Sunday 14 October 2018

கருப்பட்டி வெல்லத்தின் சிறப்புகள்

கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள். மேலுக்கு சுகமில்லாதபோது கொஞ்சம் கருப்பட்டியை தட்டி போட்டு காபி தூள் கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மேல் வலி எல்லாம் குறைஞ்சு சுறுசுறுப்பாகிவிடுவர். அந்தளவிற்கு கிராமத்து பகுதிகளில் கருப்பட்டி உபயோகம் பெரும்பாலும் காபி போடத்தான் பயன்பட்டது. அதுபோல் சில பகுதிகளில் இனிப்பு பலகாரங்கள் செய்ய கருப்பட்டி மட்டுமே பயன்படுத்துபவர்களும் உள்ளனர். நாம் தமிழ்நாட்டு மக்களோடு ஒன்றிணைந்த கருப்பட்டி பயன்பாடு சர்க்கரை வந்த பிறகு பெரும்பாலும் குறைந்து விட்டது. தற்போது மீண்டும் மக்களிடம் கருப்பட்டி பயன்பாடு அதிகரித்து உள்ளதன் காரணமாக அது குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கருப்பட்டி எனும் பனை வெல்லம் பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இதனை பனை வெல்லம், பனாட்டு, பனை அட்டு என்று சொல்வார்கள். தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் பனை மரங்கள் மூலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். பங்குனி, சித்திரை மாதங்கள் பதநீர் இறக்குவது அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் கருப்பட்டி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. வட்ட வடிவிலான இரும்பு பாத்திரமே கருப்பட்டி காய்ச்ச பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தாச்சு என்று பெயர். இதில் சுமார் 15 லிட்டர் பதநீரை ஊற்றி இரண்டு மணி நேரம் கிளறி பதம் வந்ததும் எடுத்து அச்சுகளில் வார்த்து எடுத்தால் அதிகபட்சம் 3 கிலோ அளவிற்கே கருப்பட்டி கிடைக்கும். இதன் காரணமாக கருப்பட்டி உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கே மேற்கொள்ளப்படும். ஆனால் ஆண்டு முழுவதும் சில்லு கருப்பட்டியின் தேவையுள்ள காரணத்தால் அதில் ஏராளமான கலப்படங்கள் செய்து விற்பனைச் செய்யப்படுகின்றன. எனவே, கருப்பட்டி வாங்கும்போது நல்ல தரமான கருப்பட்டி தானா என்பதை கண்டறிந்து வாங்குதல் வேண்டும். தரமான கருப்பட்டி கண்டறியும் முறைகள் நல்ல தரமான கருப்பட்டி என்பது சீக்கிரமாக கரையாது. தண்ணீரில் ஒரு துண்டு கருப்பட்டியை போட்டால் அது முழுதாக கரைய ஒன்றரை மணி நேரம் ஆகும். போலியான கருப்பட்டி என்பது சீக்கிரமே கரைந்து விடும். கருப்பட்டியை நாவில் வைத்து சுவைக்கும்போது கரிப்பு தன்மையுடன் கூடிய இனிப்பு சுவையாக இருக்கும். அதுபோல் கருப்பட்டியில் உட்புறப் பகுதி என்பது கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலானதாக இருக்கும். இதுவே பளபளப்பாக காட்சி தந்தால் அது போலி கருப்பட்டி என்பதாகும். அதுபோல் விவரமறிந்தவர்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து சோதித்து பார்த்து வாங்குவது நலம். ஏனென்றால் உற்பத்தி குறைவு, பனை மரம் இன்மை போன்றவைகளால் சற்று விலை கூடுதலாக தான் கருப்பட்டி கிடைக்கும். கருப்பட்டியில் மருத்துவ குணங்கள் கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது. கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது. கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது. கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது. கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும்போது நல்ல பசி ஏற்படுகிறது. குழந்தைகள் உணவு சாப்பிடாடல் அடம் பிடிக்கும்போது சீரக கருப்பட்டி உருண்டையை செய்து கொடுத்து விடுங்கள் பிறகு குழந்தைகள் நன்றாக சாப்பிட ஆரம்பித்து விடும். காலசூழலில் கருப்பட்டி பயன்பாடு குறைந்து விட்ட போதிலும் தற்போது மீண்டும் கருப்பட்டி பலகாரங்கள் பல கடைகளில் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

கல்விச்சோலை - kalvisolai health tips

No comments: