Saturday, 7 January 2017

பனிக்காலத்தில் பாதங்களை பராமரிக்க டிப்ஸ்



பனிக் காலத்தில் நேரடியாகப் பாதிக்கப்படும் உறுப்பு, சருமம். முகம், கழுத்து, கைகளில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க க்ரீம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால், நாம் பராமரிக்கத்தவறும் உறுப்பு, கால்கள். இதனால், கால்களில் வெடிப்பு, சுருக்கங்கள், ஈரம், துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தப்படுத்தும் மற்றும் பராமரிப்பு முறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை 1:


கால்களில் நகப்பூச்சு இருந்தால் அதை நீக்கிவிட்டு, அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில், 2 டீஸ்பூன் எப்சம் உப்பு (Epsom salt), ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டு, 20 நிமிடங்கள் வரை காலை வைத்திருக்க வேண்டும். பின்னர் மென்மையான துண்டால் கால்களை ஒத்தி எடுக்க வேண்டும்.


வழிமுறை 2:


கடையில் கிடைக்கும் பியுமிஸ் கல் (Pumice stone) அல்லது சாஃப்ட் பிரஷ் வாங்கி கால்களில் பிரஷ் செய்தால், இறந்த செல்கள் நீங்கிவிடும்.


வழிமுறை 3:


கால்களைச் சுத்தம் செய்த பிறகு, நல்ல தரமான மாய்ஸ்சரைசர் க்ரீமை கால்களில் தடவலாம். கால்களைச் சுத்தம் செய்ததுபோல, கைகளையும் சுத்தம் செய்யலாம்.


ஆரோக்கியமாகப் பராமரிக்க…


10 நாட்களுக்கு ஒரு முறையாவது நகங்களை வெட்டிப் பராமரிக்க வேண்டும். நகத்தை சதை தெரியும் வரை ஒட்ட வெட்டாமல், சிறிய அளவில் நகம் இருப்பதுபோல வெட்டலாம். முடிந்தவரை அவரவருக்கு எனப் பிரத்யேக நகவெட்டிகளை வைத்திருப்பது நல்லது.


பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நனைத்த பஞ்சை, கால் இடுக்குகளில் 10 நிமிடங்கள் வரை வைக்கலாம். அதுபோல எண்ணெயை நகங்களிலும் தடவலாம்.நீர் நிறைந்த பிளாஸ்டிக் பாட்டிலைக் கீழே வைத்து, கால்களை அதன் மேல் வைத்து உருட்டியபடி, ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும்.கால்களில் கறுப்பாக அடையாளம் விழுகிற மாதிரியான செருப்புகள், ஷூக்களைத் தவிர்க்கலாம்.தரமான நகப்பூச்சுகள், அசிடோன் ஃப்ரீ (Acetone free) ரிமூவர்களைப் பயன்படுத்துவது நல்லது.

ஹோட்டலில் சாப்பிடாதீங்க அவ்வளுவுதான் |

ஹோட்டலில் சாப்பிடாதீங்க அவ்வளுவுதான் | எப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் பலரும் ஹோட்டல் உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் வீட்டு உணவை விட ஹோட்டல் உணவு சுவையாக இருக்கும் என்பதும் ஒரு காரணம், ஆனால் அதன் பின்விளைவுகள் உங்களுக்கு தெரியுமா?

* பெரும்பாலான ஹோட்டல் உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகம் இருக்கும், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் பல்வேறு உபாதைகள் வரக்கூடும்.

* மேலும் அங்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள் நன்கு சுத்தம் செய்யப்பட்டதாக இருக்காது, இதனை உட்கொள்ளும் போது வயிற்றில் குறிப்பாக குடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும்.

* இதேபோன்று கடைகளின் பயன்படுத்தப்படும் எண்ணெயையும் குறிப்பிடலாம், பலமுறை ஒரே எண்ணெயை பயன்படுத்தினால் அதன் எதிர்மறை விளைவுகள் அதிகம்.

* குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல் நலம், ஏனெனில் இறைச்சிகளை நன்றாக சுத்தம் செய்தார்களா என்பது நமக்கு தெரியாது, இதனால் அதிலுள்ள கிருமிகள் முழுமையாக நீங்காமல் நம்மை பாடாய்படுத்திவிடும்.

* மேலும் எண்ணெய்களில் இருக்கும் ட்ரான்ஸ் பேட்டி ஃஆசிட்டுகள் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

* உடல் ஆரோக்கியத்தை விருப்புபவர்கள் ருசியாக இருக்கும் ஓட்டல் உணவுகளை விட ஆரோக்கியம் நிறைந்த வீட்டு உணவுகளை சிறந்தது என்பதை மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.

குளிர்காலத்தில் தயிர்சாதம் சாப்பிடலாமா?



குளிர்காலத்தில் தயிர்சாதம் சாப்பிடலாமா? | எனக்குத் தயிர்சாதம் என்றால் மிகவும் இஷ்டம். "குளிர்காலத்திலும், பனிக்காலத்திலும் தயிர்சாதம் சாப்பிடக் கூடாது. சளி பிடித்துவிடும்" என்கிறார் என் அம்மா. இது உண்மையா? இது உண்மையில்லை. தயிர்சாதம் என்றாலே 'அது ஏழைகளின் உணவு' என்று இளக்காரமாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும் அடைமழைக் காலம், குளிர்காலம், பனிக்காலம் வந்துவிட்டால், "இந்த கிளைமேட்ல யாராவது தயிர்சாதம் சாப்பிடுவாங்களா? சளி பிடிச்சுக்காதா?" என்று தோளைக் குலுக்கித் தயிர் சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். பாலில் தயாரிக்கப்படும் உணவில் தயிருக்கு முக்கிய இடமுண்டு. பாலைக் காய்ச்சி, குளிர வைத்து, உறை ஊற்றிச் சில மணி நேரம் காத்திருந்தால், அது தயிராகிவிடுகிறது. பாலைக் காய்ச்சும்போது அதிலுள்ள கிருமிகள் இறந்துவிடுகின்றன. எனவே, தயிரில் தீங்கு செய்யும் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை; தயிர் சாப்பிடுவதால் சளி பிடிக்கவும் வாய்ப்பில்லை. பால் தயிராகிறபோது, அது எளிதில் செரிமானமடைகிறது. பால் உறையில் இருக்கும் லாக்டிக் அமில பாக்டீரியா பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றிவிடுகிறது. இந்த அமிலமும் பாலில் உள்ள கேசீன் எனும் புரதப்பொருள், கால்சியம் தாதுவும் வினைபுரிகிறபோது, பால் தயிராக மாறுகிறது. இந்த வேதிவினைகள் எல்லாமே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பல வழிகளில் உதவுகின்றன என்பதுதான் அறிவியல் சொல்லும் உண்மை. புரோபயாடிக் உணவு! தயிர் ஒரு 'புரோபயாடிக் உணவு'(Probiotic food) என்கிறோம். அப்படி என்றால் என்ன? பாக்டீரியாவில் நன்மை செய்யும் பாக்டீரியா, தீமை செய்யும் பாக்டீரியா என இரண்டு வகை உண்டு. இயற்கையாகவே நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள உணவை `புரோபயாட்டிக் உணவு' என்கிறோம். நம் உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிற பாக்டீரியா வகைகளும் ஈஸ்ட் வகைகளும் தயிரில் அதிகமுள்ளன. இவை உணவுச் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுகின்றன. நம் செரிமான மண்டலத் தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட நன்மை செய்யும் பாக்டீரியா வகைகள் உள்ளன. இவை உணவைச் செரிப்பதற்குப் பெரிதும் உதவுவதுடன், உணவுக் கழிவை முறைப்படி வெளியேற்றவும் உதவுகின்றன. இந்த நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும்போது செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைச் சாப்பிடும்போது, இந்த நல்ல பாக்டீரியா வகைகள் அழிந்துபோகின்றன. எனவேதான், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைச் சாப்பிட வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. தயிர் போன்ற புரோபயாடிக் உணவின் சத்து முழுவதுமாகக் குடலில் உறிஞ்சப்பட வேண்டுமானால், குடலில் நன்மை செய்யும் பாக்டீரியா வகைகள் ஓரளவுக்காவது இருக்க வேண்டும். சத்துள்ள உணவு தயிர்! தயிர்ச் சத்து மிகுந்துள்ள ஓர் உணவுப்பொருள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தயிரை அப்படியே சாப்பிடலாம். அல்லது தயிரில் மிகக் குறைந்த அளவு உப்பு போட்டுச் சாப்பிடலாம்; அதிகமில்லாமல் சர்க்கரை போட்டு `லஸ்ஸி'யாகச் செய்தும் சாப்பிடலாம். 100 கிராம் தயிரில் 4 கிராம் கொழுப்பு, 3.2 கிராம் புரதம், 3 கிராம் மாவுச்சத்து, 150 மில்லி கிராம் கால்சியம், 0.2 மி.கி. இரும்புச் சத்து போன்றவை உள்ளன. தயிரில் கொழுப்பும் புரதமும் பாலில் இருக்கும் அளவேதான் இருக்கின்றன. ஆனால், வைட்டமின் ஏ, வைட்டமின் ரிபோபிளேவின் அளவுகள் மட்டும் பாலில் உள்ளதைவிட அதிகமாக உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மிதமான அளவில் உள்ளன. 100 கிராம் தயிர் 60 கலோரிகள் ஆற்றலைக் கொடுக்கிறது. நோய்கள் விலகும்! வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிற கெட்ட பாக்டீரியா வகைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல், இந்த நன்மை செய்யும் பாக்டீரியா வகைகளுக்கு உண்டு என்பதால், வயிற்றுப்போக்கு நோயாளிகளுக்குத் தயிர் மிகச் சிறந்த உணவு. இதேபோல் இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் தயிர் சிறந்த உணவு. இரைப்பையில் சுரக்கிற அதீத அமிலத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஆற்றல் தயிருக்கு உண்டு என்பதுதான் இதற்குக் காரணம். பால் ஒவ்வாமை உள்ளவர்கள்கூடத் தயிர் சாப்பிட்டால் உடல் அதை ஏற்றுக்கொள்ளும். தயிரில் ஃபோலிக் அமிலம் மிகுதியாக உள்ளதால், கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்றது. தயிர், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதாகவும், குடல் புற்று நோயைத் தடுப்பதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. குளிர்ச்சிக்கு என்ன தொடர்பு? குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று காலங்காலமாக ஏன் சொல்லிவருகிறார்கள்? சளிப் பிரச்சினை தயிரால் ஏற்படுவதில்லை. சிலருக்குக் குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிட்டால், உடல் அதை ஏற்றுக்கொள்ளாது. அந்த மாதிரியான உடலமைப்பைக் கொண்டவர்களுக்குக் குளிர்ச்சியாகத் தயிரைச் சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படலாம். இவர்கள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தயிரை எடுத்து, உடனே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்; சாதாரண அறை வெப்ப நிலையில் தயிரைச் சாப்பிடலாம். காலை மற்றும் இரவு உணவுக்குப் பதிலாக மதிய உணவுடன் தயிர்சாதத்தைச் சாப்பிடலாம். உடல் பருமன், நீரிழிவு நோய் கொண்டவர்கள் கொழுப்பைத் தவிர்ப்பதற்குத் தயிர்சாதத்துக்குப் பதிலாக, மோர் சாதம் சாப்பிடலாம். கட்டுரையாளர், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com

35 வயதை கடந்துவிட்டால்...

35 வயதை கடந்துவிட்டால்...| வயது கூடக்கூட நாம் ஆரோக்கியத்தில் கொள்ளும் அக்கறையும் கூட வேண்டும். குறிப்பாக, 35 வயதைக் கடந்தவர்கள் தமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் வைக்க வேண்டும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
பொதுவாக 35 வயது வரை உணவில் பெரிதாக கட்டுப்பாடு வைத்துக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால் 35 வயதை கடந்தபின் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
அதோடு, சீரான உணவுப் பழக்கவழக்கங்களும், ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகளும்தான் நோய் அண்டவிடாமல் தடுக்கும்.
முக்கியமாக, தற்போது பொதுவான நோயாகி வரும் சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க, உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச், சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ்வரகு போன்ற தானிய வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் வெல்லம், கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. நெய்யை கட்டுப்பாட்டோடு பயன்படுத்த வேண்டும்.
தினமும் காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோய் தவிர மற்ற நோய்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும்.
அத்துடன், ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம்.
அதேபோல, வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருந்தால், தினம் ஒரு டம்ளர் அருகம்புல் சாறு அருந்துவதும் பலன் தரும்.

சிறுநீரகத்தைக் காக்கும் பழங்கள்

சிறுநீரகத்தைக் காக்கும் பழங்கள் | நமது உடலில் உள்ள மிக முக்கியமான சுத்திகரிப்பு உறுப்பு, சிறுநீரகம். தற்போது, சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால், சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
அந்தப் பழங்கள்...
செர்ரி: செர்ரி பழத்தில் பைட்டோகெமிக் கல்கள் மற்றும் கொழுப்பு ஏறாமல் தடுக்கும் வேதிப்பொருட்கள் உள்ளன. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பான சிறுநீரக வீக்கம் ஏற் படாமல் இது தடுக் கிறது.
ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. இப்பழம் சிவப்பு நிறமாக இருக்க காரணம், 'ஆந்தோசயனின்' என்ற வேதிப்பொருள்தான். இது உடலில் உள்ள செல்களைப் பாதுகாப்பதுடன், சிறுநீரகத்தில் விஷத்தன்மை ஏற்படாமலும் காக்கிறது.
ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன், சிறுநீரகம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
சிவப்புத் திராட்சை: இப்பழத்தில் பிளேவனாய்டு என்னும் வேதிப்பொருள் இருப்பதால் அதிலிருந்து வெளிவரும் நைட்ரிக் ஆக்சைடு, உடலில் உள்ள தசைகளின் ரத்த ஓட்டத்தையும் சிறுநீரக ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்கிறது.
தர்ப்பூசணி: தர்ப் பூசணி பழத்தில் பொதுவாகவே நீர் தன்மை அதிகம் உள்ளது. எனவே இதைச் சாப்பிடுவதால் சிறுநீர் பிரச்சினை இல்லாமல் கழியும். ரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் அதிகரித்தால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
பப்பாளி: இப்பழத்தில், உடலுக்கு வலுச் சேர்க்கும் சத்துகளும், பல்வேறு வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நன்மை பயக்கும்.
கிரான்பெர்ரி: 'குருதிநெல்லி' என்று தமிழில் குறிப்பிடப்படும் 'கிரான்பெர்ரி' பழத்தில், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுவியாதியை தடுக்கும் சிறப்புத் தன்மை உள்ளது. அதோடு இப்பழம், இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.