Saturday 16 December 2017

மூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து

மூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து | இந்தக் குளிர் காலத்தில், காற்றுப் புகாமல் மூடிய அறைக்குள் தூங்க விரும்புவது இயல்பு. ஆனால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது. தூங்கும் அறையில் காற்றோட்டம் மிகவும் அவசியம், காற்றோட்டம் இல்லாவிட்டால் அபாயம் அதிகம் என்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் கூறுகின்றனர். குளிர் காலத்தில் சிலர் மூடிய அறைக்குள் உறங்குவது மட்டுமல்ல, சூட்டை உண்டாக்குவதற்காக கரி, மரத்துண்டு போன்றவற்றை எரிக்கும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். அவற்றில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, அறையை விட்டு வெளியேற வசதியின்றி, தூங்குபவர் களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும். ஒரு காரில் எஞ்சினை மட்டும் ஓடவிட்டு, கண்ணாடியை ஏற்றிவிட்டு உள்ளே உட்கார்ந்திருந்தாலும் மூச்சுத்திணறல் ஏற்படும். மூடிய அறைக்குள் வெப்பத்தை உருவாக்கும் சாதனங்களைப் பயன்படுத்தும்போது, காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்துகொள்வது உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும். குளிர்காலத்தில், புளோயர், ஹீட்டர் மற்றும் கரி அடுப்பு போன்றவற்றின் முன் அமர்ந்து குளிர் காய்வதால் தோலில் வறட்சித்தன்மை ஏற்படும். அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கு இது அதிக பாதிப்பை அதிகப்படுத்தும். இதைத்தவிர, தலையில் பொடுகுத்தொல்லையும் ஏற்படும், ஏற்கனவே பொடுகுப் பிரச்சினை இருப்பவர்களுக்கு அது மிகவும் அதிகமாகும். உஷ்ணம் ஏற்படுத்தும் உபகரணங்கள், சருமத்தின் இயற்கை ஈரத்தன்மையை இழக்கச்செய்கின்றன. கரி அல்லது மரத்துண்டுகள் எரியும் இடத்தில் காற்றோட்டத்துக்குத் தேவையான வசதிகள் இல்லையென்றால், அங்கு இருப்பவர்கள் பிராணவாயுவுடன் சேர்த்து கார்பன் மோனோக்சைடையும் சுவாசிக்கின்றனர். கார்பன் மோனோக்சைடு, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் சேர்ந்து, கார்பாக்சிஹீமோகுளோபினாக மாறிவிடுகிறது. உண்மையில், ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த செல்கள், பிராணவாயுவை உட்கிரகிப்பதற்கு முன்னரே கார்பன் மோனாக்சைடுடன் இணைகின்றன. பொதுவாகவே, கார்பன் மோனாக்சைடு மிகவும் அதிகமாக இருக்கும் இடத்தில் ஒருவர் இருந்தால், அவரின் ரத்தத்தில் பிராணவாயுவைவிட கார்பன் மோனாக்சைடு விரைவாகச் சேரும். இதனால் உடலின் பிற பாகங்களுக்குச் செல்ல வேண்டிய பிராணவாயுவின் அளவு குறைகிறது. இதனால் ஹைபோக்சியா என்ற நிலைமை உருவாகி, திசுக்கள் அழிக்கப்படுவதோடு, மரண அபாய அளவும் அதிகரிக்கிறது. பொதுவாக நாம் இருக்கின்ற இடத்திலும், சுவாசிக்கின்ற காற்றிலும் நச்சுத்தன்மை இருக்கிறதா என்பதை அறிவது மிகவும் முக்கியம். காற்றில் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகமாக இருந்தால், தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். இவற்றைத்தவிர, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதோடு கண்களில் எரிச்சலும் தோன்றும். ஆக மொத்தம், குளிர்காலத்தில் வெப்பத்தைக் கொடுக்கும் சாதனங்களைப் பயன்படுத்தினால், அந்த இடத்தில் காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். மூடப்பட்ட அறைகளில் நிலக்கரி அல்லது மரத்துண்டுகளை எரிக்கக் கூடாது. ஹீட்டர் அல்லது புளோயர் பயன்படுத்தினாலும் கவனம் தேவை. அவற்றை அதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்துதான். சமீபத்தில் டெல்லியில், மூடிய வேனுக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். வேனுக்குள் குளிரை ஏற்படுத்துவதற்காக அவர்கள் தந்தூரி அடுப்பைப் பயன்படுத்தியதுதான் இந்தப் பரிதாபத்துக்குக் காரணம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு அவர்கள் கதவுகளை திறந்துவைத்திருந்தால், உயிர் பிழைத்திருக்க முடியும். குளிர் வேளையில் வெப்பமூட்டும் வசதிகளை நாடுவதில் பிழையில்லை, ஆனால் அதில் எச்சரிக்கை தேவை என்பதே நிபுணர்கள் கூறும் கருத்து.