Saturday 23 June 2018

அதிக சத்துள்ளது வேர்க்கடலை

நிலக்கடலை, மணிலா கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிக அளவு இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. மேலும் உடம்புக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகமாக உள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எவ்விதப் பயமுமின்றி அளவாகச் சாப்பிடலாம். வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத் திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப் படுத்தும் தன்மை உள்ளது. வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி-3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானவை. இந்த சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக இருப்பதோடு, ரத்த அழுத்தமும் குறையும். வேர்க்கடலையிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருட்கள், தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும். வேர்க்கடலையை பச்சையாகச் சாப்பிடுவதைவிட, அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் இதை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையை தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில் தான் அதிக அளவு சத்துகள் உள்ளன. வேர்க்கடலையில் செய்யப்படும் கடலை மிட்டாயும் நல்ல சத்துணவு என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விச்சோலை - kalvisolai health tips

No comments: