ணை தடுக்கலாம்.

என்ன மருந்து?
தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் ஆகியவற்றை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் புண் ஆறும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு, எலுமிச்சை சாற்றைக் கலந்து கொப்பளித்தால் வலி நீங்கும். மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின், மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில், குணமாகி விட வேண்டும். மேலும், வாய்ப்புண் தொடர்ந்தால், உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

No comments: