Sunday 28 January 2018

இரவில் பல் துலக்குவதன் பலன்கள்

இரவில் பல் துலக்குவதன் பலன்கள் | காலையில் தவிர இரவில் பல் துலக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இல்லை. ஆனால் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் பாதுகாக்கப்பட, இரவிலும் பற்களைத் துலக்குங்கள். தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும்போது, பற்காறைகள் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம். இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். இதற்குக் காரணம், உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்திருப்பதுதான். எனவே தவறாமல் பற்களைத் துலக்குங்கள். படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்புகொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பாக்டீரியாக்கள் ரத்த நாளங்களில் நுழைந்து, தமனிகளைப் பாதிக்கும். அதன் விளைவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இரவில் பல் துலக்குவதற்கு ஆகும் நேரம் பத்து நிமிடம்தான். ஆனால் அதனால் உண்டாகும் நற்பலன்களைப் பார்த்து அப்பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

No comments: